Tuesday, October 13, 2015

யாப்பதன் மேன்மை காப்போம் !

பாவலர் பயிற்சி கண்டேன் 
***பைந்தமிழ்ச் சோலை தன்னில் ! 
பூவனச் சுகந்தம் போலே 
***பொற்புடன் மணக்கக் கண்டேன் ! 
ஆவலாய்க் கற்க நானும் 
***அன்புடன் இணைந்து விட்டேன் ! 
யாவரும் பயில வாரீர் 
***யாப்பதன் மேன்மை காப்போம் ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( விளம் + மா + தேமா )

ஒளிரும் தமிழே ....!!!

செந்தமிழ்ப் பாட்டு கேட்டால் 
***செவியொடு குளிரு முள்ளம் ! 
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம் 
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் ! 
சந்தமும் கொஞ்சிக் கூட 
***சந்தன மணமும் தோற்கும் ! 
சுந்தரத் தமிழே என்றும் 
***சொக்கிட வைக்கும் தேனே ! 

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( விளம் + மா + தேமா )

காதலில் விழுந்த பின்னே ...!!

கண்களும் கதைகள் பேசும் 
***காதலில் விழுந்த பின்னே ! 
உண்பதும் மறந்தேப் போகும் 
***உள்ளமும் மிதக்கும் தன்னால் ! 
எண்ணிலாக் கனவு வந்தே 
***இன்பயாழ் மீட்டிச் செல்லும் ! 
வண்ணமாய் யாவும் தோன்றும் 
***வசந்தமாய்ச் சிறக்கும் வாழ்வே ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
(விளம் + மா + தேமா )

மோகனம் பாடும் வண்டே ....!!!



ஆதவன் கிழக்கில் தோன்றி 
***ஆயிரம் கரங்கள் நீட்ட 
காதலாய் அருகில் வந்து 
***கடலலை கொஞ்சிப் பேச 
நாதமும் தென்றல் மீட்ட 
***நாணியேக் கிளைக ளாட 
மோதலில் மொட்டும் பூக்க 
***மோகனம் பாடும் வண்டே !

துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?

கவலை வாட்டி வதைக்கும் போது 
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ? 
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க 
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ? 
அவலங் கண்டும் அமைதி காக்கும் 
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ? 
உவகை பொங்கும் நாளை எண்ணி 
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??

வெட்கியேப் பூத்தனளே ....!!!



கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக் 
***காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
***பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து 
***எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடைத் துவள 
***வெட்கியேப் பூத்தனளே !

     ( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
      ( விளம் மா விளம் மா விளம் காய் )

Wednesday, September 30, 2015

புரிந்திடச் செய்யும் துயர் ...!!!



காந்த விழியால் கவர்ந்திடும் கன்னியின் 
கூந்தல் கலைந்ததேன் கூறு .

பூத்ததேன் நீலம் பொலிவானக் கண்களில் 
காத்திருப்பால் வந்தவினை யோ ? 

கலங்கும் விழியில் கவலையின் ரேகை 
நலமிலை யென்றே சொலும் . 

விரிந்தக் குழலும் வழியும் விழியும் 
புரிந்திடச் செய்யும் துயர் .

வருத்த முறைந்த வனிதை வதனம் 
மெருகு குறைந்து விடும் .