நந்த வனத்திலே கூடிடுவோம் -செந்தில்
>>>>நாதனை எண்ணியே பாடிடுவோம்
சந்தத் திருப்புகழ் கற்றிடுவோம் - கந்த
>>>>சாமியை நாளுமே போற்றிடுவோம் !
கோலக் குறமகள் நாதனடி - தன்னை
>>>>கும்பிடும் பக்தரின் தேவனடி
வேல வனின்திருப் பாதமடி - அன்பாய்
>>>>வேண்ட வரந்தரும் பாலனடி !
ஆடும் மயிலினில் வந்திடுவான் - நேரில்
>>>>அற்புத லீலைகள் செய்திடுவான்
பாடும் அடியவர்க் காத்திடுவான் - பாரில்
>>>>பட்டத் துயரமும் தீர்த்திடுவான் !
வேழ முகத்தினன் சோதரனே - என்றும்
>>>>வெற்றி குவித்திடும் வேலவனே
வாழ வழிசெயும் மாயவனே - என்றும்
>>>>வஞ்ச மகற்றிடும் தூயவனே !
பாத சிலம்பொலி ஓங்கியதே - அன்பர்
>>>>பஞ்சக் கிலேசமும் நீங்கியதே
கீத மிசைத்திட தேங்கியதே -இன்பம்
>>>>கெஞ்சி இதயமும் தாங்கியதே !
தேவி உமையவள் பாலகனாம் - அள்ளும்
>>>>தெள்ளு தமிழ்மொழிக் காவலனாம்
கூவி அழைத்திடில் ஓடிவந்து - உள்ளம்
>>>>தாவி அணைத்திடும் தாயவனாம் !
நாடு மடியவர் தாசனடி - தம்மை
>>>>நம்பித் துதிப்பவர் தேசனடி
ஈடு இணையிலா வாசனடி - இம்மை
>>>>இன்னல் கலைந்திடும் ராசனடி !
கூடிக் குலவையும் போடயிலே - பெண்கள்
>>>>கும்மி யடித்திடும் வேளையிலே
நாடித் தொழுதிடும் வேளையிலே - மண்ணில்
நன்மை பெருகிடச் செய்துவிடு !
No comments:
Post a Comment