Saturday, March 30, 2019

வண்ண வண்ண வெண்பா விரி ...!!!

விண்பொய்க்க நீரின்றி வெந்துழல் கின்றோரின்
கண்ணீர் துடைக்கக் கருத்தாக - மண்ணுலகத்
தண்ணீர் தினத்தில் தவிப்படங்கும் வண்ணம்நீ
வண்ணவண்ண வெண்பா விரி.
பாலை நிலத்தெழிலைப் பச்சை வயல்வெளியை
நீலக் கடல்வனப்பை நீள்வனத்தைக் - கோலமிகு
விண்முட்டும் மாமலையை மெத்தப் புகழ்ந்தழகாய்
வண்ணவண்ண வெண்பா விரி.
மன்றாடி மைந்தனை வண்ணமயில் வாகனனைக்
குன்றத்தி லாடுங் குமரனை - அன்புடன்
எண்ணி வுளமுருகி இன்றேவெண் தாளெடுத்து
வண்ணவண்ணவெண்பா விரி.
புன்னை மரநிழலில் புல்லாங் குழலூதிக்
கன்னிய ருள்ளம் கவர்ந்திழுக்கும் - மன்னவனாம்
கண்ணன் எழில்முகத்தைக் கண்டதும் காதலொடு
வண்ணவண்ண வெண்பா விரி.
மலையேழு தாண்டியந்த மாதவனைக் கண்டால்
தொலைந்தோடும் வல்வினைகள் தோற்றே! - சிலைபோலும்
கண்மூடி மெய்மறந்த காட்சியை நெஞ்சிலெண்ணி
வண்ணவண்ண வெண்பா விரி.
( ஈற்றடி - கவிமாமணி ஹரிகிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

சிங்காரத் தோட்டத்தில் சேனியம்மா...!!!

சேனியம்மன் கொலுவிருக்கும் அழகியகற் கோட்டம்
***சீர்மிகவே அமைந்திருக்கும் சிங்காரத் தோட்டம் !
வானிலொளிர் வெண்மதியாய் அன்னையவள் தோற்றம்
***வற்றாத கருணையினால் வாழ்வில்வரும் மாற்றம் !
தேனினிய சொல்லெடுத்துப் பக்தியுடன் பாடத் 
***தேவியவள் குளிர்ந்துநம்மை ஆட்கொள்வாள் மெல்ல !
நானிலத்தில் நல்லவழி காட்டிடுவாள் என்றும்
***நம்பிடுவோர் குறைகளையத் துணைவருவாள் நன்றே !!
அன்னரத மீதேறி ஆனந்த மாக
***அண்டுவார்தம் உள்ளத்தில் குடியிருக்க வருவாள் !
புன்னகையில் முத்தொளிர ஒய்யார மாகப்
***பூரிப்பில் தனைமறந்து பொலிவோடு வருவாள் !
கண்ணாடி வளையோசை கலகலவென் றொலிக்கக்
***கனிவாக அணைத்திடவே களமிறங்கி வருவாள் !
பன்னீரும் சந்தனமும் வீதியெங்கும் மணக்கப்
***பரிவாக மஞ்சளொடு குங்குமமும் தருவாள் !!
வேப்பிலையின் வாசத்தில் நெகிழ்ந்தவளும் விரைந்து
***வெவ்வினைகள் வேரறுக்கப் பிரம்பெடுத்து வருவாள் !
பூப்போட்டு வணங்குபவர் வாழ்விலொளி யேற்றப்
***பூரணியாய்ப் பொன்முகத்தில் சிரிப்பேந்தி வருவாள் !
கூப்பிட்ட குரல்கேட்டுக் கடைக்கண்ணால் நோக்கிக்
***குழந்தையைப்போல் குதித்தோடி குறைதீர்க்க வருவாள் !
காப்பணிந்து தீச்சட்டி ஏந்திவரு வோரைக்
***காப்பதற்குக் கண்முன்னே கனலாக வருவாள் !!
சிம்மவாக னத்தினிலே சிங்கார மாகச்
***சிலைபோலும் பேரழகி சிலம்பொலிக்க வருவாள் !
பம்பையோடு பறையதிரத் தாளத்தோ(டு) ஆடிப்
***பாங்குடனே பிறைநுதலை உயர்த்தியவள் வருவாள் !
தெம்மாங்கு பாட்டோடு கும்மிகொட்டி னாலும்
***சிந்தைகுளிர்ந்து தலையாட்டிச் சிலிர்த்தவண்ணம் வருவாள் !
அம்மையவள் அழகுகண்டால் கூத்தாடும் நெஞ்சம்
***அடிபணிய விலகிடுமே மனத்திலுள்ள வஞ்சம் !!
காதுகளில் தோடாடக் கருங்கூந்த லாடக்
***கட்டிவைத்த பூச்சரமும் கொண்டைதனி லாட
மாதவளின் மெல்லிடையில் மேகலையு மாட
***மார்பினிலே மணிச்சரமும் பெருமையுட னாட
ஓதுகின்ற மந்திரத்தின் ஒலியிலுள மாட
***ஓங்கார மானவளின் திருவுருவைக் கண்டால்
வேதனைகள் விலகிவிடும் வெற்றிவந்து சேரும்
***மேன்மையுடன் மெய்ஞானம் கூடிவரும் நன்றே !!!
சியாமளா ராஜசேகர்

பறம்பு மலையும், பாரி வள்ளலும்

இயற்கைவளம் நிறைந்தமலை பறம்புமலை அம்மே
***இனியவனாம் வேள்பாரி ஆண்டமலை அம்மே !
அயர்வின்றி உழைக்குமக்க ளுள்ளமலை அம்மே 
***ஔவைமுதல் பலர்பாடும் அழகுமலை அம்மே !
நயமான மூங்கில்நெல் விளையுமலை அம்மே
***நற்சுவையாம் பனிச்சுனைநீர் கொண்டமலை அம்மே !
வியக்கவைக்கும் தேனடைகள் மிகுந்தமலை அம்மே
***வேர்ப்பலாக்கள் மணம்பரப்பி யீர்க்குமலை அம்மே !!
நாட்டுமக்கள் நலமொன்றே நெஞ்சத்தில் கொண்டோன்
***நாடிவந்தோர்க் கில்லையென்று சொல்லாமல் கொடுப்போன் !
கேட்பவர்க்குக் கேட்டவற்றை உடனளிக்கும் செம்மல்
***கிஞ்சித்தும் மறுத்தறியாப் பாரியென்ற வள்ளல் !
கோட்டைக்குள் இருந்துகொண்டே மூவேந்த ரோடு
***குன்றாமல் முற்றுகையை எதிர்கொண்ட கோமான் !
பாட்டெழுதும் பாணரைப்போல் வேடமிட்டுச் சென்று
***பாடியமூ வேந்தருக்கும் வேண்டியத ளித்தான் !!
முல்லைக்குத் தேரீந்த கொடைவள்ளல் பாரி
***மூவேந்தர் யாசிக்க நல்லுயிரை ஈந்தான் !
வெல்வதற்கு வழிசொன்ன கபிலருளம் நொந்து
***விரக்தியொடு தன்முடிவைத் தேடநினைத் தாலும்
வல்லவனாம் தன்நண்பன் பாரியிடம் கொடுத்த
***வாக்கைக்காப் பாற்றிடவே மனம்தேறி நின்றார் !
கல்மனமும் இளகிவிடும் தொடர்ந்தகதை கேட்டால்
***கண்ணீரும் கன்னத்தில் வழிந்தோடும் அம்மே !!!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....!!!( தேர்தல் ஸ்பெஷல் )

வண்ணப் பாடல் ...!!!
* * * * * * * * * * * * * * * * *
சந்தக்குழிப்பு ...!!!
* * * * * * ** * * * * * *
தனதனன தான தனதனன தான
தனதனன . . . . தனதானா
அவரையிவர் சாட யிவரையவர் சாட
அரசியலின் வேத . . . . . மிதுதானோ ?
அடிபிடியு மாக நிதமுருளு மானால்
அமைதியினி யேது . . . . . பகர்வாயே !
செவிகசியு மாறு பிறழுமொழி யோடு
சிறுநரிக ளாக . . . . வெறியோடே !
செலுமிடமெ லாமு மெதிரணிக ளோடு
தெறுதலுடன் மோதல் . . . . . முறைதானோ ?
உவகையுறு மாறு மிகவதிக மாக
உறுதிமொழி வீச . . . . . லழகாமோ ?
ஒருசிறிது மேனும் பணவெறியி லாத
உயர்தலைமை நாடி . . . . . யினிசேர்வாய் !
கவனமுடன் போட விரல்நுனியை நாடு
கறைகளினி மாறு . . . . . மெளிதாமே !
கடமைமற வாது நடுநிலைமை யோடு
கவலைகளு மோட . . . . . விரைவாயே !!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ....!!!


வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன.  . . . . .  தனதானா


கிழக்கி லேயெழு ஞாயிறு  பேரொளி 
   வட்டத் தினையிரு கண்களு முண்டது
     கிடுகிடு கிடுவென இருளது விலகிடு . . . . மதிகாலை !
கிறுக்கி னேனொரு பாடலை யாவலில்
     ஒற்றைக் கதிரதை நெஞ்சமும் வென்றது 
     கிளுகிளு கிளுவென எழுதிய கவிதையு . . . . மிதுதானே !
செழித்த சோலையி லேதிகழ்  வாவியில் 
     மெத்தக் கனிவோடு கெண்டையி ரண்டுடன்
     சிறுகயல் மலரொடு குலவிடு மழகினில் . . . . . நனைவேனே 
தெறித்து நீரலை மேனியி லேபட 
      முத்துச் சரமென நெஞ்சில்வ ழிந்ததன் 
       திகழொளி விழிகளி னிமைகளை வருடிடு . . . . . மிதமாமே !
வழக்க மாயிது தான்நித மேகிடும்
     சுற்றிக் குளமதில் வண்டுப றந்திடும் 
     மழைவரு பொழுதினில் மலரித ழடியினை . . . . . யதுநாடும் !
வருத்த மேயிலை யோவெனும் பார்வையில் 
      வெட்கப் படுமலர் கண்டுநெ கிழ்ந்திடும் 
      மதுவுண மொகுமொகு மொகுவென வொலிசெயும் . . . . . வடிவோடே !

உழைக்கு மேருழ வோரது காளைகள்
     பட்டிக் கதவுதி றந்திட வந்திடும் 
     ஒலியது கலகல கலவென  விருசெவி . . . . . களில்மோதும்
உளத்தில் லோடிடு மாவலி மாறிட
      நத்தத் துடனவர் சென்றுதொ டர்ந்திட 
      உழவரி னுயர்தொழி லிதுவென மனமது . . . . மகிழாதோ ?

சியாமளா ராஜசேகர் 

Tuesday, March 19, 2019

வேர்த்திரள்....!!

வேர்த்திரள் ....!!!
* * * * * * * * * * * * 
அடர்வனத்தில் மரமானேன் அமைதியுடன் வாழ்ந்திருந்தேன் 
கடவுளுக்கு நன்றிசொன்னேன் கானகத்தில் படைத்ததற்கு !
படர்ந்தவிந்த உலகினிலே பகுத்தறியும் மானுடரின் 
இடர்களைய முடிவெடுத்தேன் இயன்றவரை இனத்துடனே !!

பல்லுயிர்க்கும் புகலிடமாய்ப் பயனளிக்கும் வனத்தினிலே 
நல்லதொரு துணையெனவே நலமளித்துக் களித்திருந்தேன் !
இல்லையெணா(து) உயிர்வளியை ஈந்துதவி புரிந்திருந்தேன் 
பொல்லாங்கு நினைப்போரைப் புன்னகையால் வென்றேனே !

நிலச்சரிவு நிகழாமல் நிமிர்ந்தபடி நிறுத்திவிட்டேன் 
அலைக்கழிக்கும் மண்ணரிப்பை அடியோடு தடுத்துவிட்டேன் 
சலனத்தால் மிகக்குளிர்ந்து தருவித்தேன் வான்மழையை 
மலரனைய மென்மனத்தில் மௌனமொழி பகர்ந்தேனே !

விலங்குகளும் பறவைகளும் விளையாடும் களமானேன்
தலைமகளாய்க் கானகத்தில் தண்ணிழலில் அரவணைத்தேன் 
நிலையில்லாப் பிறவியென நினைத்ததில்லை கனவினிலும் 
வலைவீசிக் கொண்டுசெல வந்தானோ கூற்றுவனே !

வெண்சுருட்டை அணைக்காமல் வீசிவிட்டுச் சென்றவனால்
கண்பார்க்கும் நேரத்தில் கனல்பற்றி எரிந்ததம்மா !
விண்முட்ட உயர்ந்தவென்றன் வேர்த்திரளும் அழிந்ததம்மா !
புண்பட்டு மாய்ந்தேனே புகையோடு கரைந்தேனே ! 

பாவியரே உம்மாலே பயனற்றுப் போனேனே 
ஆவியெலாம் துடிக்கிறதே அனைத்துயிரும் கருகினவே !
ஏவியவர் யார்யாரோ ? இறைவாநீ தானறிவாய்
தீவினையைச் செய்தவர்க்குத் தீர்ப்பளிக்க விரைவாயே !!

சியாமளா ராஜசேகர் 

உலக தூக்க தினம் ...!!!

இமைக்கதவைச் சாத்தியதும் தழுவிக் கொள்ள
***இதமாக நீவேண்டும் களைப்பை வெல்ல!
சுமைதாங்கு முள்ளத்தின் அழுத்தம் போக்கச்
***சுகமாக இரவினிலே வருவாய் காக்க !
குமுறவைக்கும் கவலைகளை மறக்கடிக்கக் 
***குழைவாக மஞ்சத்தில் கருணை யோடே
அமைதியுடன் விடியுமட்டும் தாயைப் போலே
***அரவணைக்கும் தூக்கமேநீ என்றும் வாழி !!
சியாமளா ராஜசேகர்