Friday, June 7, 2019

வயலூரில் வாழுமழகே ...!!!


சிங்கார வேலவனே! சக்தியுமை பாலகனே !
தேவர்கள் போற்றுமெழிலே!
செவ்வேலால் செந்தூரில் கொடுஞ்சூர னையழிக்கச்
செஞ்சேவற் கொடியானதே !
தங்கரத மீதினிலே அழகாகப் பவனிவரும் 
சண்முகனே ! காங்கேயனே !
தகப்பனுக்கே உபதேசம் ஏரகத்தில் தான்செய்த
சரவணனே ! சுவாமிநாதனே !
திங்களொடு கங்கைநதி சடையணிந்த பெருமானாம்
சிவனாரின் அருட்செல்வனே !
தித்திக்கும் தெள்ளமுதாம் திருப்புகழில் மெய்மறந்து
திளைக்கின்ற கதிர்வேலனே !
மங்களமாய் வாழ்வளித்து மாங்கல்ய வரம்தந்து
வளம்கூட்டும் மால்மருகனே !
வள்ளியுடன் குஞ்சரியும் வலவிடமாய் இணைந்திருக்க
வயலூரில் வாழுமழகே !!
உதட்டளவில் சிரிக்கின்றேன் உள்ளத்தில் அழுகின்றேன்
உண்மையிதை அறியவில்லையோ ?
ஓங்காரப் பொருளோனே ! ஐங்கரனுக் கிளையோனே !
உடைந்தவுளம் உணரவில்லையோ ?
கதைமுடிந்து போகுமுன்னே கண்முன்னே காட்சிதரக்
கருணையொரு சிறிதுமில்லையோ ?
கள்ளமனம் கரைந்துவிடக் கவிபாடி அழைக்கின்றேன்
கனிவோடு கடைத்தேற்றவா !
சிதைமீதி லெரித்தாலும் மண்ணுக்குள் புதைத்தாலும்
திருவடிகள் பற்றிக்கொள்வேன் !
சினந்தாலும் கடிந்தாலும் காலெட்டி யுதைத்தாலும்
சிரித்தபடி தாங்கிக்கொள்வேன் !
வதைக்கின்ற வலிபோதும் கடைவழிக்குத் துணைவருவாய்
மயிலேறும் மாணிக்கமே !
வயலூரில் எழுந்தருளி அருணைமுனி பாடவைத்த
வடிவான தமிழ்த்தெய்வமே !!
அடியார்தம் மனஞ்சலிக்கச் செய்வதுன்றன் அழகல்ல
அறுபடையின் எழில்நாயகா !
அண்டிவந்தோர்க் காறுதலை அன்புடனே தரமறுத்தால்
அகிலமுனைத் தான்பழிக்குமே !
துடிக்கின்ற இதயத்தை மயிலிறகால் நீவிவிட்டு
துயர்துடைக்க ஓடோடிவா !
சுடரனைய திருமுகத்தின் கடைக்கண்ணைக் காட்டிவிடு
சுகம்பெற்றுன் துதிபாடுவேன் !
படிக்கின்ற திருப்புகழால் பக்குவத்தைப் பெற்றுவிட்டேன்
படியேறிப் பழநிவருவேன் !
பதம்பார்க்கச் சோதனைகள் தந்ததெல்லாம் போதுமப்பா
பதமலரில் சேர்த்துக்கொள்வாய் !
மடிதந்து சேயென்னைத் தாயன்பு கொண்டணைத்தால்
மகிழ்ச்சியுடன் உனைவணங்குவேன் !
வன்னிமர நீழலிலே வரமருளி ஆட்கொள்ள
வந்திடுவாய் வயலூர்வாழ்வே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment