Thursday, March 12, 2015

நீ மறைந்த மாயமென்ன ?




அண்ணாந்து நான் பார்த்தேன் 
அதிர்ந்தே தான் போனேன் 
ஆகாயப் பொலி வெங்கே 
அற்புதக் கோல மெங்கே ....? 

சவரம் செய்த வதனமாய் 
மழித்து விட்ட சிரமாய் 
சலவை சென்று வந்தாற்போல் 
வெளுத்து விரியக் கண்டேன் ...!! 

அழகழகாய் தவழ்ந்து வரும் 
அலை மேகம் எங்கே ? 
சுருள்சுருளாய் புகை போலே 
சுழலும் முகில் எங்கே ....? 

ஊதிவிட்ட பஞ்சுப் பொதியாய் 
ஊரும் மஞ்சு எங்கே ? 
மழலை வரைந்த ஓவியமாய் 
முகில் இனமும் எங்கே ....? 

தூரிகை தீட்டிய சித்திரமாய் 
தூதுசெல்லும் மங்குல் எங்கே ? 
கதிர்நிலவு மறைக்கு மந்த 
வெண்மேகத் திரை எங்கே ....? 

கடலுள் கலந்து நுரைத்தாளோ 
கானக இருளில் கலந்தாளோ 
மலையில் புகுந்து ஒளிந்தாளோ 
மண்ணில் விழுந்து மறைந்தாளோ...?? 

கண்எட்டும் தூரம் வரை 
மிகரம் விழியில் படவில்லை 
வானமகள் சேலை துவைத்து 
விரித்தே காயப் போட்டாளோ ....??

No comments:

Post a Comment