Thursday, August 10, 2017
பற்றிப் படர்ந்திடுவேன் ....!!!
செக்கச் சிவந்தவன் தக்கத் துணையெனப்
>>>பக்க மிருக்கையிலே - மனச்
சிக்கல் விலகிடும் துக்கம் மறைந்திடும்
>>>மிக்க விரைவினிலே !
உச்சி முகர்ந்தெனைப் பிச்சி மலரென
>>>மெச்சி யகங்குளிர்ந்தான் ! - அவன்
நச்சுக் களைந்திட மிச்ச மிருந்தவென்
>>>அச்சம் விலகியதே !
கொட்டு மழையினில் பட்டுக் கரத்தினைத்
>>>தொட்டுத் தழுவினனே ! - அவன்
விட்டு விலகிடச் சிட்டென் விழிகளில்
>>>சொட்டி வழிகிறதே !
தத்தை உளமிது கத்திக் கதறினும்
>>>சத்தம் வரவிலையே ! - என்
சித்தங் கலங்கிட மொத்த முருகிடப்
>>>பித்தந் தெளியலையே !
உப்புக் கடலினில் சிப்பி விளைந்திடும்
>>>தப்பு மதிலுளதோ ? - தினம்
செப்பு மொழியினில் குப்பைக் களைந்திட
>>>வெப்பந் தணிந்திடுமே !
சுற்ற மொதுக்கிட முற்றுந் துறந்தவள்
>>>பற்றிப் படந்திடுவேன் - உனை
உற்ற உறவெனப் பெற்ற வரமெனச்
>>>சுற்றி யடைந்திடுவேன் !!!
சியாமளா ராஜசேகர்
Tuesday, August 8, 2017
எக்காலம் ??
உறவுகளை யெண்ணி உயிருருகி டாமல்
துறவுநிலை தந்து துயரறுப்ப தெக்காலம் ?
துயரறுத்த பின்னே துணையிருப்பா னென்ற
மயக்கநிலை மாறி மனம்தெளிவ தெக்காலம் ?
தெளிவினைத் தந்து திருவடியைக் காட்ட
களிப்பினா லுள்ளம் கனிவடைவ தெக்காலம் ?
கனியும் படிகாட்சி காட்டியெனைத் தேற்றி
இனிநடக்கும் யாவும் இனிதாவ தெக்காலம் ?
இனிதான வாழ்வெனினும் ஏழ்பிறவி வேண்டா
தனிமைத் தவமியற்றத் தான்நினைப்ப தெக்காலம் ?
நினைப்பதெல்லா மிங்கு நிறைவாய் நடக்க
உனைப்பாடி யானும் உளம்பணிவ தெக்காலம் ?
பணியுமடி யேன்வசம் பக்தியினைக் கண்டு
பிணியகற்றி என்றன் பிறப்பறுப்ப தெக்காலம் ?
பிறப்பறுக்க நேர்ந்தாலும் பெற்றமனம் பித்தாய்
மறலிவரு முன்னர் மனமடங்க லெக்காலம் ?
அடங்காத புலனைந்தும் ஆட்டுவிக்கு மானால்
சுடலைக்குள் போகுமுன் துன்பொழிவ தெக்காலம் ?
ஒழியாமல் தேங்கும் உளத்தின் கசடை
வழிகாட்டி யாய்ப்போக்கி வாழ்விப்ப தெக்காலம் ?
வாழ்வில் வருதுயரால் மாயா உலகிலே
பாழ்பட்டி டாமல் பரிவளிப்ப தெக்காலம் ?
பரிவளிக்கும் அன்பில் பனியாய் உருகி
விரிவான ஞானம் விளங்கவைத்த லெக்காலம் ?
விளங்கவைத்துப் பேரின்ப வீட்டினைத் தந்து
தளர்ந்தநிலை மாற்றித் தகவளிப்ப தெக்காலம் ?
தகவளித்த பின்னே தளிர்முகக்தைக் காட்டி
அகங்குளிரும் வண்ணம் அரவணைத்த லெக்காலம் ?
அரவணைக்கு முன்றன் அபரிமித அன்பால்
மரணத்தை வெல்லும் வரம்பெறுவ தெக்காலம் ??
வெண்பாக்கள் ...!!!
தேன் ....எனத் தொடங்கும் காதல் பாடல்
********************************************************
தேனருவிச் சாரலிலே தேவதையுன் பேரழகில்
மேனகையோ என்றே வியந்திருந்தேன் - வானமுதம்
பூச்சொறிய நாம்நனைந்த பூரிப்பில் வாசமாய்ப்
பாச்சரம் சூட்டுவேன் பார் .
வா எனத் தொடங்கும் பாடல் - வைகை
****************************************************
வாராய் பெருக்கெடுத்து வைகையே ஆடியில்
தாராய் வளத்தைத் தடையின்றி !- நீராடி
நீந்திக் களித்தெங்கள் நெஞ்சமெலாம் தித்திக்க
பாந்தமாய் வாராய் பரிந்து .
பூத்து எனத் தொடங்கி - ( குளம் )
*********************************************
பூத்துச் சிரிக்கும் பொலிவாய்க் கமலமும்
வாத்துகளும் சுற்றியங்கே வந்திடும் - காத்திருக்கும்
ஒற்றைக்கால் கொக்கும் ஒயிலாய்! சிலிர்க்கவைக்கும்
வற்றாக் குளத்தின் வனப்பு .
பழகு எனத் தொடங்கி ( விளக்குமார் )
**************************************************
பழகிடத் தேயும் பளிச்சென மாற்றும்
அழகாய் அழுக்கை அகற்றிப் !- புழங்கிடும்
வீடுசுத்த மாகும் விளக்குமார் கொண்டுகூட்டிப்
போடுகுப்பைக் கூளம் புறம் .
காண் எனத் தொடங்கி ( எருமை )
**************************************************** காண்பதற் கச்சமூட்டும் காட்டெருமை கானகத்தில்
தீண்டிடில் செங்குருதி சிந்தவைக்கும் - மூண்டிடும்
கோபத்தால் தாக்குமது கூர்கொம்பால் குத்தியே
ஆபத்து நீயே அறி.
ஆம் எனத் தொடங்கி ( திங்கள் )
*******************************************
ஆம்பல் இதழ்விரிக்கும் அம்புலி கண்டதும்
பூம்பொழில் பொய்கையில் பொன்னொளியில் - சோம்பலின்றித்
திங்கள் வளையவரும் சீராய் இரவினில்
எங்குமொளி கூட்டும் இனிது .
என்று எனத் தொடங்கி ( சாதி எதிர்ப்பு)
****************************************************
என்று மடியுமிந்த சாதீயப் பைத்தியம்
கொன்று மடங்காது கூத்தாடும் - வென்றிடும்
காலம் இனிவருமோ காத்திருந்து மென்னபயன் ?
ஓலமிட்டும் வாரா துயர்வு .
வீண் எனத் தொடங்கி ( இளமை )
**********************************************
வீண்பேச்சுப் பேசாமல் வெந்துழன்று நோகாமல்
மூண்டெழும் கோபம் முயன்றடக்கித் - தாண்டிடில்
என்றும் இளமை இனிதான தொன்றாகும்
துன்பம் விலக்கும் சுகம் .
தான் எனத் தொடங்கி (தனிமை )
*******************************************
தான்மட்டும் தன்னந் தனியாய் இருப்பதனால்
தேன்நிலவும் தித்தித் திடுமா,சொல் ! - ஏன்வாட்டம்
தேவையோ வீண்கவலை தென்றலினைத் தூதுவிடு
பாவையவள் வந்திடுவாள் பார் .
வழி எந்த தொடங்கி விழி என முடிக்கவும் (காதல் )
**********************************************************
வழிதோறும் பூத்து மணத்தைப் பரப்பி
மொழியின்றிப் பேசிடும் முல்லை - குழிவிழுந்த
கன்ன முடையாள் கருங்கூந்த லிற்சிரிக்க
மின்னுமதைக் கண்டென் விழி .
கண்ணில் எனத் தொடங்கி ( நிறங்கள் )
****************************************************
கண்ணில் விரியும் கவின்மிகு காட்சியில்
வண்ணம் பலவும் வசீகரிக்கும்! - கண்கொள்ளாக்
காட்சியாய் நீலக் கடலும் விரிந்தவானும்
ஆட்சிசெயும் உள்ளத்தை யாம் .
மறைத்து எனத் தொடங்கி ( உண்மையின் மேன்மை )
*****************************************************************************
மறைந்தே யிருப்பினும் வாய்மை,பொய் யாகா
குறைகள் களையும் குணத்தால் !- நிறைமனத்தில்
உண்மை உறங்காமல் ஓங்கி வளர்ந்திடும்
திண்மை தருமே தினம் .
உதயமானான் செங்கதிரோன் ....!!!
செண்பகம் மேளங்கொட்டச் சேவல்கள் வாழ்த்திசைக்க
விண்மீன்கள் கூட்டமுடன் வெண்ணிலவும் மறைந்துசெல்ல
வெண்முத்துப் பனித்துளிகள் மெல்லிதழில் பூத்துநிற்கக்
கண்விழிக்கும் தருணத்தில் கனவுவந்தே இமைமூட
இனிதான மலர்வனத்தில் இளந்தென்றல் தாலாட்டக்
கனிவாசம் இதமாகக் காற்றினிலே தவழ்ந்துவரக்
குனிந்தாடும் மரக்கிளையில் குயிலொன்று குரல்கொடுக்க
வனிதையரின் விரலசைவில் வாசலிலே கலைகொஞ்ச
நீலவானம் செம்மஞ்சள் நிறத்துடனே காட்சிதர
ஓலமிடும் கடலலைகள் ஒளிபட்டு மிளிர்ந்திருக்க
மேலெழும்பும் கதிரவனின் மேனியெலாம் சிவந்திருக்கக்
காலைநேரக் காட்சியினைக் கண்டமனம் சிலிர்த்திருக்க
இருள்துடைத்து விட்டாற்போல் இரவுவிடை பெற்றிருக்க
கருவறையில் தெய்வத்தின் கதவுகளும் திறந்திருக்க
மருள்நீக்கும் மணியோசை மனவமைதி தந்திருக்க
வருநாளின் பணிகளெல்லாம் மனக்கண்முன் அணிவகுக்க
சிந்தையிலே புத்துணர்வு சிறகசைத்துப் பறந்திருக்க
பந்தினைப்போல் வானத்தில் பளபளப்பாய் வட்டமாகச்
சுந்தரமாய்க் கீழ்வானில் சொக்கவைக்கும் அழகுடனே
செந்தாமரை மலர செங்கதிரோன் உதயமானான் !
சியாமளா ராஜசேகர்
உயிர்தேடும் ராகமே .....!!!
உயிர்தேடும் ராகமே! உளம்நாடும் கீதமே !
உடன்வருவாய் நாதமாய் உருகுகிறேன் மௌனமாய் !
அயிரைமீன் துள்ளலாய் அசைந்துவரும் தென்றலாய்
அலைபேசு மோசையாய் அழைக்கின்றேன் ஆடிவா !!
பரிவினிலே அன்னையாய்ப் பாசத்தில் வள்ளலாய்ப்
பனித்துளியின் குளிர்ச்சியாய்ப் பசுங்கிளியின் கொஞ்சலாய்
விரிகூந்தல் மேகமாய் வெண்மதியின் வதனமாய்
விண்மலரும் மின்னலாய் விரைந்தேநீ ஓடிவா !!
வலிசுமந்த நெஞ்சுடன் வனப்பிழந்து தவிப்பவன்
வாழ்விலொளி ஏற்றிட மனக்கவலை மாற்றிட
ஒலிக்கின்ற கடலென உதிக்கின்ற கதிரென
ஒளிர்கின்ற விழியுடன் ஒயிலாகத் தேடிவா !!
கவிபாடும் காவியம் கலையாத ஓவியம்
கனிவான தாய்மனம் கதைபேசும் பொன்முகம்
செவியோரம் தேன்மழை சிலிர்க்கவைக்கும் பூமணம்
சிலைபோலும் பேரேழில் சித்திரமே பாடிவா !!
அழியாத அன்பினை அருவியெனக் கொட்டிட
அகமலர்ந்த காதலால் அமுதகவி வனைந்திடப்
பொழிகின்ற மழையெனப் புத்துணர்ச்சி யளித்திடப்
பொங்கிவரும் வெள்ளமாய்ப் பொலிவுடனே நாடிவா !!
மிளிர்கின்ற சுடரென மெல்லிசையின் சுகமென
மிதந்துவரும் நினைவினில் மெல்லினமே கூடவா !
வளிவரும் இதமென வசந்தத்தைக் காட்டிட
வளைக்கரத்தைப் பற்றிநான் மணமாலை சூட்டவா ??
கொலுசொலி ....!!!
கொலுசொலி ....!!!
************************
மஞ்சள் முகத்தில் ஒளிதுலங்க
கஞ்ச மலராய் இதழ்சிவக்க
வஞ்சி யவளும் நடைபழகக்
கொஞ்சி வருதே கொலுசினொலி !
பாத மெடுத்து வைக்கையிலே
நாத மிசைத்துச் சலங்கையுடன்
ஊதக் காற்றின் கிளுகிளுப்பில்
மோத லின்றிச் சிணுங்கிடுதே !
ஜல்ஜல் லென்றே துள்ளிவரும்
சொல்சொல் லென்றே உளம்கெஞ்சும்
செல்செல் லென்றே காலிழுக்கும்
நில்நில் லென்றே மனம்துடிக்கும் !
வெள்ளிக் கொலுசு சத்தத்தில்
துள்ளா மனமும் துள்ளிடுதே
கள்ளி உன்றன் வரவுதனைக்
கள்ள மின்றிக் காட்டிடுதே !
காலைத் தழுவும் கால்கொலுசு
சேலைக் குள்ளே ஒளிந்திருந்து
வாலைக் குமரி உன்னழகை
மாலைப் பொழுதில் கூட்டிடுதே !
சந்தத் துடனே தாளமிட்டுச்
சிந்தை கவரும் கொலுசொலியே
தந்தி போல முன்வந்து
சொந்தங் கொள்ளச் சொல்லிடுதே !!
சியாமளா ராஜசேகர்
Subscribe to:
Posts (Atom)