Wednesday, March 11, 2015

நிலையென்று மாறுமோ ....???





இனம்விட்டு மணமுடித்தால் உறவினின்று ஒதுக்கிடுவார் 
சினங்கொண்டு பொறுமையின்றி பழிவாங்கத் துடித்திடுவார் 
மனங்கொத்தி ரணமாக்கி வலிகண்டு உளம்மகிழ்வார்
அனல்மேலே புழுபோலே துடிப்பதையும்  ரசித்திருப்பார்  !

துவண்டாலும் சரிந்தாலும் அரவணைக்க மறுத்திடுவார் 
கவலையிலே உழன்றாலும் கடுகளவும் மனமிரங்கார் 
சவமாகிக் கிடந்திடினும் கரையாது இறுகிநிற்பார் 
புவனத்தில் கலப்புமணம் எளிதாகும் தினம்வருமோ ....???

Tuesday, March 10, 2015

அடடாவோ அடடா ...!!





மலரிதழில் பனித்துளியும் அசையாது அமர்ந்திருக்கும் 
மலைமுகட்டில் முகில்படுத்து அழகாகத் துயிலணையும் 
இளந்தென்றல் இதழ்வருட அரும்புகளும் மொட்டவிழும் 
இமயகிரி உறைபனியும் இறைவனையே உணரவைக்கும் !

முகில்குளிர்ந்து பொழிமழையில் புவிசெழித்து வளங்கொழிக்கும்
மழைநீரில் மரங்குளித்து தலைசொட்ட நனைந்திருக்கும்
மழையுறிஞ்சும் நிலத்தினிலே பயிர்களெல்லாம் செழித்திருக்கும் 
மழைபொழிந்து முடிந்தபின்னே கவின்காளான் குடைபிடிக்கும் !

கருமேகந் திரண்டிருந்தால் மயில்தோகை விரித்தாடும் 
கவினருவி கவிபாடிக் களிப்புடனே குதித்துவிழும் 
கனிபழுத்துத் தருக்களிலே கிளிகொய்யக் காத்திருக்கும் 
நதிக்கரையில் கொக்குகளும் ஒருகாலில் தவமிருக்கும் ! 

கிழக்கினிலே உதிக்கையிலே கதிரவனும் விழிசிவக்கும் 
பரிதிமுக தரிசனத்தில் கமலமலர் இதழ்விரிக்கும் 
மதிதவழும் வழியெங்கும் விண்மீன்கள் கண்சிமிட்டும் 
எழுவண்ண வானவில்லும் அலங்கார வளைவமைக்கும் !

வயல்வெளியும் குளிர்ச்சியுடன் பசுமைதனைப் பரிசளிக்கும் 
வசந்தருது பிறந்ததுமே உதிர்ந்தமரம் துளிர்த்துவிடும் 
கடலலைகள் கரையோரம் மிதந்துவந்து நுரைதள்ளும் 
இசைபாடும் அலையோசை இதமாக உளங்கிள்ளும் !

இயற்கையொடு மனமிணைந்து வியப்புடனே சிலிர்த்திருக்கும் 
அடடாவோ அட!வெனவே  அணுஅணுவாய்த் தினம்ரசிக்கும் 
இயற்கையிலே இறைகண்டு விழிகசிந்து நெகிழ்ந்திருக்கும் 
அடடாவோ அடடாவாய் அதிசயித்துத் தலைவணங்கும் !!

Friday, March 6, 2015

நாளைய தமிழும் தமிழரும்




தமிழுக்கென்ன? சிறந்திருப்பாள் 
தமிழர்நாவில் தவழ்ந்திருப்பாள் 
விண்ணும்மண்ணும் உள்ளவரை 
வியக்கும்வண்ணம் வாழ்ந்திருப்பாள் ! 

ஐம்புலனில் கலந்திருப்பாள் 
ஐம்பாவில் மகிழ்ந்திருப்பாள் 
செம்மொழியாள் உயர்ந்திருப்பாள் 
செருக்குடனே வலம்வருவாள் ! 

இலக்கியத்தால் புவியீர்ப்பாள் 
இன்சுவையால் மனம்வெல்வாள் 
பிறமொழிகள் புறந்தள்ளி 
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவாள் ! 

மாற்றம்வந்து மானுடரின் 
மாயத்திரை விலக்கிவிடும் 
தமிழ்ப்பாவே பாவாகும் 
தமிழ்மொழியே பாராளும் ! 

உலகத்தமிழர் ஒன்றிணைவர் 
உரிமையாவும் மீட்டெடுப்பர் 
உயர்பதவி வகித்திருப்பர் 
உலகோர்தரத்தில் முன்னிருப்பர் ! 

பாரம்பரியம் போற்றிடுவர் 
பாரினில்நற் பேரெடுப்பர் 
கலாச்சாரம் காத்திடுவர் 
கன்னித்தமிழால் களிப்புறுவர் ....!! 

நினைவில் அவள் ....!!




குறுநகை பூக்கும் குமரியின் கன்னம் 
சிறுவிரல் தீண்ட நகும் . 

வெட்கத்தில் பாவை வதனம் சிவந்திடும் 
பெட்டிக்குள் மாதுளைமுத் தாய் . 

கிள்ளைமொழி பேசியே கிள்ளுவா லுள்ளத்தைத் 
தள்ளா டிடுமே மனம் . 

மருதாணி யிட்ட மடந்தையின் கைகள் 
குருதிபோல் தோன்றும் சிவந்து . 

செங்கனியின் தீஞ்சுவையோ செவ்விதழின் தேன்சுவையோ 
நங்கையிவள் முத்தச் சுவை . 

மையல் நகையொடு மைவிழியாள் நோக்கிட 
பையவே காதலரும் பும் 

பின்னலில் சூடிய பிச்சிப்பூ வாசத்தில் 
தன்னை யிழக்கும் மனம் 

முத்துப்பல் சிந்திடும் மோகனப் புன்னகைப் 
புத்தம் புதுமல ராய் . 

ஏகாந்த வேளையில் ஏந்திழையின் எண்ணமே 
பாகாய் இனிக்கும் ருசி . 

நாணச் சிரிப்பும் நளின நடையழகும் 
காணக் கிடைக்கா வரம்
 

       ( குறள் வெண்பாக்கள் )

Thursday, March 5, 2015

ஒய்யாரச் சூரியனே !!





ஒப்பனை செய்ததார் ஒய்யாரச் சூரியனே 
அப்பப்பா கண்டேன் அதிசயமே - வெப்பந்
தணிக்க இறங்கினையோ தண்ணீருள் இன்றேல் 
பணிமுடிந்து விட்டதோ சொல் ?

Wednesday, March 4, 2015

அலையாலயம் ....!!





அலைகடலில் பள்ளிகொண்ட ஆலவனை வேண்ட
அலையமைத்த கோயில் அழகு ! -அலைமகளும் 
மாதவனும் சேர்ந்தே மகிழ்வார், கதிர்விரித்த
ஆதவனின் கண்பார்வைப் பட்டு

மஞ்சள் நிலவே ....!!!





மஞ்சளில் நீராடி மங்களமாய்ப் போவதெங்கே 
அஞ்சாது ஒற்றையாய் அந்தரத்தில் - கொஞ்சிடவே 
ஆதவனும் அன்பாய் அதிகாலை வந்திடுவான் 
தூதனுப்பு மேகத்தை நீ !