Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: outdoor, nature and water
தய்ய தனன தய்ய தனன
தய்ய தனன தனனானா (அறையடிக்கு )
அல்லில் விரியு மல்லி மலரி
னள்ளு மழகு மினிதாமே
அல்லல் விலகி யுள்ள மலரு(ம்)
அவ்வி தழத னொளிபோலே!
செல்ல மழலை வெல்லும் மனது
செய்யு மினிய குறும்போடே
செல்வ மிதென வில்ல முலவு
தெய்வ வடிவு மதுதானே !
இல்லை யெனவு முள்ள தெனவு
மெள்ளி நகையும் புரிவாரால்
எள்ளி னளவு மில்லை பயனு(ம்)
எவ்வ மினியு மறையாதோ
செல்லும் வழியி(ல்) ஒவ்வு முறவு
செய்யின் வளியி லிதமாகும்
செல்வி நினைவை மெல்லும் பொழுது
செவ்வி தழ்களும் மலராதோ ?
எவ்வம் - துன்பம்
செய் - வயல்
சியாமளா ராஜசேகர்

எழுசீர் வண்ண விருத்தம் ...!!!

எழுசீர் வண்ண விருத்தம் !!
*************************************
தய்ய தான தய்ய தான
தய்ய தான தானனா
அய்ய னோடு வெள்ளை வாசி
அல்லி லேயு லாவுமே !
உய்யு மாறு நல்ல சேதி
யுள்ள வாறு கூறுமே !
மெய்ய ரோடு செய்யு வேலை
வெல்லு(ம்) பாதை யாகுமே !
பெய்யு வான வள்ள லோடு
பிள்ளை யாக மாறுமே !
வாசி - குதிரை
சியாமளா ராஜசேகர்

கூவி யழைத்தேன் ...!!!


கூவி யழைத்தேன் குறைகளைய வாராயோ
பாவி மனம்படும் பாட்டை யறியாயோ
கேவி யழுதாலும் கெஞ்சி விளித்தாலும்
தாவி யணைக்கத் தயங்குவ தேனம்மா
ஓவியமாய் நெஞ்சி லுறைந்தவளே சொல்லம்மா
கோவி லடைத்தாலென்? கொண்டாடு வேன்மனத்துள்
ஈவிரக்கங் காட்டாம லேங்க விடலாமோ
தேவி யிதுமுறையோ தேரேறி வந்திடம்மா!!
வந்தாலுன் பாதம் வணங்கி வரவேற்பேன்
குந்தவைத்துப் பசியாறக் கூழூற்றித் தந்திடுவேன்
நந்தவனப் பூக்கொய்து நானுனக்குச் சூட்டுவேன்
முந்திவரு மன்பினால் முத்தமிட்டுக் கொஞ்சுவேன்
செந்தூரப் பொட்டிட்டுச் சிங்கார வூஞ்சலிலே
சந்தத்தில் பாட்டெடுத்துத் தாலாட்டித் தூங்கவைப்பேன்
அந்தக் கணத்தில் அழகு முகங்கண்டு
தங்க நிலவென்று தடவி மகிழ்வேனே!!
மகிழ்வில் அகம்மலர வாழ்த்திக் கவிவனைவேன்
அகிலத்தை யாட்சிசெயும் அம்மநின் அன்பெண்ணித்
திகைப்பில் அசையாச் சிலைபோலும் நின்றிருப்பேன்
சுகமான நித்திரையைத் தொட்டுக் கலைக்காமல்
நெகிழ்வில் விழிநனைய நெடுநேரம் பார்த்திருப்பேன்
மகளென்றன் பாசத்தில் மைவிழிகள் தான்மலர
நகையேந்தும் செவ்விதழால் நல்வாக்கு நீயுதிர்க்கப்
பகைவென்று விட்டாற்போல் பாவிநான் பூப்பேனே!!
பூப்போன்ற உள்ளத்தைப் பொங்க விடலாமோ
தீப்புண்ணாய் வெந்து சிதைய விடலாமோ
ஆர்ப்பரிக்கு மெண்ணத்தை யாற்றுப் படுத்தாயோ
சீர்ப்படுத்திச் சிந்தையைச் செம்மைப் படுத்தாயோ
வேப்பிலை சாற்றியுனை வேண்டித் துதித்திடுவேன்
ஈர்ப்புடன் பாடியு மின்னுமேன் தாமதமோ
காப்பாற்ற லுன்கடனே காளிகண் பாரம்மா !!
பார்த்த வுடனே பரவசத்தி லாடுவேன்
தேர்வந்து நின்றகணம் சேர்த்தணைத்துக் கொஞ்சுவேன்
கூர்விழிகள் கண்டு குளிர்ச்சியில் மெய்சிலிர்ப்பேன்
தீர்ந்தது துன்பமெனத் தித்திக்கப் பாடுவேன்
யார்க்கிவ் வரங்கிட்டு மென்றே யுருகுவேன்
ஊர்க்காக்கு முன்னை யுயிராய் நினைத்திருப்பேன்
சோர்வகன் றின்பங்கள் சூழக் களித்திருப்பேன்
மார்தட்டித் தாயென்று மாண்புடன் கூவுவனே!!

வண்ணப் பாடல் ...!!!


தத்தத் தானத் தனதானா
தத்தத் தானத் தனதானா
தொட்டுப் பேசித் திரியாதே
தொற்றுத் தொற்றிப் படுவாயே !
நட்பைத் தேடிச் செலும்போதும்
நச்சுத் தாவிப் பெருகாதோ ?
கட்டுக் காவற் படையோடே !
கற்பிப் போருக் குதவாயோ ?
பட்டுப் போகத் துணிவாயோ
பற்றற் றானைப் பணிவாயே !!
சியாமளா ராஜசேகர்

பாவலருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ...(07:04:2020)


தனதனன தனதனன தனதானா
தனதனன தனதனன தனதானா
கலைமகளின் மகனுனது தயவாலே
கவியெழுது மெளியவழி யறிவேனே
இலையெனவுன் மரபுகவி யருளாலே
இணையமதில் நிதமுலவி வனைவேனே
மலையில்விழு மருவியென மனம்பாயும்
வரதனுன தினியதமி ழுலகாளும்
நலம்பெருகி யுலகில்மகிழ் வொடுவாழ
நனையுவிழி யுடனிறையை நினைவேனே!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐🎉🎉🎊🎊🎂🎂🎈🎈🎁🎁🍫🍫🍟🍟🍩🍩

இனிய சந்தம் பொங்குதே ....!!!

காற்று வந்து காத லோடு
காதை யுரசும் போதிலே
நாற்று மாடு மழகில் மலரும்
நல்ல கவிதை நாவிலே
ஆற்று வெள்ளம் பெருகி யோட
அலைக ளெல்லா மாடுதே
ஊற்றெ டுக்கு மன்பி லின்ப
உறவி னிக்கும் நாளுமே !!
பூவில் வண்டு மதுவை யுண்டு
பொய்யு றக்கம் போடுதே
காவல் மீறி மானி ரண்டு
காத லுறவு கொள்ளுதே
தூவி மழைந னைத்த போது
தோகை மயிலு மாடுதே
நீவு கின்ற தென்ற லோடு
நெஞ்சம் மகிழ்வி லோடுதே!!
அந்தி மாலை மொட்ட விழ்ந்த
அழகு மலர்ம ணக்குதே !
அந்தி வான்சி வந்த காட்சி
அமைதி யாய்ம யக்குதே!
முந்தி வந்த பஞ்சு மேகம்
மூட வெயில்ம றைந்ததே!
இந்த விந்தை காணும் போது
இனிய சந்தம் பொங்குதே!!
( எழுசீர்ச் சந்த விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person

தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த தனதானா
கொஞ்சு கின்ற வான ரங்கள்
இன்பம் பொங்க வேம கிழ்ந்து
குந்தி யன்பி லேம யங்கி மரமீதே
குன்ற மெங்கு மேறி வந்து
வண்டி ருந்த வாழை யுண்டு
கொம்பி லும்ப லாக னிந்து தரைவீழ
அஞ்சி நின்ற தோசு ருண்டு
மந்தி சென்ற தோத வழ்ந்து
மங்கு மிங்கு மாக வம்பு செயும்போதே
அந்தி வந்து சாய வுஞ்சி
வந்த மஞ்சு வானில் முந்த
அன்பு ளங்க ளோடு தென்ற லுறவாடும்
இஞ்சி மஞ்ச ளோடு குங்கு
மம்க லந்த வாச மெங்கு
மென்ற நெஞ்சி லேக னிந்து களிகூடும்
என்று மொன்ற வேநி னைந்து
சந்த தம்சி வாய வென்றெ
னெந்தை நம்பி நீறணிந்து புகழ்பாட
நஞ்சை யுண்ட வீசன் மன்றி
லன்ப னென்று தானு ணர்ந்து
நந்தி யொன்றின் மீத மர்ந்து வரும்போது
நண்ப னென்று தோள ணைந்து
சம்பு வின்மு னேப ணிந்து
நன்றி பொங்க வேக ரைந்து விடுவேனே!!
சியாமளா ராஜசேகர்