வண்ணம் 107
***************
தனதன தானன தனதன தானன
தனதன தானன தனதானா ( அரையடிக்கு )
அறுபடை வீடுடை அறுமுக நாதனு(ன்)
அழகிய வேலினை நிதம்பாடி
அலைகளு மாடிடும் நுரைமலர் தூவிடும்
அகமகிழ் வோடினி துறவாடும் !
நறுமலர் மாலைக ளொடுமணி யாரமும்
நனியெழில் மேனியி லொளிவீச
நமனொடு போரிடு மடியவர் பேணிட
நடமிடு மாமயி லினில்வாராய்!
குறைகளை வாயென விழிகளில் நீரொடு
குமுறிடு பேதையர் வினைதீராய்
கொடியிடை யாளது குழையணி காதொடு
குலவிடு நேயனு னடிபேணும்
வறுமையில் வாடிடு மெளியவர் வாழ்வினில்
வதைபட வேயினி விடலாமோ
மழைவரு வேளையில் மயில்களு லாவிடு
மலைமிசை மேவிய பெருமாளே!
சியாமளா ராஜசேகர்
பாடியவர்.... அமெரிக்காவில் வசிக்கும் திரு. சங்கர ஐயர் அவர்கள்