Monday, October 8, 2018

அதியழகு கோலம் ...!!!




கதிர்மெல்லக் கரம்நீட்டி இருள்துடைத்து விரியும்
***கவினழகாய்ப் மலர்ந்தவல்லி மதிமறைய மயங்கும் !
முதிராத பூங்காற்று சுகமாகத் தழுவும்
***முகிலினங்கள் அலையலையாய்ப் புலர்பொழுதில் உலவும் !
அதியழகாய்க் கீழ்வானம் சிவந்திருக்கும் கோலம் 
***அதுகண்டு துயில்கலைந்து விழித்திடுமே ஞாலம் !
உதிக்கின்ற காட்சிதனை அனுதினமும் கண்டும் 
***ஒருநாளும் சலித்ததில்லை இருவிழிகள் என்றும் !!
சியாமளா ராஜசேகர்

ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு 95 -ம் பிறந்தநாள் வாழ்த்து ...!!

அற்புதமாய் நின்படைப்பில் மயங்கி நித்தம்
***அகங்நிறைந்து தமிழன்னை குளிர்வாள் சித்தம்!
நற்றமிழில் பன்வகைமைப் பாக்கள் நெய்தாய்
***நயமிக்க நகையுணர்வால் உள்ளம் கொய்தாய்!
சொற்பொழிவு கேட்டசெவி சொக்கி நிற்கும்
***சுவையறிந்து தேடலிலே பலவும் கற்கும்!
வற்றாத தமிழூற்றே! வணங்கு கின்றேன்
***வளமோடும் நலமோடும் வாழி! வாழி!!💐💐💐💐💐

சந்தக் குறட்டாழிசை...!!!

வஞ்சி யுன்னழகை யெண்ணி நெஞ்சுருகி
***மன்ன வன்கனவு காணலாம் !
விஞ்சு மன்பிலுனை யென்று மின்பமொடு
***வென்று செம்மையுட னாளலாம் !!
கெஞ்சி யஞ்சுவிழி வண்ண மின்னொளியில்
***கெண்டை யின்நிழலு மாடலாம் !
கொஞ்சி யின்பமுற வுன்னு ளம்நினைவில்
***கொண்ட வன்வரவை நாடலாம் !
மஞ்சு விண்ணுலவ மங்கை யுன்வடிவு
***வந்து முன்னுலவ வாடலாம் !
மஞ்ச ளின்மணமு மொன்றி ணைந்துவர
***மங்க ளம்குடிலை யாளலாம் !
சஞ்ச லம்விலக மன்ம தன்பரிவில்
***சம்ம தம்விழிகள் கூறலாம் !
அஞ்சு கம்குரலி லன்பு டன்குழைய
***அன்ன முன்மனமு(ம்) ஊடலாம் !!
சியாமளா ராஜசேகர்

முத்தே மணியே ...!!

முத்தே மணியே கண்ணே ஒளியே
முல்லைப் பூவே கண்ணுறங்கு !
அத்தை மடியே மெத்தை யாக
அழகு மயிலே நீயுறங்கு !
நித்தம் நடக்கும் அவலம் கண்டால் 
நெஞ்சம் கொதிக்கும் பாராதே !
சத்த மின்றித் தோளில் சாய்த்துத்
தட்டிக் கொடுப்பேன் பொன்னுறங்கு !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ( கந்தன் திருப்புகழ் )

தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த.... தனதானா
நெஞ்சி லன்பு கொண்டு ழன்று
சந்த முந்த வந்து கொஞ்ச
நின்ப தம்ப ணிந்து நின்று மகிழ்வேனோ
நிந்தி தம்பு ரிந்து வெம்பு
மன்ப னின்கு ணந்தெ ரிந்து
நிந்தை என்று நொந்தொ துங்கி விடலாமோ
வஞ்ச மின்றி யுன்ப தங்க
ளொன்றி யன்பு விஞ்சி யுந்த
வன்சி னம்த ணிந்த கந்த வடிவேலா
மஞ்சு ளம்பொ ருந்தி நின்று
குன்ற மெங்கி லுந்தி கழ்ந்து
மங்க ளங்க ளின்று பொங்க வருள்வாயே
தஞ்ச மென்று நம்பி வந்த
அண்டர் துன்ப மன்று வென்று
தங்கி யங்கெ ழுந்த செந்தி லழகேசா
தண்டை யுங்கு லுங்க வந்து
சிந்தை யுங்க னிந்து சம்பு
தந்த னந்த னந்த னந்த வெனவாட
நஞ்சை யுண்ட வன்சி வந்த
கண்தி றந்து சொந்த மென்று
நண்பு டன்ப யின்று வந்த புதல்வோனே
நன்று ளம்ப டிந்து வந்து
பங்க மின்றி யின்பு தந்து
ஞஞ்சை யும்க டந்து பண்பி லொளிர்வேனோ
சியாமளா ராஜசேகர்

கலகலவென அவள் சிரிக்கையில் ....!!!


துளித்துளியென விழுந்திடும்மழை நனைத்திடும் இன்பம்
***சுகம்பெருகிடும் மகள்வரவினில் விலகிடும் துன்பம் !
குளிர்தருவென தருநிழலென நிறைந்திடும் நெஞ்சம்
***குழலிசையொடு குயில்மொழியவள் குரலினில் தஞ்சம் !
வளிவருடிடும் இதமவளிரு விழிகளில் மின்னும் 
***வனப்பினில்முகம் மதியொளியென மலர்ந்திடும் இன்னும் !
களித்திடும்மனம் கனித்தமிழென கவிதையில் பூக்கும்
***கலகலவென அவள்சிரிக்கையில் கமலமும் தோற்கும் !!
சியாமளா ராஜசேகர்

சில ஈற்றடிகளுக்கு வெண்பா ...!!!

சில ஈற்றடிகளுக்கு வெண்பாக்கள்...!!!!
உள்ளத்தி லன்பிருந்தும் ஊமையாய் நாட்கடத்தித்
தள்ளியிருந் தோம்யாம் தனிமையில் - மெள்ளப்
புரிந்துணர்ந்த பின்னே புயலடித்த வாழ்வில்
விரிசலுக்குத் தந்தோம் விடை.
பிஞ்சென்றும் பாராமல் பித்தம் தலைக்கேற
அஞ்சாமல் கொல்லும் அரக்கமனம் - நெஞ்சமே
வஞ்சகத்தை வேரோடு மாய்க்கவல்ல அன்பென்ற
செஞ்சொல்லுக் கீடுண்டோ செப்பு.
தஞ்சமென வந்தோரைத் தாய்போல் பரிவுடன்
அஞ்சலென அன்பாய் அரவணைக்கும் - நெஞ்சினனை
வஞ்சமின்றி வாயார வாழ்த்திடவே வாழ்கவென்ற
செஞ்சொல்லுக் கீடொன்று தேடு.
வண்ண நிலவை வளைந்திருக்கும் வானவில்லை
மண்ணில் பொழிந்திடும் மாமழையை - விண்ணில்
கொடியாய் மலர்ந்தொளிரும் கோலமின்னல் கீற்றை
வடிவாய்க் கவிசெய்வோம் வா.
ஏழைக் குடிசையில் ஈசான மூலையில்
வாழைக் குலைதள்ளி வாழ்த்திட - தாழைமணம்
வீடெங்கும் உன்னதமாய் வீச அவன்மனக்
காடெல்லாம் பூத்த கனா.
ஆடென்றால் ஆடி அழகுக் அழகூட்டும்
பாடென்றால் பாடும் பரவசமாய் - வீடெங்கும்
ஓடும் மழலைக்காய் ஓரிரவில் என்னகக்
காடெங்கும் பூத்த கனா.
குற்றங் களையாமல் கொட்டினாய் வார்த்தைகளைச்
சுற்றமும் கூடியுனைத் தூற்றிட - நற்றோழி!
வேதனை யோடு வெடித்தழுது விம்மினாய்
பேதமைப் பட்டுணர்ந்த பின்.
சியாமளா ராஜசேகர்