Thursday, May 18, 2017

தாயும் சேயும் ....!!!


திங்கள் பத்துச் சுமந்தவளின் 
***தியாகம் சொல்லில் அடங்கிடுமோ ?
மங்கை யவளின் அன்பிற்கு 
***மண்ணி லுண்டோ ஈடுயிணை ?
கங்கை போலும் வற்றாத 
***கருணை மனத்தைக் கொண்டிடுவாள் 
பொங்கு முவகைப் பெருக்கோடு   
***பொறுமை காப்பாள் இறுதிவரை !

குடலைப் புரட்டி எடுப்பதுபோல் 
 ***குமட்டிக் கொண்டு வந்தாலும் 
உடலும் வலியால் வதைத்தாலும் 
***உள்ளம் சோர்ந்தே போனாலும் 
இடரைச் சற்றும் கருதாமல் 
***இனிமை நினைவைச் சுமந்திடுவாள் 
தடவி வயிற்றைப் பிரியமுடன்  
***தாய்மை உணர்வால் பூரிப்பாள் !

பிஞ்சு காலால் கருவறைக்குள் 
***பிள்ளை எட்டி உதைத்தாலும் 
நெஞ்சம் குளிர்ந்து நெகிழ்ந்திடுவாள் 
***நித்த மதற்காய்த் தவமிருப்பாள் 
கொஞ்சு மொழியைக் கேட்டிடவே 
***குழந்தை முகத்தைப் பார்த்திடவே 
வஞ்சி யவளும் துடித்திருப்பாள் 
***வருகை கண்டே  உயிர்நனைவாள் !

உதிரப் பாலைப் புகட்டிடுவாள் 
***உணர்வி லொன்றிக் கலந்திடுவாள் 
எதிலும் தாய்மை யுணர்வோடு 
***இனிமை வாழ்வில் கூட்டிடுவாள் 
புதிராய் விளங்கும் பிள்ளையையும் 
***புத்தி புகட்டித் திருத்திடுவாள் 
துதிக்கும் தெய்வம் அவளாகத்
***துணையா யிருப்பாள் துணிவாக !

தாய்க்கும் சேய்க்கு முள்ளபந்தம் 
***தகைமை மிக்க உறவாகும் 
தேய்ந்து வளரும் பிறையல்ல  
***தேயாக் கதிர்போல் நிதமொளிரும்
ஓய்த லில்லாக் கடலலைபோல் 
***உரிமை யோடு தொடர்ந்துவரும் 
சாய்ந்து கொள்ள தாய்மடியே 
***சக்தி கொடுக்கும் வாழ்வினிலே !


சியாமளா ராஜசேகர் 


No comments:

Post a Comment