Saturday, April 29, 2017

தாய்மை ....!!!


பெண்மையைப் பெருமைப் படுத்துவது தாய்மை !
```````````````````````````````````````````````````````````````````````````````
பெண்ணாகப் பிறந்ததற்கே பெருமையுற  வேண்டுமம்மா
பெண்ணிற்குப் பலவடிவம் பிறவிதனில் இருந்தாலும் 
பெண்ணினமே நிறைவுகொளும் பெருமைமிகு வரமெதென்றால் 
பெண்மைக்கே உரித்தான பெரும்பேறாம் தாய்மைதானே !

கருவுற்ற நாள்முதலாய்க் கனவுகளில் மிதந்திருந்து 
கருணையுடன் முப்போதும் கண்ணிமைபோல் காத்திருந்து 
உருண்டாலும் உதைத்தாலும் உயிருருக அதைரசித்து 
விருப்புகளைப் புறந்தள்ளி வியக்கவைக்கும் தாய்மையொன்றே !

பத்துமாதம் சுமந்தவளும் பத்தியமும் தானிருந்து 
சொத்தாக வேகருதி சோர்வினிலும் சுகம்பெறுவாள் 
நித்திரையை மறந்தவளும் நெஞ்சினிக்க மலர்ந்திடுவாள் 
உத்தமியாள் தியாகத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்திடுவாள் !

புதிதாகப் புவியினிலே பூத்திட்ட மகவிற்கு 
உதிரத்தைப் பாலாக்கி உளமகிழ்ந்து புகட்டிடுவாள் 
துதிபாடி தெய்வத்தைத் துணைக்கழைப்பாள் நோயுற்றால் 
அதிசயமாம் தாய்மையதன் அடையாளம் பொறுமையேதான்  !

அன்பென்ற ஆயுதத்தால் அனைவரையும் கரைத்திடுவாள் 
தன்னைத்தான் அரைத்தவளும் சந்தனமாய் மணந்திடுவாள்
அன்னையெனும் உறவேதான் அவரவர்க்குக் கடவுளாகும் 
தன்னலமே சிறிதுமிலாத் தனித்துவமே தாய்மையாகும் !

பிழையேதும் செய்தாலும் பிள்ளைகளுக்(கு) எடுத்துரைத்து 
மழைபோல குளிர்விக்கும் மந்திரமும் கற்றிடுவாள் !
உழைத்தோடாய்த் தேய்ந்தாலும் உருக்குலைந்தே போனாலும் 
இழையோடும் பாசத்தில் இம்மியேனும் குறைவையாள் !

பிள்ளைகளுக்(கு) ஒன்றென்றால் பெற்றமனம் துடிதுடிக்கும் 
முள்தைத்துக் கிழித்தாற்போல் மொத்தமாக கசிந்துருகும் 
தள்ளாத வயதினிலும் தாயுளமே தவித்திருக்கும்   
எள்ளளவும் ஈடுசொல்ல இயன்றிடுமோ தாய்மைக்கு ?

தாய்மைக்கு நிகரென்றும் தரணியிலே ஒன்றுமில்லை 
தாயைப்போல் நல்லுறவு தாங்கிடவும் வேறில்லை 
தாய்மடிபோல் ஆறுதலைத் தரவல்ல(து) ஏதுமில்லை 
தாய்மையொன்றே பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்த்திடுமே !!

சியாமளா ராஜசேகர் 



No comments:

Post a Comment