Wednesday, February 13, 2019

வண்ணப்பாடல் - முருகன் திருப்புகழ்

சந்தக் குழிப்பு
**********************
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதானா
அட்டிகை யெழிலுற ஒட்டிய மணிகளின்
அற்புத வொளியினில் விழிகூச
அத்தனின் திருவுளம் பித்தென நிறைபவள்
அக்குற மகள்முகம் அழகோடு
பட்டொளி ரிதழ்களில் முத்தமிழ் நடமிடும்
பத்தினி யுளமுறை முருகேசா
பற்றுகள் விலகிடும் பொற்பத மலரது
பற்றிட வருவினை களைவோனே
சிட்டரும் முனிவரும் நித்தமும் பணிவொடு
செப்பிடும் பனுவலில் மகிழ்வோடே
தித்திமி திமியென மத்தள யிசையொடு
தெற்றென மயிலினில் வருவோனே
நட்புட னறுமுகன் நற்புகழ் மொழிபவர்
நற்றுணை யெனவிரு புறமாக
நச்சர வொடுநிதம் பற்பல வடிவினில்
நற்கதி தரவரு பெருமாளே .
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment