Friday, March 27, 2015

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் ....!!!




வெள்ளிப் பனியுருகி வெள்ளமாய்ப் பாய்ந்தோட 
உள்ளமுமு டன்செல்லும் ஊர்கோலம் - துள்ளியோடும் 
வற்றா நதிகளின் வைரமணி நீரலைகள் 
நற்பா இசைக்கும் குளிர்ந்து. 

கரைபுரண் டோடுகையில் கண்ணிரண்டை ஈர்த்தாய் 
நுரைபொங்கு மாறே நுவல்வாய் ! - விரைந்தோடக் 
காரண மென்ன கவின்நதியே ? சங்கமிக்க 
நேரமான தோசொல்லிச் செல் . 

ஓடியதால் கால்வலியோ ஓரிடத்தில் தங்கிவிட்டாய் 
நாடிடும் பல்லுயிரின் நண்பனே ! -ஓடியநீ 
தேங்கிட்டால் தீர்ப்பதார் தேவைகளை ? யோசித்து 
ஏங்கிட வைக்காமல் ஓடு . 

நதிகளே கைகோர்த்து நட்புறவா டுங்கள் 
புதிதாய்ப் பொலிவாகும் பூமி ! - துதித்தால் 
வசந்தம் பெருகிட வாழ்வும் சிறந்து 
கசப்பும் மறைந்திடும் காண்.

No comments:

Post a Comment