Wednesday, November 30, 2016

காவிரியே களித்தோடிவா ...!!!



தடைபோட்டுத் தடுத்தாலும் தமிழ்நாட்டின் வளம்காக்கத் 
****தயங்காமல் தவழ்ந்தோடிவா ! 
இடையூறு கொடுத்தாலும் இமைப்போதும் அசராமல் 
***இயல்பாக எதிர்த்தோடிவா ! 
விடைகூறி விரைவாக விவசாயம் செழித்தோங்க 
****விருப்போடு சிரித்தோடிவா ! 
புடைசூழ வருவோரின் புரியாத பகைமாற்றிப் 
****பொலிவோடு புரண்டோடிவா ! 

அடைத்தாலும் மறித்தாலும் அடங்காமல் திமிராக 
****அணைப்போரை இனங்காணவா ! 
மடைதாவி விளையாடி மருண்டோடும் கயல்மீனை 
****மறவாமல் உடன்கூட்டிவா ! 
நடைபோட்டு மிடுக்காக நதியேயுன் எழிலோடு 
****நலம்வாழக் குதித்தோடிவா ! 
கடைத்தேற வழிபார்த்து கருவாயுன் கவிகேட்டுக் 
****கனிவோடு களித்தாடிவா ....!!!

என்னுயிர் நீதானே ....!!!

உன்னையே எண்ணினேன் நீலவண்ணா 
****உலகமே நீயென வாழ்ந்திருந்தேன் !
அன்பினால் இறைஞ்சினேன் கழல்பணிந்து 
****அருகினில் நீவர ஏங்கிநின்றேன் !
இன்பமோ துன்பமோ  எதுவரினும் 
****இனியவன் உன்னுடன் ஏற்றிடுவேன் !
மின்னலாய் மறைந்தது மேன்கண்ணா ?
****விரைந்திடு என்னுயிர் துடிக்குதடா !

மூடிய திரைதனை நீக்கிவிடு 
****முன்பனி வாட்டுமுன் வந்துவிடு !
தோடியில் பாடினேன் கேட்கலையோ
****தோகையென் இன்குரல் ஈர்க்கலையோ ?
தேடினேன் நதிக்கரை வழியெங்கும் 
****தேகமும் அசதியில் சோர்ந்ததடா !
வாடிய பயிரென வதங்கிவிட்டேன் 
****மாயனே மயக்கிட வாராயோ ?

கோதையின் நெஞ்சமும் அறியாயோ 
****கோபியர் கொஞ்சிடக் களித்தாயோ ?
கீதையின் நாயகா கெஞ்சுகிறேன் 
****கீதமுன் காதிலே கேட்கலையோ ?
பாதையில் பார்வையைப் பதித்தேனே 
****பாவியென் நிலையினைப் பாராயோ ?
பேதையைத் தவித்திட வைப்பாயோ 
****பேறென அணைத்துக் கொள்வாயோ ?

ஊதிடும் குழலிசை கேளாமல் 
****ஊனமாய் ஆனதே என்னிதயம் !
சேதியை யாரிடம் சொல்லுவதோ 
****சேடியும் இவ்விடம் காணலையே !
சோதியில் நின்முகம்  தெரிந்ததடா 
****சொர்க்கமாய்க் காட்சியும் இனித்ததடா !
காதிலுன் நாமமே ஒலிக்குதடா 
****கண்ணனே என்னுயிர் நீதானே !



Tuesday, November 29, 2016

நதிக்கரையினிலே ....!!!

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும் 
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும் 
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும் 
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் ! 

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும் 
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும் 
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும் 
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ? 

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும் 
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும் 
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும் 
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே 

நதிக்கரை ஞாபகங்கள் ....!!!


வளைந்துசெலும் வழியெங்கும் வளத்தைக் கூட்டும் 
****வனப்பினிலே அகங்குளிர வதனம் பூக்கும் ! 
களைப்பகற்றத் தென்றலுடன் கலந்து வந்து 
****காலடியை முத்தமிட்டுக் காதல் சொல்லும் ! 
திளைத்தமனம் புத்துணர்வால் தெளிவைப் பெற்றுச் 
****செயலாற்ற நாள்முழுதும் சிறப்பாய்ச் செல்லும் ! 
விளைந்திருக்கும் நெற்கதிர்கள் வெட்கம் மின்ன 
****விருப்பமுடன் தலையசைத்து நன்றி கூறும் ...!!! 

மதிவந்து முகம் பார்த்து மயங்கி நிற்க 
****மகிழ்வுடனே நதிநீரும் மையல் கொள்ளும் ! 
குதித்தோடிக் கயலுடனே குலவும் கெண்டை 
****கொஞ்சிவிளை யாடிடுமே கூடி ஒன்றாய் ! 
நதியோடு நினைவலையில் நனைந்து மூழ்க 
****நடந்ததெலாம் மனத்திரையில் நடன மாடும் ! 
புதிராகப் போயிற்றே புனலில் போக்கு 
****பொலிவிழந்தக் காரணத்தைப் புரட்டு முள்ளம் ...!!! 

செழிப்பான நதியெங்கே தேடிப் பார்க்கும் 
****சிறுவர்தம் மணல்வீடாய்ச் சிதைய லாச்சோ ? 
கழிவுகளால் சீர்கெட்டுக் கசடாய் மாறிக் 
****கருவேலம் படர்ந்துள்ளக் காடாய்க் கண்டோம் ! 
வழித்தெடுத்து மணற்கொள்ளை வகையாய்ச் செய்யும் 
****வஞ்சகரால் விவசாயி வாழ்வும் மங்கும் ! 
அழிந்துவரும் நதிவளத்தை அரசும் காத்து 
****அனைத்துநலத் திட்டங்களும் அளித்தால் நன்றே ...!!! 

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

நிலவும் நானும் ....!!!


நிலவுடன் நானும் தோழமை யோடு 
****நினைவுகள் யாவையும் பகிர்ந்தேன் !
மலர்ந்தவள் வானில் வந்திடும் தருணம் 
****மகிழ்வுடன் நெஞ்சமும் குளிர்ந்தேன் !
உலகமே வியக்கும் வெண்ணில வவளை 
****உரிமையாய் உறவெனக் கொண்டேன் !
பலகணி வழியே பாத்தவ ளழகைப் 
****பருகியே கவிதையும் வனைந்தேன் !

மயக்கிடும் அந்திப் பொழுதினில் மெல்ல 
****மதிமுகம் கண்டதும் சிலிர்த்தேன் !
வியப்புறும் வண்ணம் வடிவினைக் கண்டு 
****விடிந்திடும் வரையிலும் விழித்தேன் !
நயம்பட நாளும் நடந்ததைச் சொல்லி 
****நலமுடன் நட்பினை வளர்த்தேன் !
இயற்கையின் எழிலை அனுதினம் ரசித்தே  
****இறைவனை வந்தனை செய்தேன் !

முகிலினுள் ஒளிந்து முகத்திரை போட்டு 
****முழுவதும் மறைந்ததில் துடித்தேன் !
சகியவள் வெளியே வந்ததும் தானே 
****தனிமையில் புன்னகை புரிந்தேன் !
நெகிழ்வுடன் பேசி நிழலெனத் தொடரும் 
****நிலவுடன் உள்ளமும் கலந்தேன் !
பகிர்ந்திட ஆசை கொண்டத னாலே 
****பழகிய சுகந்தனை வடித்தேன் !

சியாமளா ராஜசேகர் 

தேடு ....!!!


மண்ணுலக வாழ்விற்குப் பொருளைத் தேடு!
***மகிழ்வாகும் இல்வாழ்வு நாளும் ஓடு!
விண்ணுலக வாழ்விற்கோ அருளைத் தேடு!
***வித்தாகு மான்மீக மிதுகண் கூடு!
நுண்ணறிவு பெற்றிடவே குருவைத் தேடு!
***நொந்தமனம் தெளிவுபெற உதவும் ஏடு!
திண்மையுடன் உள்ளமதில் இறையைத் தேடத்
***தீவினைகள் தோற்றோடக் காண்பாய் நெஞ்சே !
சியாமளா ராஜசேகர்

தனிச்சொல் வெண்பா ....!!!

கண்ணுக்கு ளுன்னைவைப்பேன்! காலமெல்லாம் காத்திருப்பேன்! 
எண்ணமெல்லாம் நீயாக ஏங்கிடுவேன்!- கண்ணம்மா ! 
வண்ணப்பா வொன்றை வடிவா யியற்றிடுவேன் 
பண்ணிசைத்துப் பாடிடுவேன் பார் . (1) 

சின்ன இடையினில் சேலை நழுவிடும் 
கன்னக் குழியும் கவிபாடும் - என்னவளின் 
புன்னகை யில்மனம் பூத்துக் குலுங்கிடும் 
பொன்னொளிர் மேனி பொலிவு . (2) 


தனிச்சொல் வெண்பா 
``````````````````````````````````` 
தனிச்சொல், வெண்பாவின் நான்கு அடிகளுக்கும் பொருந்திப் பொருள்தரவேண்டும்!