Wednesday, June 28, 2017

மீட்டிடுவேன் அன்பாலே ...!!!



மலரோடு மலரானாள்
    மனத்தோடு மணமானாள்
நிலத்தோடு நடைபோடும் 
    நிழலாகத் துணையானாள்
புலர்காலைப்  பொழுதினிலே 
    புதுக்கவிதை போலானாள்
உலவாத மலைமீதில் 
    உருமாறும் முகிலானாள் !

இரவோடு நிலவானாள்
    இதயத்தின் துடிப்பானாள்
சுரமெழுள் ஒலியானாள்
    சுகமான இசையானாள்
பிரதான மூச்சானாள்
    பிரியமான  சகியானாள்
விரலோடு வீணையைப்போல் 
     விளையாடும் உறவானாள் !

துவளாத கொடியானாள்
     துவர்க்காத கனியானாள்
கவலைக்கு மருந்தானாள்
     கருணைக்கு மொழியானாள்
உவமைக்குக் கருவானாள்
     உயிருக்கும் உயிரானாள்
புவனத்தில் பூப்போலே 
    பொலிவான பெண்ணானாள் ! 

வயலோடு வளிவீச 
    வருடிவிடும் சிலிர்ப்பினைப்போல் 
கயலாடும் விழியாலே 
    காதலுடன் அவள்பார்க்க
மயங்கிவிட்ட இதயத்தால் 
   மன்மதனாய்க் கிறங்கிநின்றேன் 
வியக்கவைக்கும் மெல்லிசையாய் 
     மீட்டிடுவேன் அன்பாலே  !!!

சியாமளா ராஜசேகர் 

Tuesday, June 27, 2017

இதயத்தை அள்ளிடுதே ....!!!!


இளங்காலைப் பொழுதினிலே 
     இனியவளாம் மதிமறைய 
களங்கமின்றிக் குளித்தெழும்பும் 
     கதிரவனின் ஒளியினிலே 
பளபளக்கும் நதியலையும் 
      பையவந்து கரைதழுவ 
உளமெங்கும் புத்துணர்வில் 
      உற்சாகம்  பெருகிடுதே   !

பொன்னொளிரும் மேகங்கள் 
      புதுப்பெண்ணாய் விண்ணுலவத் 
தென்னையிளங் கீற்றதுவும் 
      தென்றலிலே அசைந்தாடக் 
கன்னலெனக் குரலெழுப்பிக் 
     கருங்குயிலும் சுதிகூட்ட 
இன்பவெள்ளம் பொங்கிடுதே 
      இதயத்தை அள்ளிடுதே !
      

Sunday, June 25, 2017

இதயம் நனையுமே ....!!!

அருண னுதிக்கு மழகிய தருணம்
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்

தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!


( இணைக்குறள் ஆசிரியப்பா )

கண்ணதாசா .....!!!



செந்தமிழைத் தாலாட்டும் சிங்காரத் தென்றல்நீ
சந்தங்கள் நடனமிடும் தமிழமுத தரங்கம்நீ 
சிந்துவகைச் சொந்தமெனச் சிந்திவிட்டச் சித்தன்நீ
அந்தமிலாப் புகழ்சேர்த்த அருட்பாவின் அத்தன்நீ !


கொட்டிடுமுன் நாவினின்றும் கொஞ்சுமணி வார்த்தைகள்
தொட்டுவிடும் காரணத்தால் தொலைந்துவிடும் கேட்குமுளம்
மெட்டுக்குப் பதம்பூட்ட மிரண்டுவிடும் சுரமேழும்
கட்டுக்குள் அடங்காதக் காட்டாறு போல்பாயும் !

நெஞ்சினிக்கும் காதலுக்கு நிழல்செய்யும் நித்திலம்நீ
பஞ்சபூதம் பாடிவைத்த பார்போற்றும் பாவலன்நீ
தஞ்சமென்றே உன்பாட்டில் சரணடைந்தோர் தலைவன்நீ
மிஞ்சிடவும் இயலாத மின்சாரக் கண்ணன்நீ !

கம்பரசம் ஊற்றெடுக்கும் கற்பனையின் களஞ்சியம்நீ
அம்புலியை மிகரசித்தே அழகுசெய்த சுவைஞன்நீ
செம்மொழியில் விளையாடும் தெவிட்டாத மலைத்தேன்நீ !
எம்மனத்தில் நீங்காமல் இடம்பிடித்த கவிஞன்நீ !

தத்துவங்கள் சொல்லிவைத்தாய் தகப்பனைப்போல் ஏட்டில்நீ
முத்துகளாய் ஒவ்வொன்றும் முன்நின்று வழிகாட்டும்
இத்தரணி வாழ்வினிலே எத்தனையோ இடர்வரினும்
சொத்தெனவுன் பாட்டிருக்க சுகமாகும் சோகமுமே !

பெய்கின்றாய் நித்தமும்நீ பேரருவி யாயெம்முள்
நெய்கின்றாய் பாட்டாலே நெஞ்சத்தின் மாசுகளை
தெய்வங்கள் விழைந்திடுமுன் தேன்பாட்டில் குடியிருக்க
பொய்யில்லா மெய்யோடு புகழ்வோமே புவியரசே !
சியாமளா ராஜசேகர்

Thursday, June 22, 2017

என்னோடு கலந்துவிடு !!!


மான்விழியாள் பார்வையிலே மைய லானேன் 
     மயங்கவைக்கும் மொழிவீச்சில் மௌன மானேன் 
தேன்கவிதை அவள்நினைவில் வனைய லானேன்
    தேவதையாள் கவினழகை வரைய லானேன்  
வான்மிதக்கும் வெண்முகிலே தூது செல்வாய்
    வண்ணமுடன் என்னுள்ளம் எடுத்துச் சொல்வாய்  
ஏன்படுத்து கின்றாளோ தெரிய வில்லை 
    என்னவளும் அறியாளோ அன்பின் எல்லை ??

அன்னநடை பயின்றுவரும்  அழகின் உச்சம் 
    அபிநயிக்கும் அசைவுகளில் தெரியும் மிச்சம் 
 பொன்மயிலாள் செவ்விதழோ மதுவின் கிண்ணம் 
     புன்சிரிப்பில்  தும்பைப்பூ தோற்கும் திண்ணம் 
கன்னத்தின் குழியழகில் வீழும் உள்ளம் 
     காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சி வெள்ளம் 
இன்னிசையாய் மனம்வருடும்  இதயப் பூவே 
     என்னோடு கலந்துவிடு மெய்யாய் இன்றே !



      

புன்னகைக்கும் ஒற்றைப்பூ ....!!!


பூங்காற்றுத் தவழ்ந்துவரப் புத்துணர்வில் முகம்மலர்ந்து 
பொலிவை யூட்டும் !
மாங்குயிலின் தேனிசையும் மனம்மயக்கி இதமளித்து 
மகிழ்வைக் கூட்டும் !
தூங்காத நினைவுகளும் சுகமாகக் கிளர்ந்தெழுந்து
சுமையை வோட்டும் !
ஓங்கிவளர் பசுங்கொடியில் ஒற்றைப்பூ புன்னகைக்கும் 
உள்ளம் வென்றே !!!

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
 ( காய் காய் காய் காய் மா தேமா )

சியாமளா ராஜசேகர் 

Tuesday, June 20, 2017

காதல் பிறந்தது ....!!!


கண்ணும் கண்ணும் கலந்த  போது
>>>காதல் பிறந்தது !
எண்ணம் முழுதும் அந்த நினைவே 
>>>இனிமை சேர்த்தது !
வண்ண கனவு  நாண மின்றி 
>>>வளைய வந்தது !
நண்பன் கூட தொல்லை யாக 
>>>நாளும் தெரிந்தது !

இணையைக் காண வில்லை யென்றால்
>>>இதயம் தவித்தது !
துணையைக் கண்ட பின்பு தானே 
>>>துடிப்பும் நின்றது !
அணைப்பில் தன்னை மறந்த உள்ளம் 
>>>அடங்க மறுத்தது !
பிணையைச் சேர்ந்த மானாய் மகிழ்ந்து 
>>>பெருமை கொண்டது !

மலர்ந்த பூவில் மதுவை உண்ணும் 
>>>வண்டாய்ப் பறந்தது !
கலந்த அன்பில் கனிந்தே உருகி 
>>>களித்துச் சிலிர்த்தது !
புலன்கள் ஐந்தும் அடங்க மறுத்தும் 
>>>புரிதல் தொடர்ந்தது !
சுலப தவணை முறையில் அச்சம் 
>>>துடைத்துப் போனது !

விழிகள் பேசும் காதல் கதையோ 
>>>வேகம் மிகுந்தது !
மொழிகள் மறந்த மௌனம் கூட 
>>>மோகங் கொண்டது !
வழியைத் தேடி இறையை வணங்க
>>>வரமும் கிடைத்தது !
பொழியும் மழையாய் நெஞ்சம் குளிர்ந்து 
>>>புனிதம் அடைந்தது .....!!!

சியாமளா ராஜசேகர்