Thursday, March 9, 2017

நல்லரசு ...!!!

புதுசட்டத் துணையோடு 
மதுவிற்கத் தடைபோட்டு 
பொதுமக்கள் நலங்காப்பின் 
அதுவேநல் லரசாகும்  !

பணம்பண்ணத் துடிக்காமல் 
மணற்கொள்ளை யடிக்காமல் 
வணக்கத்திற் குரியோர்கள்
இணைந்தால்நல் லரசாகும் !

விவசாயம் தனைப்பேணி 
உவப்போடு தினம்வாழ 
தவறாமல் வழிகாட்டும் 
சுவடேநல் லரசாகும்  !

வஞ்சித்தாழிசை 

Tuesday, March 7, 2017

தேக்குமர உடலழகா ...!!!


தேக்குமர உடலழகா தேகங்கருத்த நிறத்தழகா
ஏக்கமுடன் காத்திருக்கேன் என்நிலைமை புரியாதோ ?
தூக்கத்திலும் உன்நினைவே தட்டித்தட்டி எழுப்புதடா 
பாக்குவெற்றிலை மாற்றியெனைப் பரிசம்போட வாராயோ ?

மாஞ்சோலைக் கிளிகளெல்லாம்  மையலுடன் கொஞ்சுதடா 
வாஞ்சையுடன்  தோகைவிரித்து வண்ணமயில் ஆடுதடா 
பாஞ்சலமும் இதமாக பக்கம்வந்து வருடுதடா 
ஊஞ்சலிலே இணைந்தாட உள்நெஞ்சம் விழையுதடா !

தேன்சொட்டும் தீங்கனியின் தித்திப்பும் கசக்குதடா 
வான்நிலவின் தண்ணொளியும் மங்கையெனைச் சுட்டதடா  
மான்விழியும் சோர்வுற்று மயங்கிடவே செய்யுதடா 
மீன்பிடிக்கச் சென்றவனே விரைந்துவர  வேண்டுமடா !

அந்திசாயும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே 
சிந்துகின்ற நிலவொளியில் நெஞ்சுருகிப்  பாடுகின்றேன் 
சொந்தமென வந்திடுவாய் சொக்கவச்ச மன்மதனே 
நந்தவனச் சாரலிலே நனைந்திடுவோம் இருவருமே !

சியாமளா ராஜசேகர் 

Monday, March 6, 2017

வாட்டமேனோ ...??



மான்விழியாள் கண்ணிரண்டும் வாடிநின்ற தேனோ
***மன்னவனைக் காணாமல் ஏங்குகின்ற தாலோ
தேன்மொழியாள்  வாய்திறந்து பேசாத தேனோ
***தேக்குமர உடலழகன் தவிக்க விட்ட தாலோ
ஏன்மறந்தான் என்றுமனம் கேள்விகளைக் கேட்க
***ஏமாற்றம் தாங்காமல் துடித்திடுதோ நெஞ்சம்
வான்நிலவு வருவதற்குள் வந்திடுவா னென்று
***வஞ்சியவள் மெல்லிதயம் ஆறுதலும் சொல்லும் !


கூந்தலிலே மல்லிகைப்பூ நறுமணத்தைக் கூட்டும்
***கோலமயில் கைகளிலே வளைசிந்து பாடும்
காந்தவிழி கவர்ந்திழுத்துக் காதலுடன் பேசும்
***கதைசொல்லும் கவினழகில் காவியமும் தோற்கும்
சாந்தமுடன் அஞ்சுகம்போல் சந்ததமும் கொஞ்சும்
***சங்கீத சுரங்களையும் சாரீரம் மிஞ்சும்
பாந்தமுடன் கொலுசொலியும் நடைக்குஜதி சேர்க்கும் \
***பளிங்குநிற பாதத்தில் மருதாணி பூக்கும் !

பாவாடை தாவணியில்  கொள்ளைகொண்டா ளுள்ளம்
***பாவையவள் வதனத்தில் என்றுமில்லை கள்ளம்
ஆவாரம் பூமேனிக் கேனிந்த சோகம்
***அன்புடனே மலர்தொடுக்கும் அணங்குக்கேன் வாட்டம்
நாவார  அவள்பாடும் மெல்லிசையைக் கேட்டால்
***நாயகனும் வந்தவளைக் கரம்பிடிப்பான் இன்றே
தேவாதி தேவர்களும் கூடிடுவார் வாழ்த்த
***தேனாறு பாயட்டும் இல்வாழ்வில் நன்றே !!!

மெட்டுக்குப் பாட்டு ! (கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை ....என்ற மெட்டு )

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

அன்பில் நெகிழ்ந்திருக்கும் 
நெஞ்சிலுன் 
பிம்பமே ....
என்றும் பெருக்கெடுக்கும் 
கங்கையின் வெள்ளமே ........

இதம் சேர்க்கும் 
இளங் காற்றின்
இசை நீயே தான் !

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

சின்னச்சின்ன முத்துபோல 
பால்முகத்தில் வெண்துளி 
கன்னக்குழி தாவியோடும் 
ஆனந்தத்தில் கண்துளி 

தேன்நிலா உன் மேனியின்
பேரழகில் சொக்குதே 
வான்முகில்  நீ பேசிட 
வாய்ப்பார்த்து நிற்குதே 

பொன்னம்மா ..... பொன்னம்மா ....
என்னம்மா ....
உன்னைக் கண்கள் தேடுதம்மா 

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

கால்வருடி முத்தம்கொஞ்ச 
பாய்ந்துவரும் வெள்ளலை
மேல்நனைத்து மெய்சிலிர்க்கப்
பாடிவரும் பூமழை 

மாங்குயில் உன் வார்த்தையில் 
மெய்மறந்து போகுமே 
பாங்குடன் உன் பார்வையில் 
பைங்கிளியும் பேசுமே 

பொன்னம்மா ....பொன்னம்மா ....
செல்லம்மா .....
உன்னில் மின்னல் வெட்டுதம்மா 

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

அன்பில் நெகிழ்ந்திருக்கும் 
நெஞ்சிலுன் 
பிம்பமே ....
என்றும் பெருக்கெடுக்கும் 
கங்கையின் வெள்ளமே ........

இதம் சேர்க்கும் 
இளங் காற்றின்
இசை நீயே தான் !

சியாமளா ராஜசேகர் 

Saturday, March 4, 2017

அந்தியிலே வானம் ...!!!


அந்திவானம் செம்மஞ்சள் அழகியாகத் தோன்றும்!
செந்தூரப் பொட்டாகச் செங்கதிரும் மின்னும்!
சந்திரனும் மெதுவாகத் தன்வரவைச் சொல்லும்!

பந்தலிலே விண்மீன்கள் பாங்காகப் பூக்கும்!

விந்தைமிகு அழகினையே விழிவிரிய நோக்கும் !
சிந்தையிலே குறுங்கவிதை தேனாறாய்ப் பாயும் !!

சியாமளா ராஜசேகர் 

Wednesday, March 1, 2017

புவியையும் வெல்வாளே....!!!

மண்ணிலே பெண்மை சக்தியி னுருவாய்
***மகிமைகள் புரிந்திடும் நாளும் !
எண்ணமும் செயலும் சிறப்புற விளங்கி 
***ஏணியாய் ஏற்றிடும் வாழ்வில் !
வண்ணமாய் மாற்றி அற்புத மாக 
***வசந்தமும் வீசிட வைக்கும் !
பெண்ணெனும் தீபம் வெண்ணிலா ஒளியாய்ப்
***பேணிடும் இல்லறம் நன்றே !

இன்முகத்  தோடே இருளினை யகற்றும் 
***இனியவள் என்றுமே பெண்தான் !
தன்னல மில்லாத் தகைமையை யுடையாள்
***தரணியில் நிமிர்ந்திடச் செய்வாள் !
துன்பமும் நேர்ந்தால் உரமுடை மனத்தால் 
***துயரினைத் துடைத்திடத் துணிவாள் !
பொன்னொளிர் முகத்தில் புன்னகை யோடு 
***புவியையும் வென்றிடு வாளே ....!!!

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
 (விளம் மா விளம் மா விளம் விளம் மா )


மெட்டுக்குப் பாட்டு ....!!!( கண்ணுக்கு மை அழகு மெட்டில் )

பீஸாக்கு சீஸ் அழகு 
பீச்சுக்கு ஐஸ் அழகு 
ப்ளீச்சிங்கில் ஃபேஸ் அழகு 

ஃப்ரீஹேரில் அவள் அழகு !

சோப்புக்கு நுரை அழகு 
சூப்புக்கு கார்ன் அழகு 
சீப்புக்கு பல் அழகு 
மூப்புக்கு டை அழகு !
கல்லாவில் காசழகு 
குல்லாவில் குரங்கழகு 
கல்லாவில் காசழகு 
குல்லாவில் குரங்கழகு 
முல்லாவின் கதையழகு 
புல்லாக்கில் மூக்கழகு ! ( பீஸாக்கு )

செருப்புக்கு ஹீல்ஸ் அழகு
இருமலுக்கு ஹால்ஸ் அழகு 
மருதாணி நெய்ல்ஸ் அழகு
மலைசிந்தும் ஃபால்ஸ் அழகு !
காலேஜ்ஜில் கேர்ள்ஸ்அழகு
கன்னியர்க்கு ஜீன்ஸ் அழகு 
காலேஜ்ஜில் கேர்ள்ஸ் அழகு
கன்னியர்க்கு ஜீன்ஸ் அழகு 
காதலர்க்கு ரோஸ் அழகு 
காவலர்க்கு கேஸ் அழகு ! ( பீஸாக்கு )