Saturday, July 28, 2018

ஊஞ்சலிது ஊஞ்சலிது ...!!!


கண்ணனுடன் எழில்ராதை இணைந்தாடும் ஊஞ்சல் 
***கன்னியர்கள் சுற்றிநின்றே ஆட்டிவிடும் ஊஞ்சல் !
வெண்ணையுண்ணும் மாயவனின் லீலைகளை எண்ணி 
***வியந்தபடி கோபியர்கள் விரைந்தாட்டும் ஊஞ்சல் !
செண்பகப்பூந் தோட்டத்தில் ஆநிரைகள் சூழச் 
***சிரித்தபடி கேசவனைத் தாலாட்டும் ஊஞ்சல் !
வண்ணமயில் தோகையினை விரித்தாடிக் காட்ட
***வடிவழகன் மகிழ்ச்சியிலே திளைத்தாடும் ஊஞ்சல் !!

மான்களொடு புள்ளினமும் அருகிருந்து பார்க்க
***மாலவனின் பெருமைகளை நினைத்தாடும் ஊஞ்சல் !
தேன்மலரில் மதுவுண்ணும் பொன்வண்டு பாட  
***தேனிதழாள் நாணத்தில் குனிந்தாடும் ஊஞ்சல் !
மீன்விழியாள் கடைக்கண்ணால் மன்னவனை நோக்க 
***மின்னதிர்வில் தனைமறந்து சிலிர்த்தாடும் ஊஞ்சல் !
வான்மலர்ந்த விண்மீன்கள் வாழ்த்துகளைச் சொல்ல 
***வசுதேவர் தேவகியும் இணைந்தாட்டும் ஊஞ்சல் !

தென்றலிலே கலந்தினிக்கும் தேவசுகந் தன்னைத்
***தெவிட்டாமல் தான்தாங்கித் திளைத்தாடும் ஊஞ்சல் !
கன்றுகளும் குழலிசையைக் கேட்டவுடன் கூடிக்
***கனிவான மொழிபேசிக் கவர்ந்தாட்டும் ஊஞ்சல் !
சின்னவனின் குறும்புகளைப் பூரிப்பாய்க் கூறிச்
***சீர்மிகவே தேவர்களும் சேர்ந்தாட்டும் ஊஞ்சல் !
அன்றலர்ந்த மலர்போலும் அழகுநங்கை பார்க்க 
***அன்னங்களும் பையவந்து அசைத்தாட்டும் ஊஞ்சல் !

தீஞ்சுவையாம் கனித்தமிழில் கவிநிதமும் பாடித்
***தித்திக்கப் புலவோர்கள் புகழ்ந்தாட்டும் ஊஞ்சல் !
வாஞ்சையுடன் நந்தகோபர் யசோதையுடன்  ஒன்றாய் 
***மனம்குளிர்ந்து பக்கத்தில் தொட்டாட்டும் ஊஞ்சல் !
பூஞ்சோலைக் காற்றோடு கலந்துவரும் வாசம் 
***புனிதத்தை நிறைத்திருக்க பூத்தாடும் ஊஞ்சல் !
ஊஞ்சலிது பொன்னூஞ்சல் ஒப்பில்லா ஊஞ்சல் 
***உள்ளத்தை ஆட்டுவிக்கும் உயர்வான ஊஞ்சல் !!

சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment