Thursday, May 11, 2017

கருணை மழையே !



கருணை மழையே! கனிவின் உருவே! 
அரும்பும் மலரின் அழகே! - திருவே !
உருகி அழைத்தேன் உயிராய் உனையே 
வருத்தம் விலக்கிட வா .

ஞான வடிவே நலமருள் ராணியே !
வான ஒளியே! வருவாயே ! - மோன
தவமே! தெளிவினைத் தந்து மனத்தின் 
கவலை துடைப்பாய் கனிந்து .  

மரியேயுன் நாமம் மகிமைப் படுத்திப்
பரிவளிக்க கண்கள் பனிக்கும்! - திரியில் 
சுடரென மின்னும்! சுகம்பிறக்கும்! எங்கும் 
படர்ந்திடும் பேரன்பைப் பார் .

அன்பின் சிகரம்நீ! அன்னையர்க்(கு) அன்னைநீ!
தன்னிக ரில்லா தயாபரிநீ! - பொன்னெழில்நீ!
கேவியழும் சேய்குரல் கேட்டு விரைந்துவந்திப் 
பாவிக்குத் தாலாட்டு பாடு .  

தேவரீர் அன்னையே! தேடிவந்தேன் உன்னையே 
ஆவலுடன் நம்பினேன் ஆட்கொள்வாய் - பாவத்தைப் 
போக்கிடும் தேவமரி ! புண்ணிய பூமியில் 
நீக்கமற என்னுள் நிறை.

மன்றாடு கின்றேனே மாதா  இரங்காயோ?
மன்னிப்பை நீயும் வழங்காயோ? - மன்னுயிர்
காக்கும் புனிதையே! கைகூப்பும் சேயென்னைத்
தூக்கி யணைத்தால் சுகம் .

நித்திரை இல்லையம்மா; நிம்மதியும் போனதம்மா;
இத்தரணி வாழ்வோ எரிக்குதம்மா; - சத்தியத்தின் 
பேரொளியே! கன்னிகையே! பிள்ளையெனைக் கண்பார்த்துச் 
சீரொடு வாழ்ந்திடச் செய். 

மாதாவுன் பேரருளை மாரியாய்ப் பெய்கிறாய் 
நீதான் வழித்துணையாய் நிற்கிறாய் - பாதார 
விந்தம் பணிந்தேன் வியனுல(கு) ஏகிடச்செய் 
சந்தத முன்நினைப்பே சால்பு .

ஊனமுற்ற நெஞ்சத்திற்(கு) ஊன்றுகோல் நீதானே !
தேனமுத பாக்களால் சேவிப்பேன் - வானரசி! 
தோளி லெனைச்சுமப்பாய் தூயவளே! மாதாவுன் 
தாளினைப் பற்றினேன் தாங்கு.

மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மெய்விதிர்க்க நின்று 
தொழுதிடுவேன் உன்பாதம் தொட்டு! - முழுமனதாய் 
நீயே கதியென  நெஞ்சுருகி வேண்டிடுவேன் 
தாயேயென் நற்றுணைநீ தான் .

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment