Tuesday, April 19, 2016

கவிபோன்ற விழியாளே....!!!



கவிபோன்ற விழியாளே கற்கண்டு மொழியாளே
புவிவெல்லும் பார்வையினால் புன்னகையும் பூப்பவளே
தவிக்கின்ற நெஞ்சத்தின் தன்மையினை அறியாயோ 
செவிசாய்ப்பாய்ச் சற்றேனும் தெரிவிப்பாய் சம்மதத்தை !

அரும்பானக் காதலதும் அழகாக மலர்ந்திடுமோ 
மருதாணி யிட்டக்கை மன்னவனைத் தீண்டிடுமோ 
வருவாயே நளினமுடன் வளர்பிறையாய் வாழ்வினிலே 
திருநாளில் உன்கழுத்தில் திருநாணும் பூட்டிடுவேன்  !

அலங்கார நகைநட்டு அன்பளிப்பாய் நான்விரும்பேன்
கலங்காமல் ஆயுளுக்கும் காத்திடுவேன் கண்போலே 
நலம்வாழ வேண்டுகிறேன் நாயகியே வரந்தருவாய்  
நிலம்போலப் பொறுமையுடன் நித்தமுனைத் தாங்கிடுவேன் ...!!!

No comments:

Post a Comment