Friday, May 24, 2019

விழித்தெழு பெண்ணே ....!!!

விழித்தெழு பெண்ணே ...!!!
*************************************
ஆணையும் படைத்த ஆண்டவன் தானே 
அவனியில் பெண்ணையும் படைத்தான் !
ஆணவத் தோடே ஆடிடு வோரை 
அடக்கிட ஏனவன் மறந்தான் ?
நாணமும் மடமும் அச்சமும் பயிர்ப்பும் 
நங்கையர்க் கழகெனச் சொல்வார் !
வீணரால் வாழ்வில்  வதைபடும் போது
வீறுகொண் டெழுவது சரியே !!

மானின மென்பார் மயிலின மென்பார் 
மங்கையே மயங்கிட வேண்டா !
தேனினு மினிய சொற்களா லீர்த்தே 
தேவைகள் நிறைவேற்றிக் கொள்வார் !
ஏனினும் தயக்கம் புறப்படு புயலாய் 
எரிமலை யாய்ப்பொசுக் கிடுவாய் !
நானிலம் போற்ற நன்னடை பழகி 
நற்றமிழ் மகளெனத் திகழ்வாய் !!

காமுகன் கையில் சிக்கிடில் வாழ்வு 
கந்தலாய்க் கிழிபடும் திண்ணம் !
ஆமையைப் போலே ஐந்தையும் அடக்க 
அமைதியாய் வாழ்க்கையும் சிறக்கும் !
தீமைகள் சூழ்ந்த உலகினில் நீயும் 
தென்றலாய்த் தவழ்ந்திட வியலா !
ஊமையாய் வாழ்ந்து பட்டது போதும் 
உண்மையை உணர்ந்திடு பெண்ணே !!

தோள்களில் சுமக்கும் சுமைகளெல் லாமே 
தோல்வியில் முடிவது மில்லை !
கோள்களை நம்பி முயற்சியை விடுத்தால் 
கொள்கையில் நற்பய னில்லை !
நாள்களும் நகரும் ஆண்டுகள் கழியும் 
நலம்பெற வழியெது மில்லை !
மீள்வது கடின மெனக்கரு தாமல் 
மீண்டெழ முயற்சிசெய் வாயே !!

இருளினைக் கிழித்துச் சுடர்விடும் விளக்காய் 
இல்லறம் நல்லற மாக்கு !
கருத்துடன் என்றும் கடமையைச் செய்து 
கனவுக ளைநன வாக்கு !
அருந்தமிழ் போற்றி அறநெறி பேணி 
அகந்தையை அடியொடு நீக்கு !
விரும்பிய வண்ணம் எதிர்நீச்சல் போட்டு 
வெற்றியை உன்வச மாக்கு !!

தடைகளைத் தகர்த்துச் சாதனை படைக்கத் 
தாமதம் இன்னுமேன் சொல்வாய் !
முடங்கிய காலம் முடிந்ததென் றெண்ணி 
முன்னேற்றப் பாதையில் செல்வாய் !
உடைத்திட வியலா நெஞ்சுரத் தோடே 
உயிர்ப்புடன் உலகையே வெல்வாய் !
விடியலைக் காணும் மகிழ்ச்சியில் துள்ளி 
விழித்தெழு ! விழித்தெழு !பெண்ணே !!

சியாமளா ராஜசேகர் 













No comments:

Post a Comment