Sunday, August 13, 2017

உதயமானான்

செண்பகம் மேளங்கொட்டச் சேவல்கள் வாழ்த்திசைக்க 
விண்மீன்கள் கூட்டமுடன் வெண்ணிலவும் மறைந்துசெல்ல 
வெண்முத்துப் பனித்துளிகள் மெல்லிதழில் பூத்துநிற்கக்
கண்விழிக்கும் தருணத்தில் கனவுவந்தே இமைமூட 

இனிதான மலர்வனத்தில் இளந்தென்றல்  தாலாட்டக்
கனிவாசம் இதமாகக் காற்றினிலே தவழ்ந்துவரக்
குனிந்தாடும் மரக்கிளையில் குயிலொன்று குரல்கொடுக்க 
வனிதையரின் விரலசைவில் வாசலிலே கலைகொஞ்ச

நீலவானம் செம்மஞ்சள் நிறத்துடனே காட்சிதர
ஓலமிடும் கடலலைகள் ஒளிபட்டு மிளிர்ந்திருக்க 
மேலெழும்பும் கதிரவனின் மேனியெலாம் சிவந்திருக்கக் 
காலைநேரக் காட்சியினைக் கண்டமனம் சிலிர்த்திருக்க 

இருள்துடைத்து  விட்டாற்போல் இரவுவிடை பெற்றிருக்க 
கருவறையில் தெய்வத்தின் கதவுகளும் திறந்திருக்க 
மருள்நீக்கும் மணியோசை மனவமைதி தந்திருக்க 
வருநாளின் பணிகளெல்லாம் மனக்கண்முன் அணிவகுக்க 

சிந்தையிலே புத்துணர்வு சிறகசைத்துப் பறந்திருக்க 
பந்தினைப்போல் வானத்தில்  பளபளப்பாய் வட்டமாகச் 
சுந்தரமாய்க் கீழ்வானில் சொக்கவைக்கும் அழகுடனே 
செந்தாமரை மலர செங்கதிரோன் உதயமானான் !

சியாமளா ராஜசேகர் 



     

அம்பிகாபதி அமராவதி


கானமும் கவிதையும் 
*******************************
அம்பிகாபதி அமராவதி 
********************************
கவிகளிற் சிறந்த கம்பனின் மைந்தன்  
***கவிஞனாம் அம்பிகா பதியும் 
புவிவெலும் திறத்தான் புலிக்கொடி யோனின் 
***புதல்வியாம் பதுமைபோல் பெண்ணாம்
கவின்மிகு அமரா வதியினைக் கண்டு 
***காதலில் வீழ்ந்தனன் என்னும் 
செவிவழி நுழைந்த சேதியைக் கேட்டு 
***சினந்தனன் சோழனுந் தானே !!

பையவே வளர்ந்த காதலில் திளைத்துப் 
***பைத்திய மாயினர் உள்ளம் !
மைவிழி யாளின் அன்பினில் கரைந்து 
***மகிழ்ச்சியில்  பாய்ந்தது வெள்ளம் !
வையகம் போற்ற வாழ்ந்திட எண்ணும்
***மனங்களில் இல்லையே கள்ளம் !
தையலின் தந்தை கொதித்திட லாலே 
***தவிப்பினில் துடித்ததே நெஞ்சம் !!

காமமே யின்றிக் கடவுளைப் பாடக் 
***கட்டளைப் பிறந்ததை ஏற்றுப் 
பாமணம் கமழப் பாடினான் அவையில் 
***பாவையும் பார்த்தனள் மறைந்தே !
சாமரம் கொண்டே வீசினாற் போலே 
***சாதனை யாய்ச்சதம் தொடுமுன் 
கோமகள் திரையை விலக்கிட அவனும் 
***கோதையைப் பாடினன் புகழ்ந்தே !!

மயிரிழை யிலவன் வெற்றியை இழக்க 
***மன்னனும் தண்டனை யாக 
உயிரினைப் பறிக்க ஆணையு மிட்டார்
***உடனவள் தன்னுயிர் நீத்தாள் !
வயிரமாய் வளர்த்த காதலைச் சாய்த்தும் 
***மடிந்தவர் காதலை வென்றார்!
துயிலினை மறந்தே இதயமும் வாடும் 
***துயரிதைப் படித்திடும் போழ்தே !

சியாமளா ராஜசேகர் 

உயிர்தேடும் ராகமே ....!!!

உயிர்தேடும் ராகமே! உளம்நாடும் கீதமே !
      உடன்வருவாய் நாதமாய் உருகுகிறேன் மௌனமாய் !
அயிரைமீன் துள்ளலாய் அசைந்துவரும் தென்றலாய் 
     அலைபேசு மோசையாய் அழைக்கின்றேன் ஆடிவா !!

பரிவினிலே அன்னையாய்ப் பாசத்தில் வள்ளலாய்ப் 
     பனித்துளியின் குளிர்ச்சியாய்ப் பசுங்கிளியின் கொஞ்சலாய் 
விரிகூந்தல் மேகமாய் வெண்மதியின் வதனமாய் 
     விண்மலரும் மின்னலாய் விரைந்தேநீ ஓடிவா !!

வலிசுமந்த நெஞ்சுடன் வனப்பிழந்து தவிப்பவன் 
     வாழ்விலொளி ஏற்றிட மனக்கவலை மாற்றிட 
ஒலிக்கின்ற கடலென உதிக்கின்ற கதிரென 
     ஒளிர்கின்ற விழியுடன் ஒயிலாகத் தேடிவா !!

கவிபாடும் காவியம் கலையாத ஓவியம் 
     கனிவான தாய்மனம் கதைபேசும் பொன்முகம் 
செவியோரம் தேன்மழை சிலிர்க்கவைக்கும் பூமணம்
      சிலைபோலும் பேரேழில் சித்திரமே பாடிவா !!

அழியாத அன்பினை அருவியெனக் கொட்டிட 
      அகமலர்ந்த காதலால் அமுதகவி வனைந்திடப்
பொழிகின்ற மழையெனப் புத்துணர்ச்சி யளித்திடப் 
      பொங்கிவரும் வெள்ளமாய்ப் பொலிவுடனே நாடிவா !!

மிளிர்கின்ற சுடரென  மெல்லிசையின் சுகமென 
      மிதந்துவரும் நினைவினில் மெல்லினமே கூடவா !
வளிவரும் இதமென வசந்தத்தைக் காட்டிட 
     வளைக்கரத்தைப் பற்றிநான் மணமாலை சூட்டவா ??

Thursday, August 10, 2017

ஆடினளே ....!!!





அலைகொஞ்சி விளையாடும் நதிநீரில் நின்று
***அபிநயிக்கும் அணங்கவளின் அழகுவிழி கண்டு 
வலைதப்பி ஒளிந்தோடும் கயல்மீன்கள் வியக்க 
***வளைகரத்தில் விரல்பத்தில் மருதாணிச் சிவக்க 
மலையோர இளங்காற்றும் இதமாக வருட 
***மனம்சிலிர்க்கத் தனைமறந்து கனவுகளில் மிதந்து 
சிலைபோலும் பேரெழிலாள் காற்சதங்கை துள்ள 
***திகட்டாத இயற்கையுடன் இணைந்தாடி னாளே!
சியாமளா ராஜசேகர்

கண்ணனைக் கண்டு ....!!!


கண்கலங்கி ஏங்கிநின்றேன் காட்சி கிடைத்திடக் 
கண்குளிர்ந்தேன்; நெஞ்சம் கசிந்துருக - கண்களில் 
கண்ணீர்ப் பெருக்கெடுத்துக் கன்னத்தி லோடுதே 
கண்மணியாம் கண்ணனைக் கண்டு .

பற்றிப் படர்ந்திடுவேன் ....!!!


செக்கச் சிவந்தவன் தக்கத் துணையெனப்
>>>பக்க மிருக்கையிலே - மனச் 
சிக்கல் விலகிடும் துக்கம் மறைந்திடும்  
>>>மிக்க விரைவினிலே  !

உச்சி முகர்ந்தெனைப் பிச்சி மலரென 
>>>மெச்சி யகங்குளிர்ந்தான் ! - அவன் 
நச்சுக் களைந்திட மிச்ச மிருந்தவென்
>>>அச்சம் விலகியதே !

கொட்டு மழையினில் பட்டுக் கரத்தினைத் 
>>>தொட்டுத் தழுவினனே ! - அவன் 
விட்டு விலகிடச் சிட்டென் விழிகளில் 
>>>சொட்டி வழிகிறதே !

தத்தை உளமிது கத்திக் கதறினும்
>>>சத்தம் வரவிலையே ! - என் 
சித்தங் கலங்கிட மொத்த முருகிடப் 
>>>பித்தந் தெளியலையே !

உப்புக் கடலினில் சிப்பி விளைந்திடும் 
>>>தப்பு மதிலுளதோ ? - தினம் 
செப்பு மொழியினில் குப்பைக் களைந்திட
>>>வெப்பந் தணிந்திடுமே !

சுற்ற மொதுக்கிட முற்றுந் துறந்தவள் 
>>>பற்றிப் படந்திடுவேன் - உனை 
உற்ற உறவெனப் பெற்ற வரமெனச் 
>>>சுற்றி யடைந்திடுவேன் !!!

சியாமளா ராஜசேகர் 




Tuesday, August 8, 2017

எக்காலம் ??

உறவுகளை  யெண்ணி உயிருருகி டாமல்
துறவுநிலை தந்து துயரறுப்ப தெக்காலம் ?

துயரறுத்த பின்னே துணையிருப்பா னென்ற
மயக்கநிலை மாறி மனம்தெளிவ தெக்காலம் ?

தெளிவினைத் தந்து திருவடியைக் காட்ட
களிப்பினா லுள்ளம் கனிவடைவ தெக்காலம் ?

கனியும் படிகாட்சி காட்டியெனைத் தேற்றி 
இனிநடக்கும் யாவும் இனிதாவ தெக்காலம் ?

இனிதான வாழ்வெனினும் ஏழ்பிறவி வேண்டா 
தனிமைத் தவமியற்றத் தான்நினைப்ப தெக்காலம் ?

நினைப்பதெல்லா மிங்கு நிறைவாய் நடக்க 
உனைப்பாடி யானும் உளம்பணிவ தெக்காலம் ?

பணியுமடி யேன்வசம் பக்தியினைக் கண்டு 
பிணியகற்றி என்றன் பிறப்பறுப்ப தெக்காலம் ?

பிறப்பறுக்க நேர்ந்தாலும் பெற்றமனம் பித்தாய் 
மறலிவரு முன்னர்  மனமடங்க லெக்காலம் ?

அடங்காத புலனைந்தும் ஆட்டுவிக்கு மானால் 
சுடலைக்குள் போகுமுன் துன்பொழிவ தெக்காலம் ?

ஒழியாமல் தேங்கும் உளத்தின் கசடை 
வழிகாட்டி யாய்ப்போக்கி வாழ்விப்ப தெக்காலம் ?
 
வாழ்வில் வருதுயரால் மாயா உலகிலே 
பாழ்பட்டி டாமல் பரிவளிப்ப தெக்காலம் ?

பரிவளிக்கும் அன்பில் பனியாய் உருகி 
விரிவான ஞானம் விளங்கவைத்த லெக்காலம் ?

விளங்கவைத்துப் பேரின்ப வீட்டினைத் தந்து 
தளர்ந்தநிலை மாற்றித் தகவளிப்ப தெக்காலம் ?

தகவளித்த பின்னே தளிர்முகக்தைக் காட்டி 
அகங்குளிரும் வண்ணம் அரவணைத்த லெக்காலம் ?

அரவணைக்கு முன்றன் அபரிமித அன்பால்
மரணத்தை வெல்லும் வரம்பெறுவ தெக்காலம் ??