Friday, March 27, 2015

பாரதி கண்ட புதுமைப் பெண் ....!!!




பாட்டுக் கொருபுலவன் பாரதி கண்டபெண்
கூட்டுக் குளடங்காக் கோகிலமே - வீட்டுக்குள்
பூட்டியே வைத்தாலும் போராடி வந்திடுவாள் 
ஆட்டத்தில் வெல்வாள் அணங்கு .
நல்லறங் கூட்டிடுவாள் நன்னடையா லீர்த்திடுவாள்
பல்வகை நூல்கள் பயின்றிடுவாள் - மெல்லினத்தாள்
நெஞ்சிலுரங் கொண்டவளாய் நேர்மைத் திறம்வளர்த்து
அஞ்சிடாது வாழ்வா ளவள் .
கள்ளத் தனமின்றி கற்பியல் காத்திடுவாள்
உள்ளத்தி லன்பூற உய்த்திடுவாள் - ஒள்ளியளாள்
நல்லதோர் வீணையாய் நன்னெறி பேணுவாள்
இல்லற நாத மிசைத்து .
மூடுவிழா செய்திடுவாள் மூடக்கொள் கைக்கவள்
ஈடுபெண்ணிற் கில்லையே இப்புவியில் - கேடுகண்டால்
பொங்கிடுவாள் பேரலையாய், பூகம்ப மாய்வெடிப்பாள்
செங்கனலாய்ச் சுட்டெரிப்பாள் தீய்த்து .
இமைபோலக் காப்பாள் இடுக்கண் வருங்கால்
அமைதிக்குப் பேர்தான் அணங்கோ ?- சுமையாக
எண்ணாது தம்மக்கள் ஏற்றமுறச் செய்வதே
மண்ணில் புதுமைப்பெண் மாண்பு .
விண்வெளி சென்றிடுவாள் வித்தைகள் கற்றிடுவாள்
நுண்ணறிவால் செய்திடுவாள் நூதனங்கள் - மண்ணுலகில்
மங்கையர் ஒன்றிணைந்தால் மாபெரும் சக்தியாய்
எங்கும் நிறையும் இனிது .

No comments:

Post a Comment