Friday, November 9, 2018

உலகாளும் உமையவளே

உலகாளும் உமையவளே உன்னை யெண்ணி
***உழலுமெனை ஒதுக்காமல் காப்பாய் தாயே !
தலந்தோறும் உன்புகழைப் பாடி நின்றேன்
***தாயேவுன் அருள்பெறவே ஏங்கிநின்றேன் !!
சிலர்வாழ பலர்தாழச் செய்தல் நன்றோ ?
***சிறியேனைக் கடைக்கண்ணால் பார்த்தா லென்ன?
சிலையாக இருந்தாலும் சத்தங் கேட்டுச்
***சிரித்தபடி அரவணைக்க விரைந்து வாராய் !!
மலர்போலும் கவின்முகத்தில் மஞ்சள் பூசி
***மங்களமாய்க் குங்குமத்தில் பொட்டு மிட்டுக்
கலகலவென் றேகையில் வளைகு லுங்கக்
***கருங்குழலில் மல்லிகையின் மணமும் மிஞ்ச
வலக்கையில் திரிசூலம் ஏந்திக் கொண்டு
***வடிவான இடையில்மே கலையும் பூட்டிச்
சலங்கையொலி கொஞ்சிடவே சந்தத் தோடு
***சதுராடி வருமழகைக் காண வேண்டும் !!
குழையாடத் தோள்களிலே மாலை யாடக்
***குறுநகையும் இதழோரம் அழகாய்ப் பூக்க
அழைக்குமுன்னே ஓடோடி வருப வள்தான்
***அன்னையென்றே உனைக்காட்டிச் சிலிர்க்க வேண்டும்!
பிழையேதும் நான்செயினும் தண்டிக் காமல்
***பெற்றவளாய்ப் பொறுமையுடன் உணர வைத்து
மழைபோலும் நின்னருளைப் பொழிந்தே என்றன்
***மனவழுக்கைச் சுத்தமாய்நீ கழுவ வேண்டும் !!
மொழிக்குழறிக் கசிந்துருகிப் பாடும் போது
***முன்வினையால் படுந்துயரைக் களையா விட்டால்
பழிவுனக்கே வந்துசேரும் அறியா யோநீ
***பார்நகைக்கும், தாங்குமோவென் னுள்ள மம்மா !
இழிவாகப் பிறர்பேசும் முன்னர் வந்தே
***எளியேனை யுன்மார்போ டணைக்க வேண்டும் !
விழிமலர்ந்து தலைகோதி முத்த மிட்டு
***மென்விரலால் கண்ணீரைத் துடைப்பாய் தாயே !!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment