Friday, January 13, 2017

பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று ...!!!


கடவுள் வாழ்த்து ...!!! 
````````````````````````````````` 
கற்பகவி நாயகனே! கந்தனுக்கு மூத்தோனே! 
பொற்பதம் பற்றியுனைப் போற்றிடுவேன் !- நற்றமிழில் 
வெண்பாக்கள் யான்புனைய வேண்டித் துதித்திடுவேன் 
வண்ணமுற ஆசி வழங்கு . 
அவையடக்கம் ...!!! 
``````````````````````````````` 
வெண்பா வெழுதிட மேடைதந்த மேன்மைமிகு 
வண்டமிழ்ப் பேரவை வாழியே ! - செண்டுமலர்த் 
தந்துன்னைப் பாராட்டித் தாய்த்தமிழா லன்புடன் 
வந்தனம் செய்வேன் மகிழ்ந்து . 

பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று ...!!! 
************************************************** 
மார்கழிக்(கு) ஓய்வளித்து மங்கலமாய்த் தைப்பிறந்தாள் 
சீர்மிகவே பொங்கல் திருநாளில் ! - ஏர்பிடிக்கும் 
நல்லுழவர் வாழ்வும் நலம்பெற வந்தனள் 
எல்லையிலா ஆனந்தம் ஏற்று . 1. 

தீயன யாவையும் தீயில் பொசுக்கிவிட்டுத் 
தூய மனத்துடன் சூரியனை - நேயமுடன் 
போற்றித் துதிக்க புகழோடு பொன்பொருளும் 
ஊற்றாய்ப் பெருகும் உவந்து . 2. 

முற்றத்தில் கோலமிட்டு முப்பக்கம் கல்லடுக்கிச் 
சுற்றமுடன் கூடிச் சுவையாகப் - பொற்புடன் 
புத்தரிசி பானையிலே பொங்கிவர, பூரிப்பில் 
சித்தங் குளிருஞ் சிலிர்த்து . 3. 

பொங்கிவரும் நேரத்தில் பொங்கலோ பொங்கலெனக் 
கொங்குமொழிப் பெண்டிர் குலவையிட - அங்கே 
மகிழ்ச்சிப் பெருக்கால் மனமதும் துள்ளிப் 
பகிர்ந்திடு மன்பினைப் பார் . 4 . 

மஞ்சள் குலையுடனே மாவிலைத் தோரணமும் 
கஞ்சமல ரோடு கரும்புவைத்துப் - பஞ்சுத் 
திரிபோட்டு நல்லெண்ணெய் தீபத்தை யேற்றிப் 
பரிதிக்குப் பொங்கல் படை .. 5. 

கூடிப் பகிர்ந்துண்டு கொண்டாடிக் கும்மிகொட்டிப் 
பாடிப் பரவசப் பட்டிடுவார் - தேடிவந்தே 
ஆசிபெற்றுச் சென்றிடுவார் ஆனந்த மாய்க்கழிப்பார் 
நேசிப்பார் அன்பில் நெகிழ்ந்து . 6. 

உழவினைப் போற்றிடும் உன்னத நாளில் 
பழந்தமிழர் வீரத்தின் பற்றும் - அழகாய் 
வெளிப்படும் மஞ்சு விரட்டாக, பாரோர் 
களிப்பினில் பூத்திடுவர் கண்டு . 7. 

மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சளுடன் பொட்டிட்டு 
தீட்டியகொம் பில்வர்ணம் தீட்டியதும் - சூட்டிய 
மாலையுடன் கம்பீர மாய்க்கால் சலங்கையுடன் 
வாலையு மாட்டும் மகிழ்ந்து . 8. 

வண்டிகளில் பூட்டிய மாடுகளின் வீதியுலா 
கண்கொள்ளா அற்புதக் காட்சியே !- பண்டைத் 
தமிழரின்பண் பாட்டைத் தரணியில் காத்தே 
இமிழ்தாய்த் தொடர்வோம் இனிது .9. 

பேரின்ப மீந்திடும் பேறென எண்ணவைக்கும் 
பாரினிலே மேன்மைமிகு பண்டிகையாம்!- பேரியலாய்ச் 
சாந்தமுடன் நற்றமிழர் சங்கமித்துக் கொண்டாடும் 
பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று . 10. 

No comments:

Post a Comment