Monday, August 31, 2015

நாயகனும் சொக்கினனே ....!!!



காதோரம் தோடாட கார்கூந்தல் அசைந்தாட 
காலோரம் கொலுசாட கைகளிலே வளையாட 
நாணத்தில் முகஞ்சிவந்து நாயகியின் இதழ்விரிய 
நாவினிக்கும் பாடலிலே நாயகனும் சொக்கினனே !

வெண்மதியே கண்வளராய் ....!!! ( பதினான்கு மண்டில வெண்பா )

1)விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளையால் செண்ணிடுவேன் - பெண்ணவளின் 
வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடு தே .

2)தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் 
வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் - வண்ணமதை
எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் 
நண்ணிடுதே விண்ணுல வும் .

3)வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை - எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளி யாள் .

4)கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ - மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் 
தண்ணளியாள் வெண்மதி யே !

5)வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின்
வண்ணமதை எண்ணிடிலோ  மண்மகளும் -  கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள் 
வெண்மதியே கண்வள ராய் .

6)வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை 
எண்ணிடிலோ  மண்மகளும் கண்குளிர்வாள் - கொண்டலதும் 
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணளியாள் வெண்மதியே 
கண்வளராய் வெண்கவி யில் 

7)செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் - நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளியாள்  வெண்மதியே கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளை யால்   .

8)பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே - விண்ணுலவும்
தண்ணொளியாள்  வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் 
வெண்டளையால்  செண்ணிடு வேன் .

9)வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் 
கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் - தண்ணொளியாள் 
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவ ளின்  .

10)எண்ணிடிலோ மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும்
நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் - வெண்மதியே 
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணம் அதை  .

11)மண்மகளும் கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே 
விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே - கண்வளராய் 
வெண்கவியில் வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் 
வண்ணமதை  எண்ணிடி லோ .

12)கண்குளிர்வாள் கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும்
தண்ணொளியாள் வெண்மதியே கண்வளராய் - வெண்கவியில்
வெண்டளையால்  செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை  
எண்ணிடிலோ மண்மக ளும் .

13)கொண்டலதும் நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் 
வெண்மதியே கண்வளராய் வெண்கவியில் - வெண்டளையால்  
செண்ணிடுவேன் பெண்ணவளின் வண்ணமதை  எண்ணிடிலோ 
மண்மகளும் கண்குளிர் வாள் .

14)நண்ணிடுதே விண்ணுலவும் தண்ணொளியாள் வெண்மதியே
கண்வளராய் வெண்கவியில் வெண்டளையால்  - செண்ணிடுவேன் 
பெண்ணவளின் வண்ணமதை எண்ணிடிலோ மண்மகளும் 
கண்குளிர்வாள் கொண்டல் அது .


இலக்கணக் குறிப்பு 
``````````````````````````````` 

பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!



Tuesday, August 25, 2015

கவ்விடும் உள்ளம் ....!!



பூங்காற்றின் தாலாட்டில் பூவிரியும் சத்தமின்றி 
மாங்குயிலின் பாட்டோ மனம்மயக்கும் !- பைங்கிளியின் 
செவ்வலகும், கொஞ்சிடும் சிங்காரக் கீச்சொலியும் 
கவ்விடு முள்ளங் கவர்ந்து 

நல்லழகு நாயகியாள் ....!!!



ஆனை முகத்தோனை ஆறிரண்டு கைகளுடன் 
பானை வயிறின்றிப் பார்த்தோமே பெண்ணுருவில் 
நல்லழகு நாயகியாள் நல்லருளைத் தந்திடுவாள் 
வல்வினைகள் ஓட்டிடு வாள் .

மிளிர்ந்து மணக்குதே ....!!



விண்ணில் உலவும் மேகம் கண்டால் 
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுமே !

வண்ண நிலவின் வனப்பில் இதயமும் 
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
 
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும் 
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
 
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில் 
வெண்செந் துறையாய் மிளிர்ந்து  மணக்குதே !
 

Monday, August 17, 2015

மும்மண்டில வெண்பா - ( 4 )




செவ்விதழ் முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் 
கொவ்வையின் தித்திப்பும் மங்கிடும் - அவ்விதமே 
பித்தாக்கும் பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் 
புத்தழகில் அங்கமெங்கும் பொன் . 

முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் 
தித்திப்பும் மங்கிடும் அவ்விதமே -பித்தாக்கும் 
பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் 
அங்கமெங்கும் பொன்செவ்வி தழ் . 

செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் தித்திப்பும் 
மங்கிடும் அவ்விதமே பித்தாக்கும் -பொங்கிவரும் 
புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் அங்கமெங்கும் 
பொன்செவ்வி தழ்முத்தத் தில் 

இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!


மன்னனெனைச் சேர் ....!!

மெட்டியொலி மெல்லிசையில் மெய்சிலிர்த்துப் போனேனே 
பட்டுடல் புல்லரிக்கப் பத்தினியே !- வெட்கத்தில் 
முல்லையிதழ் மொட்டவிழும் மோகவலை தான்விரிக்கும் 
செல்லமே மன்னனெனைச் சேர் .