Saturday, February 25, 2017

உன்னப்போல யாருமில்ல !


முத்துமுத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப்  பல்லழகா 
தத்தித்தத்தி நடைபழகும் தங்கரதச் சிலையழகா 
தித்திக்கும் தேன்மழைநீ தெவிட்டாத பாசுரம்நீ 
பித்தாக்கி னாயென்னை பிரியமுள்ள திருமகனே !

சின்னச்சின்ன விரலழகா சீனிமிட்டாய்ச் சொல்லழகா 
கன்னத்துல பொட்டழகா கருப்பட்டி நிறத்தழகா 
புன்னகைக்கும்  குருத்தழகா புடம்போட்ட பொன்னழகா 
தென்னைமரக் கிளிபோல சிவந்தவாயில் நாக்கழகா !

பட்டுக்கன்னம் முத்தங்கொஞ்ச பவளம்போல சிவந்திருக்கு  
சுட்டித்தனம் செஞ்சாலும் சுகமாகத் தானிருக்கு
தொட்டிலிட்டுத் தாலாட்ட தூங்காமல் எட்டிப்பார்க்கும் 
கட்டிக்கரும்பு செல்லமடா கண்மூடி  நீயுறங்கு !

பப்புச்சோறு ஊட்டுகையில் ப்பூவென்று துப்பிவிட்டுச் 
சப்பரத்துப் பொம்மபோல சாஞ்சாடும் கழுத்தழகா 
சொப்புவச்சி விளையாடிக் சொக்கவைக்கும் சித்திரமே 
ஒப்பில்லாத மாணிக்கமே ஒன்னப்போல யாருமில்லே !!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment