Monday, August 3, 2020

திருமண வாழ்த்து ...!!!

Image may contain: 3 people, people standing and suit


திருமண வாழ்த்து ....!!!
மணமக்கள்
Dr. K. திலோத்தமா
Dr. A. பால அருண்
நாள்: 24 : 05 : 2020
குறித்தவண்ணம் நன்னாளில் குலசாமி துணைநிற்க
இறையருளால் நடக்குமிந்த இனியமண விழாவுக்கு
மறவாமல் வந்திருந்து வான்மழையும் பூத்தூவி
நிறைவான வாழ்த்துகளால் நெஞ்சத்தைத் தான்நனைக்கும் !!
ஊரடங்கு நீட்டிப்பால் ஊர்த்திரள வாய்ப்பின்றி
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக வேநடக்கும்
சீர்மிக்க திருமணத்தைத் தேவர்களும் கண்டிடவே
பார்போற்றும் தென்காசி பதிநோக்கிப் படையெடுப்பர் !!
வாழ்த்துகளால் மனம்நிறைந்து மணமேடை காண்கின்றாய்
காத்திருந்த நாள்கனியக் கணவனுடன் இணைகின்றாய்
பூத்தவுளம் சிலிர்த்தவண்ணம் பொலிவோடு விளங்குகின்றாய்
பேத்தியுனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன் !!
மங்கலமாய் மலர்மாலை மஞ்சளுடன் குங்குமமும்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே புன்னகையும் அணிசேர்க்கச்
செங்கமலம் போலமுகம் சிவந்தழகாய் வெட்கத்தில்
தங்கமகள் நடைபயின்று தன்மையுடன் வருகின்றாள் !!
பாலஅருண் அருகினிலே பைங்கொடியாள் திலோத்தமாவும்
கோலமயில் போலழகாய்க் குளிர்நிலவாய் மலர்ந்திருக்க
மேலுலகோர் வாழ்த்துகளும் மேடையிலே எதிரொலிக்கக்
காலையிந்தத் திருப்பூட்டு கண்டுள்ளம் பூக்கின்றோம் !!
பெற்றோர்கள் முன்னிலையில் பெரியோர்தம் ஆசியுடன்
வெற்றிமாலை தோள்சுமந்து மேன்மையுடன் வாழியவே
கற்றறிந்த மணமக்காள் காலமெல்லாம் இளமையுடன்
நற்றமிழும் இனிமையும்போல் ஞாலத்தில் வாழியவே !!
சியாமளா ராஜசேகர்

கள்ளழகர் குரல் ...!!!

கள்ளழகர் குரல்...!!!
***********************
மாவிலையும் தோரணமும்
வழியெங்கும் காணவில்லை
பூவைத்துப் பட்டுடுத்திப்
பூவையரும் உலவவில்லை
தாவிவரும் மக்களலை
தரைமீது தெரியவில்லை
பாவியந்தக் கொரோனாவால்
பாதையெல்லாம் பாலையாச்சே!
தேர்சுற்றி வரவில்லை
திருவீதி வழிதனிலே
ஊர்திரண்டு கொண்டாடும்
ஒப்பில்லாத் திருமணத்தைப்
பார்ப்பதற்கு முடியாமல்
பரிதவிப்பில் நானிருந்தும்
சீர்மிகுந்த மதுரைக்குத்
தேடிவர இயலவில்லை!
பளபளக்கும் பொற்பரியில்
பட்டுடுத்திப் பவனிவர
அளவில்லா மகிழ்வுடனே
அழகர்நான் காத்திருந்தேன்!
களங்கத்தைக் கற்பித்த
கரோனாவால் சித்திரையில்
வளம்நிறைந்த வழியெங்கும்
மருந்துக்கும் ஆளிலையே!!
விடக்கிருமி அச்சத்தால்
வீடடங்கிக் கிடக்கின்றீர்
கடவுளரின் திருக்கோயில்
கதவடைத்து வைத்துவிட்டீர்
மடைதிறக்க வழியில்லை
வைகையிலும் வெள்ளமில்லை
தடைதாண்டி மக்களின்றித்
தனித்துவர மனமில்லை !!
இந்நிலைமை மாறிவிடும்
இடர்யாவும் தீர்ந்துவிடும்
நொந்தவுளம் தேற்றிடுவேன்
நோய்த்தொற்றை அழித்திடுவேன்
சந்தனமும் பன்னீரும்
சாலையெலாம் மணந்திருக்க
வந்திடுவேன் புரவியேறி
வரும்வருடம் உமைப்பார்க்க!!
சியாமளா ராஜசேகர்Image may contain: text that says "RA"

Friday, May 8, 2020

மதுக்கடய தெறந்துவச்சி...!!!

மதுக்கடய தெறந்துவச்சி
மக்களெலாம் கூடவச்சி
மரணபயம் காட்டுதடா நம்மரசு - அட
வழிவிடாது சனம்திருந்த இவ்வரசு ( மதுக்கடய)
தொத்துசுத்தும் வேளையில
தொடங்கலாமா விற்பனைய
தொல்லைவந்து சேர்ந்திடுமே தெரியாதோ - அட
தொந்தரவு நாட்டுக்குத்தான் புரியாதோ? (மதுக்கடய)
காவலரு தொணையோட
கல்லாநிரப்ப போறாய்ங்க
கால்வயிறு கூடயினி நிரம்புமா ? - ஏழக்
கண்ணீரில் கொரோனாவும் கரையுமா ?? ( மதுக்கடய)
சியாமளா ராஜசேகர்

நீடு வாழ வைப்பாயா ??



Image may contain: 1 person

பாசக் கயிற்றை வீசி வீசிப்
பாரில் உயிர்கள் பறிக்கின்றாய் !
ஓசை யின்றி உலகைச் சுருட்ட
ஓட்டி (OT) நாளும் பார்க்கின்றாய்!
நாசம் செய்ய நினைத்த பின்னும்
நமனே! உன்னை கேட்கின்றேன் !
நேசக் கரத்தை நீட்டி எம்மை
நீடு வாழ வைப்பாயா ??
கணக்குப் பார்க்கும் சித்ர குப்தன்
கைகள் வலித்துக் களைத்தானே !
பிணக்கு வந்து சேரும் முன்பு
பிரிவைச் சற்றே எண்ணிப்பார் !
இணக்கத் தோடு கொரோனா தொற்றை
இன்றே ஒழித்துக் கட்டிவிடு!
சுணக்க மின்றிச் செய்தா லுன்னைச்
சுற்றஞ் சூழ வணங்கிடுவோம்!
சியாமளா ராஜசேகர்

செவிலியரின் நிலையிதுதான் !!

Image may contain: 1 person, indoor

படபடப்பா யிருந்தவரைச் சோதித்துப் பார்த்தேன்
பரிவோடு பேசியவர் பயம்தெளிய வைத்தேன்!
கடமைக்குச் செய்யாமல் தந்தையைப்போல் எண்ணிக்
கனிவோடு கவனித்துப் பணிவிடையும் செய்தேன் !
தொடர்சிகிச்சை யளித்துவந்தும் பயனேது மில்லை
சுயநினைவு திரும்பாமல் திரும்பாவூர் சென்றார் !
திடமான என்மனமு முடைந்துவிட்ட தின்று
செவிலியரின் நிலையிதுதான் அறியீரோ சொல்வீர்!!
சியாமளா ராஜசேகர்

விடை சொல்வாய் கூற்றுவனே ...!!!

விடுதலைக்கு வழியின்றி
வீட்டுக்குள் சிறைபட்டோம்!
கடுகளவும் கருணையிலாக்
கரோனாவால் துன்புற்றோம்!
தடுப்பதற்கு முடியாமல்
தவிப்புடன்நாள் கழிக்கின்றோம் !
அடுக்கடுக்காய் உயிர்ப்பலியால்
அனுதினமும் துடிக்கின்றோம் !!
கொடுமரக்கன் புவிதனிலே
கொலைவெறியோ டுழல்கின்றான் !
தொடுவாரைத் தான்பற்றித்
தொடர்வேட்டை நடத்துகின்றான்!
நடுங்கவைக்கும் உயிர்பயத்தை
நட்டுவிட்டுச் சுழல்கின்றான் !
படுகுழிக்குள் தள்ளிவிட்டுப்
பாவியவன் நகைக்கின்றான் !!
முடுக்கிவிட்ட தாராரோ
முடிவிதற்கு வாராதோ ?
எடுத்ததெல்லாம் போதாதோ
இடர்ப்பாடு தீராதோ ?
விடுவிக்க யார்வருவார்
மேதினியைக் காப்பாற்ற?
விடக்கிருமி சாகாதோ
விடைசொல்வாய் கூற்றுவனே!
சியாமளா ராஜசேகர்

வண்ணப் பாடல் ...!!


Image may contain: people standing, sky, outdoor and nature
தந்தனன தானதன
தந்தனன தானதன
தந்தனன தானதன தனதானா (அரையடிக்கு)
மஞ்சள்வெயில் மாலைதனில்
வண்டுலவு சோலைதனில்
வந்தமலர் வாசமது நிறையாதோ
மஞ்சுதவழ் வானழகை
யுண்டமன மாவலொடு
வஞ்சிமக ளோடிணைய விழையாதோ
நெஞ்சுருகி யோடிவரு
மின்பமது கூடவரும்
நின்றுவிடு மோகனவு மெனவாடி
நெம்பியெழு மாசையொடு
பொங்கிவரு காதலோடு
நிண்டிவிளை யாடவவ ளருகோடே
தஞ்சமென நானடைய
மஞ்சமென மேனியொடு
தங்கமக ளோடுறவி லிணைவேனே
தந்தனன தானதன
வென்று நடமாடி வரு
தண்டலையி லேமயிலி னழகோடே
அஞ்சலென வேயமுது
தந்தவளு மூடலுற
அன்புமிக வேதழுவி யணைவேனே
அந்திபகல் நாளுருள
என்றும்பிரி யாதபடி
அன்றிலென வாழவரம் பெறுவேனோ ?
சியாமளா ராஜசேகர்