Monday, October 9, 2017

அன்பு !


அன்பால் மனத்தை  நிரப்பிவிட்டால் 
      அமைதி என்றும் குடியிருக்கும் !
அன்பே மனிதம் மலர்விக்கும் 
      அகத்தை மிகவும் அழகாக்கும் !
அன்பால் பகையும் உறவாகும் 
     அதுவே பித்தம் தெளிவாக்கும் !
அன்பே இறைவன் அருட்கொடையாம் 
     அறிந்தால் வாழ்வும் வரமாகும் !

சியாமளா ராஜசேகர் 

Sunday, October 8, 2017

விரைவில் வருவாய் மன்னவனே



சிறகு விரித்தே செலும்வழி எங்கிலும் தேடுகிறேன் 
துறந்தேன் உறக்கம்; துயரால் வதங்கித் துடிதுடித்தேன்   
உறவே! உயிரே! உருகியே உன்னால் உடல்மெலிந்தேன்   !
மறந்தேன் எனையே வருவாய் விரைவிலென்  மன்னவனே ! 

Friday, October 6, 2017

மதுவுக்கு அடிமையானால் ....!!!


சீரிழப்பார் சிறப்பிழப்பார் 
      செயல்மறந்து வெறித்திருப்பார் !
பேரிழப்பார் புகழிழப்பார் 
      பெருமதிப்பைத் தானிழப்பார் !
வீரியமாய்ப் பேசிடுவார் 
      வெறுப்புறவே செய்திடுவார்!
காரியத்தைக் கோட்டைவிட்டுக் 
      கவலையின்றி மிதப்பாரே  !!

நாக்குழற உளறிடுவார்
     நடைதளரச் சோர்ந்திடுவார் !
வாக்குவாதம் வந்துவிட்டால் 
     வார்த்தகளால் குதறிடுவார் !
தூக்கத்தில் பிதற்றிடுவார் 
       சுற்றத்தை மறந்திடுவார் !
சாக்கடையில் கிடந்தாலும் 
      சார்ந்தோரும் மதியாரே  !!

தள்ளாடித் தள்ளாடித் 
     தடுமாறி விழப்போவார் !
கள்ளனைப்போல் பதுங்கித்தான் 
     கதவோரம் நின்றிருப்பார் !
பிள்ளையுடன் தன்மனையாள் 
      பிரியத்தைத் துறந்திருப்பார் !
வெள்ளைமனம் கொண்டிடினும் 
      வேதனைதான் அவர்நிலையே !!

சூழ்நிலையே புரியாமல் 
      சுயபுத்தி இழக்கவைக்கும் !
கீழ்த்தரமாய் மாற்றிவிடும் 
       கேடுகெட்டப் பழக்கமிது !
பாழ்குடியை விட்டுவிட்டால் 
     பண்புடனே சிறப்புறலாம் 
வாழ்வதுவோ சிலகாலம் 
     வளத்துடனே வாழ்வீரே !!!

சியாமளா ராஜசேகர் 
  


Thursday, October 5, 2017

கண்குளிர்ந்தேன் கண்ணனைக் கண்டு ....!!!


மண்ணையுண்ட மாயன் மறைந்துகொள்ள வென்மனம்
புண்ணான தென்றாலும் பொன்னடி யோசையிலே 
கண்குளிர்ந்தேன் கள்வனைக் கண்டு . 

உண்ணாமல் காத்திருந்தேன் ஊர்சுற்றி வந்தானோ 
வண்ணமலர் சூடியவன் வாசத்தில் பூத்தேன்யான் 
கண்ணாரக் கண்ணனைக் கண்டு.

திண்டாட வைப்பினும் செல்லக் குறும்புகளும் 
எண்ணத்தி லென்றும் இனித்திருக்கும் சிங்காரக்
கண்ணனின் பால்முகங் கண்டு.

( வெள்ளொத் தாழிசை )

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்...!!!


ஆடிமாத பூரத்தில் அவதரித்த பெண்ணாள்
        அரங்கனிடம் அன்புவைத்த அழகுமிகு கண்ணாள் !
பாடிநிதம் மாலுக்குத் தொண்டுசெயும் தந்தை 
       பக்தியையும் உணவுடனே ஊட்டிவிட்ட தாலே 
ஈடில்லாப் பேரன்பால் பூமாலை கட்டி 
       இணைதனக்குக் கண்ணனென இதயத்தில் கொண்டாள் !
சூடியதை முதலில்தான் அழகுபார்த்தப் பின்னே 
        தூயவனாம் இறைவனுக்கே அர்ப்பணித்தாள் நன்றே !

மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை பாடி 
        மாதவனை நெஞ்சுக்குள் நிதம்பக்தி செய்தாள் !
கார்மேக வண்ணனுடன் தூயகாதல் கொண்டு 
       கசிந்துருகிக் கைப்பிடிக்கப் பெருங்கனவு கண்டாள் !
சீர்மிகுந்த திருவரங்க நாதனவன் கூற்றால் 
      சிவிகையிலே சுடர்க்கொடியாள் அங்குவந்து சேர்ந்தாள் !
ஊர்பார்க்க அரங்கனையே கண்ணாரக் கண்டு 
      ஒன்றிவிட்டாள் அவனோடு கோதையவள் வாழி !

கொள்ளைகொண்டாள் நம்மனத்தை ஆழ்வாராய் ஆண்டாள் 
       கோதையவள் பாவையினைப்  பாடிடுவோம்  நாமும் !
கள்ளமில்லா இதயத்தில் குடியிருக்கும் தெய்வம் 
        கண்ணீரால் பணிவோர்க்கு நல்லவழி  காட்டும் !
உள்ளத்தே அன்பிருந்தால் துணையிருக்கும் நாளும் 
       உண்மையான பக்தியினால் ஆட்கொள்ளும் நம்மை !
வெள்ளமெனப் பாய்ந்துவரும் திருவருளும் கூட 
        வீடுபேறும் கிட்டிடுமே தெளிந்திடுவாய் நெஞ்சே !

சியாமளா ராஜசேகர் 

தூக்கம் கெடுக்குமோ சொல் ?


வருணன் விழிதிறக்க வந்த மழையால்
திருமுகம் காட்டுஞ் செடியில் - அரும்பவிழ் 
பூக்களில் தேனுண்ட பொன்வண்டின் ரீங்காரம் 
தூக்கம் கெடுக்குமோ சொல் ?

Tuesday, October 3, 2017

எப்போது விடியுமோ ....???




மாடுகள் பூட்டி வயலில் உழுவோர் வறுமையிலே 
பாடுகள் பட்டும் பலனே யிலையெனில் பாழுலகில் 
வாடுவ தொன்றே வழக்கமா யின்றும் வருந்துவது
நீடுதல் நன்றோ நிமிர்ந்திடச் செய்வோம் நிலைபெறவே! 

பெற்ற மகவெனப் பேணும் வயலில்  பிரியமுடன் 
நெற்றி வியர்வை நிலத்தினில் சிந்த நிதமுழைத்தும் 
அற்றா ரெனவே அவர்தம் பிழைப்பும் அலக்கழித்தால்
வற்றி விடாதோ வயிறொடு வாழ்வும் வனப்பிழந்தே !

வறண்ட நிலமும் மழைப்பொழி வின்றி வெடித்திருக்க 
உறக்கந் துறந்த உழவர் உளமும் உடைந்திருக்க 
அறத்தை மதியா அவல அரசின் அலட்சியத்தால் 
இறக்கத் துணியும் இழிவை நிறுத்துவோம் இக்கணமே !

சீறும் இயற்கையும் சேதப் படுத்தியே சீரழித்தால்
சேறு மிதித்துச் சிறப்பாய்ப் பயிர்த்தொழில் செய்பவரின் 
ஊறு களைய உதவி புரிய ஒருவரின்றேல் 
சோறு கிடைக்குமோ சொல்வீர் பசியைத் துடைத்திடவே!

விடியுமோ வென்றே விழிநீர் பெருக வெறித்திருப்போர் 
இடிந்திடா நெஞ்சுடன் ஏர்த்தொழில் காக்க எழுச்சியுடன் 
முடிவிலா இன்னலை முற்றிலும் போக்க முனைந்துவிடில் 
மடிந்திடும் துன்பம் வரமென வாழ்வும் மலர்ந்திடுமே!

வங்கிக் கடனால் வருஞ்சுமை கூடி மனம்வெதும்பித் 
தொங்கும் நிலைக்குத் துரத்தப் படுமித் துயரநிலை 
எங்கே முடியும் இனியும் தொடர்ந்தால் இழந்திடுவோம்  
பொங்கி எழுவோம் புதிதாய் விடியலும் பூத்திடவே !

( கட்டளைக் கலித்துறை )

சியாமளா ராஜசேகர் 

கவியுலகப் பூஞ்சோலை ஆண்டுவிழாப் போட்டியில் பாரதியார் விருது பெற்ற கவிதை