Tuesday, March 17, 2015

மழலைப் பாடல் .....!!!




கள்ளங் கபடம் இல்லா உள்ளம் 
துள்ளல் துடிப்பில் இதயம் கிள்ளும் 
அள்ளும் அழகில் மயக்கும் நெஞ்சம் 
பிள்ளைக் கனியாய் மதுரம் கொஞ்சும் ! 

சுட்டிக் குறும்பால் மனதை வெல்லும் 
கட்டிக் கரும்பாய் மகிழும் சொல்லும் 
பட்டுச் சிரிப்பில் மறையும் துன்பம் 
குட்டிக் குழந்தை குணத்தால் தெய்வம் ! 

சேட்டை செய்து அடமும் பிடிக்கும் 
கேட்டால் சிரித்து மழுப்பி நடிக்கும் 
வீட்டைக் கலகலப் பாக்கும் மழலை 
பாட்டில் பதிந்த அழகின் கவிதை ! 

கையால் கடைந்த பருப்புச் சோற்றை 
கைவிரல் சுட்டிப் பகிர்ந்து கொடுக்கும் 
பொக்கை வாயைப் பிளந்துக் காட்டி 
மெல்வது போலே பாவனை செய்யும் ! 

தூங்க வைக்கத் தூளியில் போட்டால் 
தாங்க மாட்டா சேட்டை செய்யும் 
தொட்டில் புடவை சற்றே விலக்கி 
எட்டிப் பார்த்தே குறுநகைப் புரியும் ! 

மறைத்த சீலைக்குள் அமுதுண் டாலும் 
முகத்தைத் தூக்கி வேடிக்கைப் பார்க்கும் 
வாய்க்குள் பாலை நிறைத்துக் கொண்டு 
ஃபூவென ஊதியே மழையாய்த் தூறும் ! 

அடிப்பது போலே கையைத் தூக்க 
அடித்தது போலே அழுகை முட்டும் 
உதட்டைப் பிதுக்கி பொய்யாய் விம்மி 
பயந்தது போலே பாவனை செய்யும் ! 

விரட்டிச் சென்று எறும்பு பிடிக்கும் 
விரலைக் கடித்தால் ஓவெனக் கத்தும் 
எழுதும் குச்சியை ரசித்துத் தின்னும் 
அழுதடம் பிடித்துக் கண்டதைக் கேட்கும் ! 

பாட்டுக் கேட்டால் தலையை ஆட்டும் 
ஆட்டம் பார்த்தால் தானும் ஆடும் 
விளம்பரம் வந்தால் ரசித்து நோக்கும் 
விளங்கி யதுபோல் நகைத்துக் கொள்ளும் ! 

தாளைக் கண்டால் கிழித்துப் போடும் 
தாயைக் காணா விட்டால் தேடும் 
கள்ளினும் போதை யூட்டும் கீதம் 
பிள்ளை மொழிக்கு ஈடோ வேதம் ? 

குழந்தை இருக்கும் இல்லம் சொர்க்கம் 
மழலைப் பேச்சில் விலகும் துக்கம் 
அழகில் ஒவ்வொரு பிள்ளையும் உச்சம் 
பழகிப் பார்த்தால் புரியும் மிச்சம் .....!!!

No comments:

Post a Comment