Wednesday, February 13, 2019

நிழலைத் தேடும் நிஜங்கள்

இமைப்போதும் சோராமல் கண்ணுக்குள் வைத்தே
***இமைபோலத் துன்பங்கள் அண்டாமற் காத்து 
நமைவளர்த்த பெற்றோரை வயதான போது
***நலம்வாழச் செய்வதுவே பிள்ளையர்தம் கடமை !
சுமையென்று கருதாமல் சுகவீன மடைந்தால்
***சுகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தே
அமைதியுடன் அவர்வாழ வழிவகுக்க வேண்டும்
***அன்றாடம் அவர்களுடன் அளவளாவ வேண்டும் !!
கொடும்வெயிலில் காய்ந்தாலும் கலக்கங்கொள் ளாது
***குளிர்ச்சியுடன் நிழல்தந்து களைப்பகற்றும் மரமாய்க்
கடுந்துயரம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டுக்
***கடுகளவும் பிள்ளைகளை நெருங்காமல் காப்பார் !
நடுக்கடலில் தத்தளிக்கும் நிலைவந்த போதும்
***நம்பிக்கை யொளியூட்டி அச்சத்தைப் போக்கித்
துடுப்பாகத் தானிருந்துக் கரையேற்றி விடுவார்
***தூணாக வலிமையுடன் தோள்கொடுத்து நிற்பார் !!
கள்ளமில்லா அன்புடனே பம்பரமாய்ச் சுழன்று
***காலநேரம் கருதாமல் வேலைகளைப் பார்ப்பார் !
முள்ளாகத் தைத்தாலும் காதில்வாங் காமல்
****முறுவலுடன் தன்பணியைச் செவ்வனேசெய் திடுவார் !
உள்ளவரை அவருழைப்பை உறிஞ்சிப்பி ழிந்தே
***உதவாத சக்கையெனத் தூக்கிப்பின் னெறிந்தால்
எள்ளிநகை யாடாதோ இவ்வுலகம் சொல்வீர்
***என்றேனு மொருநாளில் உணர்ந்திடுவீர் நன்றே !!
பாடுபட்டுச் சேர்த்தவற்றைத் தனக்கெனக்கொள் ளாமல்
***பங்குவைத்துப் பிள்ளைகட்குக் கொடுத்துவிட்டுப் பின்னாள்
கூடுவிட்டுப் பிரிந்துசென்ற உறவுகளை எண்ணிக்
***கொதித்தழுது மனம்நோகும் படிச்செய்தல் முறையோ ?
ஓடியாடி உழைத்தவர்கள் ஓய்ந்துவிட்ட நாளில்
***ஊன்றுகோலாய்த் தாங்கிடுதல் நம்கடமை யன்றோ ?
காடுகொண்டு போனபின்னே கதறியழு தென்ன
***காரிருளில் நிழல்தேடி அலைவதுபோல் தானே ??
எதிர்பார்ப்பே இல்லாமல் பேணிக்காத் தோரை
***எஞ்ஞான்றும் மதிப்போடு நடத்திடவே வேண்டும் !
முதியோரென் றேயவரைப் புறக்கணிக்க லாமோ ?
***முதுகெலும்பில் லாதவர்கள் செயும்செயல தன்றோ ?
மதிகெட்டுக் காப்பகத்தில் கொண்டுவிடும் கொடுமை
***மன்னிக்க முடியாத பாதகத்தி லொன்று !
கதியின்றி அன்பென்னும் நிழல்தேடும் நிஜங்கள்
***கடைசிவரை காப்பாற்றப் படல்வேண்டும் நன்றே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment