யமுனைக் கரையில் யதுகுலக் கண்ணன்
அமுதாய்ப் பொழிந்தனன் அன்பை ! - குமுதமாய்ப்
பூத்தராதை பாடிப் புகழ்ந்திடக், கேட்டுவீசும்
ஆத்தோரத் தென்றல் குளிர்ந்து
குளிர்ந்துவீசும் மாருதமும் கோகானம் கேட்டு
தளிர்மரத்தைத் தாலாட்டும் தாயாய் !- தெளிந்தோடும்
ஆற்றோரப் பூஞ்செடியும் ஆனந்த ஆடலைப்
போற்றி வணங்கும் மலர்ந்து .
மலர்க்கொடியாள் மையலினால் மாயனுட னாட
சிலம்பொலியும் நாதமெனச் சேர - அலம்பும்
நதியலைகள் பையவந்து நாணமுடன் நோக்கும்
அதிசயக் காட்சி வியப்பு !
வியந்தே ரசித்தனள் வேணுகானம் மீட்ட
மயக்க நிலையில் மகிழ்ந்து - இயற்கையும்
கூடிக் களித்திடும், கோபால னைக்காண
ஓடிவரும் மேகம் விரைந்து
No comments:
Post a Comment