Friday, October 11, 2019

பன்னிரண்டுசீர் விருத்தம் ...!!!

கருணைக் கடலென்று கருதி உனைநம்பிக்
கந்தா ஓடிவந்தேன் !
கவலை வறுத்தெடுக்கக் கண்ணீர் ஊற்றெடுக்கக்
கதறி அழுதுநின்றேன் !
இருளில் ஒளிதேடி ஏழை படும்பாட்டை
இறைவா அறியாயோ ?
இதயம் குளிர்விக்க அன்போ(டு) அரவணைக்க
இனியும் தயக்கமென்ன ?
மருதா சலனுன்னை மனத்தில் நினைத்தபடி
மலையி லேறிவந்தேன் !
வழியில் மயிலாட அதுதான் நீயென்று
மௌன மாய்ச்சிலிர்த்தேன் !
அருளைப் பொழிவதற்குச் சற்றும் மனமிலையா
அழகா இதுமுறையா ?
அடிமேல் அடிவிழுந்து துடிக்கு மிதயத்தை
அன்பால் வருடாயோ ?? 1.
வெள்ளைப் பட்டுடுத்தி நீல மயிலேறி
வீடு பேறருள
வெற்றி வேலேந்தி சேவற் கொடியோடு
விரைந்து வரவேண்டும் !
அள்ளும் அழகிலிரு வல்லி மாரோடும்
அன்னை தந்தையோடும்
அண்ணன் கணபதியும் துணையாய் உன்னுடனே
ஆடி வரவேண்டும் !
துள்ளி வருங்கோலம் விழிகள் கண்டவுடன்
துன்பம் விலகியோடத்
தொடரும் இன்பத்தில் உள்ளம் நெகிழ்ந்தபடிச்
சுகமாய் நனையவேண்டும் !
வள்ளல் உன்புகழைத் தெள்ளு தமிழில்நான்
வடித்து மகிழவேண்டும் !
வற்றாக் கவிமழையில் உன்னைக் குளிர்வித்து
வாழ்த்து பெறவேண்டும் !! 2.
கல்லாய் இருந்தாலும் கண்ட கண்களிலுன்
காட்சி கிடைத்துவிட்டால்
கள்ளம் அழிந்துவிடும் உள்ளம் தெளிந்துவிடும்
கவலை தோற்றோடும் !
சொல்லே எழும்பாமல் சும்மா இருப்பதுதான்
சுகமென் றுணருமுள்ளம் !
சுற்றி நடப்பதெல்லாம் அழுத்தம் தந்தாலும்
சுமையாய்த் தோன்றாது !
முல்லை மலர்போலும் முத்து நகைசிந்தி
முருகா வந்திடுவாய் !
மூல மந்திரத்தை ஓதும் அடியவரின்
மூளும் வினைதீர்ப்பாய் !
புல்லில் பனித்துளிபோல் நிலையில் லாவாழ்வைப்
புரிய வைத்திடுவாய் !
பொன்னை நிகர்த்தவுனைப் பொலிவில் சுந்தரனைப்
போற்றி வணங்குவனே !! 3.
கொஞ்சு தமிழ்பேசும் அடியார் மனங்களிலே
குமரா களித்திருப்பாய் !
கோல விழியாளின் பாகு கனிமொழியில்
குளிர்ந்து மகிழ்ந்திருப்பாய் !
கஞ்ச மலர்ப்பாதம் பற்றிப் பணிவோரைக்
கனிவாய்க் காத்திடுவாய் !
கழலில் சிலம்பொலிக்க ஆறு தலையளிக்கக்
கடம்பா ஓடிவாராய் !
தஞ்ச மடைந்தோரைத் தணிகை வேல்முருகா
தயவாய்த் தாங்கிடுவாய் !
தங்கத் தேரேறிப் பவனி வரும்போது
தமிழால் வாழ்த்திடுவாய் !
பஞ்சா மிர்தமென வாழ்வின் சுவைகூட்டிப்
பத்தர் உளங்கவர்வாய் !
பழனி மலைமீதில் தண்டா யுதபாணி
பாலா அருள்புரிவாய் !! 4.
அலைகள் முத்தமிடும் செந்தூர்க் கடலோரம்
அழகாய் வீற்றிருப்பாய் !
அசுர வதஞ்செய்து தேவர் குலங்காத்தே
அமைதி யாகநிற்பாய் !
தலைகள் ஓராறு கொண்ட அறுமுகவா
தகப்பன் சாமிநீயே !
தரும மிகுசென்னை கந்த கோட்டமெனும்
தலத்தில் உறைபவனே !
மலையில் முகிலிறங்கி மாயோன் மருகனுன்னை
வணங்கும் எழில்கண்டேன் !
மயில்கள் நடனமிடும் விராலி மலையிலுன்றன்
மயக்கும் காட்சிகண்டேன் !
நிலைத்த பத்தியினால் கன்னல் திருப்புகழை
நித்தம் பாடிடுவேன் !
நெஞ்சம் கசிந்துருகிப் பாட நீகேட்டு
நிறைவாய் ஆட்கொளவா !!! 5.
சியாமளா ராஜசேகர்

என்ன தவம் செய்தோம் ...!!!


என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
எழில்கொஞ்சும் திருநாட்டில் இப்பிறப்(பு) எடுத்தோம் !
பொன்னான பல்வளங்கள் நிறைந்தெங்கும் மிளிரப்
பூமித்தா யின்கொடையாய் இயற்கைவரம் பெற்றோம் !
அன்பொன்றே சிவமென்ற சித்தர்வாக்(கு) உணர்ந்தோம்
அன்னைதந்தை முதற்கடவுள் என்றுபணியக் கற்றோம் !
பன்மொழிகள் இப்புவியில் பவனிவந்த போதும்
பைந்தமிழே முதன்மையென்று மார்தட்டி நின்றோம் !!
பழங்காலக் கோயில்கள் கலைநயத்தைக் காட்டப்
பண்பாட்டில் சிறந்திருந்த பெருமையைமதித்தோம் !
அழிவில்லா இலக்கியங்கள் தமிழ்மொழியில் தோன்றி
அறநெறியை எடுத்தியம்ப நல்வழியறிந்தோம் !
வழுவில்லா இறையுணர்வால் பக்திநெறி யோங்க
வளமையான பனுவல்கள் வரமாகப் பெற்றோம் !
எழுச்சியுறச் செய்தபல கவிகளின் படைப்பை
எல்லையில்லா மகிழ்வுடனே இதயத்தில் பதித்தோம் !!
எத்தனையோ இருந்தாலும் நிறைவென்னுள் இல்லை
இன்றமிழில் எழுதுவதே இன்பமென்று ணர்ந்தேன்!
தித்திக்கச் சொல்லடுக்கிக் கவிவனைந்த போதும்
சிறிதேனும் அதிலுள்ளம் அமைதிகொள்ள வில்லை !
சத்தான மரபினிலே நாட்டமிகக் கொண்டு
தணியாத தாகத்தில் முதலடியெடுத்தேன் !
முத்தாக மணியாகச் சுடர்விட்ட குழுவை
முகநூலில் இனங்கண்டு மகிழ்விலுளம் பூத்தேன் !
மரபுகற்றுக் கொடுக்கும்பைந் தமிழ்ச்சோலை வாசம்
மனத்தையள்ள பாவலரின் சோலையிலி ணைந்தேன் !
வரமென்றே தான்கருதிப் பயிற்சியில்பங் கேற்று
மாவரத ராசனிடம் பாட்டியற்றக் கற்றேன் !
அரும்பாக்கள் சோலையிலே பூத்துமணம் வீச
அழகழகாய்ப் பலவகையில் மரபில்சமைத்தேன் !
தருவாகப் பயன்கருதாத் தமிழ்த்தொண்டு செய்யும்
தமிழ்மகனைக் கண்டதுமென் தவப்பயனால் தானோ ??
என்போன்றே பலருக்கும் தன்னார்வத் தோடே
எளிமையாகக் கற்பிக்கும் பாவலரின் சேவை
முன்பைப்போல் எஞ்ஞான்றும் அன்புள்ளத் தோடு
முழுவதுமாய் வற்றாமல் முகநூலில் தேவை !
கன்றுகளின் பசியறிந்து பால்புகட்டும் தாயாய்க்
கனித்தமிழை நமக்கூட்டும் நல்லாசான் கிட்ட
என்னதவம் செய்தோம்நாம் என்னதவம் செய்தோம்
இத்தருணம் நன்றிசொல்வோம் கையிரண்டைக் குவித்தே !!
சியாமளா ராஜசேகர்

சோலை விழாவுக்கு வரவேற்பு ...!!!

சுற்றத்து டன்நட்பும் சூழ்ந்திட வாருங்கள்
சோலை விழாவினைக் காண்பதற்கு !
நற்றமிழ் அன்னையும் வந்திடு வாளங்கு
நல்ல தமிழ்ப்பாக்கள் கேட்பதற்கு !!
நான்காவ தாண்டு விழாவினில் சென்னையில்
நாமொன்று கூடி மகிழ்ந்திடலாம் !
வான்மழை யும்பன்னீர்த் தூவிட இன்புற்று
வாழ்த்தாய் நினைத்துச் சிலிர்த்திடலாம் !!
பாவலர் காட்டிய பாதையி லேநாமும்
பைந்தமிழ்ச் சோலையில் கற்றறிந்தோம் !
ஆவலுடன் பட்டம் பெற்ற பூரிப்பினில்
ஆனந்த யாழினை மீட்டிடுவோம் !!
விருதுகள் பெற்றிடும் ஆன்றோரு ரைகேட்க
விருப்பத்து டன்நாமும் காத்திருப்போம் !
விருந்தாய வர்மொழி கேட்டதிலே உள்ளம்
மிக்க நிறைந்திடப் பூத்திருப்போம் !!
ஆண்டுதோ றும்பல புதுமைக ளைச்செய்யும்
ஆசானை யும்வாழ்த்திப் பாடிடுவோம் !
மூண்டெழும் அன்பினில் மூப்பில்லா அன்னையாம்
முத்தமி ழாளை வணங்கிடுவோம் !!!
மலராக வாருங்கள் ....... மணத்தோடு வாழ்த்துங்கள் !!!

தமிழ்த்தாய் சூடிய அணிகலன்கள் ...!!!

எழிலார்ந்த கன்னியவள் இளமையுடன் மிளிர்பவளாம்
மொழிகளுக்கே தாயவளாம் மூன்றாகத் திகழ்பவளாம்
அழகான இலக்கணத்தை அரணாக உடையவளாம்
அழிவில்லா இலக்கியங்கள் அணியாகக் கொண்டவளாம் !!
பொன்னொளிரும் மேனியிலே பொலிவான அணிகலன்கள்
அன்னையவள் தான்சூடி அகம்சிலிர்க்க வைத்திடுவாள்
இன்னமுதை யும்மிஞ்சும் ஈடில்லாச் சுவையுடையாள்
தொன்மைமிக்க அவள்மரபைத் தொல்காப்பி யம்பேசும் !!
அருந்தமிழாள் சூடியுள்ள அணிமணிக்கு நிகரேது
கருணையுள மார்மீது கவின்மிகுசிந் தாமணியும்
மருதாணி யிட்டகையில் மயக்குவளை யாபதியும்
திருவடியில் சிலம்பொலிக்கத் தேன்பாயும் செவியோரம் !!
ஒள்ளொலியாய்ச் சிற்றிடையில் ஒப்பில்லா மேகலையும்
உள்ளமள்ளும் பேரெழிலாய் உச்சியில்சூ ளாமணியும்
கொள்ளையழ காய்க்காதில் குண்டலகே சியுமாட
வள்ளுவனார் திருக்குறளும் மணிமகுட மாய்ச்சிறக்கும் !!
இரட்டைமணி மாலைசூடி இளமையாகச் சிரித்திடுவாள்
திருப்புகழும் வாசகமும் திருப்பாவை தேவாரம்
புருவங்கட் கிடையினிலே பொட்டாக அலங்கரிக்க
வரமருளும் தமிழ்த்தாயின் மலரடியைப் பணிவோமே ...!!!
சியாமளா ராஜசேகர்

சரண்புகுவாய் ....!!!

ஆயிரம் காக்கைக் கொருகல்லே போதும்
அடர்மரக் கிளைவிடுத் தோடும் !
தூயவன் கடைக்கண் பார்வையும் பட்டால்
தொடர்ந்திடும் துயர்பறந் தோடும் !
நோயினில் வீழ்ந்து பாயினிற் கிடந்து
நொந்துளம் நைந்தது போதும் !
தாயினும் சாலப் பரிந்தவன் காப்பான்
தாள்களில் சரண்புகு வாயே !!
சியாமளா ராஜசேகர்

உளம்‌ நனைக்கும்....!!!

சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் உடல்தழுவும்!
சறுக்கி மலையில் வழியு மருவி உளம்நனைக்கும்!
ஆர வாரத் தோடு கொட்டிச் சிலிர்க்கவைக்கும்!
அடங்காத் தாகங் கொண்டு குளித்த அகமலரும்!
ஈர மேகம் கீழி றங்கி வருடிவிடும்!
இயற்கை வனப்பில் தோய்ந்த இதயம் மயங்கிவிடும்!
வாரி யணைத்து முத்தங் கொஞ்ச மனந்துடிக்கும்!
வரமாய்க் கிடைத்த வாய்ப்புக் கென்றும் நன்றிசொலும்!!!


சியாமளா ராஜசேகர் 

வானவில்லைத் தூளியாக்கி ....!!!

எண்சீர் விருத்தம் ...!!!
*******************************
வானவில்லைத் தூளியாக்கி உன்னைத்தா லாட்டவா
வளையவரும் முகில்மடித்து விசிறியாக்கி வீசவா ?
தேனருவிச் சாரலிலே நனைந்தபடி யாடவா
தேவதையுன் கவின்சிரிப்பில் மனம்மயங்கிப் பாடவா ?
சீனியெனத் தித்திக்கும் கவிதைகளைச் சொல்லவா
சீராட்டி அன்பினாலே உன்றனுள்ளம் வெல்லவா ?
ஆனந்தம் பூத்துவரக் காதலோடு கிள்ளவா
ஆசையாலே என்னிரண்டு கைகளினால் அள்ளவா ??
சியாமளா ராஜசேகர்