Monday, June 18, 2018

பல்லவர்கள் ...!!!

காஞ்சிபுரம் அண்ணா கலையரங்கில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சங்கங்கள் மாநாட்டின் மூன்றாம் நாளான 10-6-2018 இன்று பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் " பல்லவர்கள்" என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை .!

தமிழ் வாழ்த்து !
**********************
கன்னல் மொழியில் கவிசொல்ல விங்குவந்தேன்
என்றமிழ்த் தாயே! இனியவளே ! - நின்னருளால்
பல்லவர் மாண்பினைப் பாட, அமிழ்தனைய 
சொல்லெடுத்துத் தாராய் தொடர்ந்து. 

தலைமை வாழ்த்து !
****************************
பெருமைமிகு பைந்தமிழால் பேற்றினைப் பெற்றே 
அருந்தொண்டு தாய்மொழிக் காற்றும் - கருமலையார் 
நற்றலைமை யேற்க நயந்து பணிந்திடுவேன்
பொற்புடன்வெண் பாவால் புகழ்ந்து. 

பல்லவர்கள் ....!!!
***********************
பாரத மாண்ட பல்லவர் மாண்பைப் 
***பாங்குடன் சரித்திரம் பேசும் !
வீரமாய்ப் போரில் வெற்றிக ளீட்டி
***மேன்மையாய்த் திகழ்ந்ததைச் செப்பும் !
தாரணி போற்ற ஏழுநூ றாண்டு 
***தகைமையாய் ஆண்டதைச் சொல்லும் !
சீருடன் கலைகள் செம்மையாய்ப் பேணிச்
***சிறந்ததைச் சான்றுகள் காட்டும் !

பல்லவர் தோற்றம் பற்றிய கூற்றில் 
***பலவித கருத்துகள் மோதும் !
வல்லவ ரவர்தாம் யாரெனக் குறிப்பாய் 
***வரையறை செய்வதும் கடினம் !
பல்கலை வளர்க்கும் காஞ்சிமா நகரைப் 
***பல்லவர் தலைநக ராக்கிக் 
கல்வியிற் சிறக்க விரும்பிடு வோரைக் 
***காந்தமா யீர்த்ததிவ் வரசே !

இசைக்கலை யோடு கட்டடக் கலையும் 
***எழில்மிகு ஓவியக் கலையும் 
அசத்திடு மாடற் கலையொடு சிற்பம் 
***அழகுற மிளிர்ந்தபொற் காலம் !
வசப்பட வைக்கும் கலைநயங் கண்டு 
***மனமயங் காதவ ரில்லை !
திசைதொறு மின்றும் பல்லவர் பெருமை 
***செப்பிடா ஏடுக ளுண்டோ ? 

கடிகைகள் வேதப் பயிற்சிகள் அளிக்க 
***காஞ்சிமா நகரிலே உண்டு !
படிப்பதற் காக மாணவர் பலரும் 
***படையெடுத் தனர்கடி கைக்கு !
வடமொழி யோடு நற்றமிழ் மொழியும் 
***வளமுடன் விளங்கிய தன்று !
துடிப்புடன் பாக்கள் படைத்திடும் ஆற்றல் 
***தொடர்ந்தது தமிழிலும் நன்றே !

பண்ணொடு பாடி இன்புறும் வகையில்
***பக்தியி லக்கியம் தோன்றி 
எண்ணிலாப் பாக்கள் இறைவனைப் போற்றி
***எழுந்தது பல்லவர் காலம் !
வண்டமி ழாலே நாயன்மார் ஆழ்வார் 
***வண்ணமா யியற்றிய பாக்கள் 
மண்ணிலே பக்தி நெறிகளைப் புகட்டும் 
***மகத்துவ மிக்கது தானே !!

மன்னருள் சிறந்த மகேந்திர வர்மன் 
***மாபெரும் வீரனாய்த் திகழ்ந்தான் !
தன்னிக ரில்லாத் திறமைகள் பெற்றுத் 
***தனியிடம் தனக்கெனக் கொண்டான் !
இன்னிசைப் பாக்க ளியற்றிய வரசன் 
***ஈடிலாப் படைப்புகள் செய்தான் !
பன்முகத் திறமை கொண்டதால் பட்டம் 
***பலப்பல வென்றனன் நன்றே !

அலைதவழ் ஆழிக் கரையினி லமைந்த
***அழகியத் துறைமுக நகராம் 
கலையெழில் மின்னும் மாமல்ல புரத்தின்
***கடற்கரைக் கோயிலின் தோற்றம் 
விலைமதிப் பில்லாச் சிற்பங்க ளோடு
***விளங்கிடும் அற்புதக் கோலம் 
பலவகைச் சிறப்பால் மல்லையும் உலகப்
***பண்பாட்டுச் சின்னமாய்த் திகழும் !!

குடைவரைக் கோயில் பல்லவர் புகழைக்
***கோபுரக் கலசமாய் உயர்த்தும் !
கடற்கரை யருகில் கற்றளி யென்ற
***கற்கோயில் கவினுற விளங்கும் !
படைப்பினில் பஞ்ச பாண்டவர் ரதங்கள்
***பார்க்கையில் விழிகளும் விரியும் !
புடைப்புச்சிற் பங்கள் தொகுதிகள் யாவும் 
***புதுமையாய்ச் செதுக்கிய தழகே !!

மன்னவன் இராச சிம்மனும் இசையில் 
***வல்லமை பெற்றிருந் தானே ! 
அன்னவன் படைப்பாம் கைலாச நாதர் 
***ஆலயம் காஞ்சியின் வரமே !
உன்னத சிற்பக் கலைநயம் மிளிர 
***உயர்ந்ததே இவ்வெழிற் கோயில் !
தென்கயி லாய மெனவழைப் பதிலே 
***தெளிவுறும் சிறப்புக ளன்றோ ?

செறிவுடன் விளங்கும் யுவான்சுவாங் என்ற 
***சீனத்துப் பயணியின் குறிப்பால் 
அறியலாம் காஞ்சி மக்களின் கல்வி 
***அறிவுடன் வீரமும் மற்றும் 
பிறசெப்பே டும்கல் வெட்டுகள் பலவும் 
***பெருமையைக் காட்டிடும் நன்றே !
துறவியாம் போதி தர்மனிம் மரபில் 
***தோன்றிய பல்லவன் மகனே !!

பாரினில் பெரிய அங்கோர்வாட் கோயில் 
***பல்லவன் கட்டிய தன்றோ ?
போரினில் வென்ற கம்போடி யாவில் 
***பொற்புடன் எழுப்பினன், இரண்டாம் 
சூரிய வர்மன் கலைநயம் கொஞ்ச 
***தூயவன் திருமாலுக் காக !
பேருடன் வாழ்ந்த பல்லவர் வம்சப் 
***பெருமையில் இதுவுமோர் சான்றே !

நன்றி ...!!!
***************
கன்னித் தமிழில் கவியரங்கம் காஞ்சியில் 
என்றும் நினைவில் இனித்திடும்! - அன்புடன்
நன்றி யுரைத்திடுவேன் நானிருகை கூப்பியிம் 
மன்றந் தனிலே மலர்ந்து.

கலைத்தாயின் தவப்புதல்வன் ....!!!

கலைத்தாயின் தவப்புதல்வன் கலையுலகின் சிம்மமவன்
மலைக்கவைக்கும் ஆற்றலுடன் மனங்கவர்ந்த கள்வனவன்
தலைசிறந்த நடிப்பாலே தமிழருளம் இடம்பிடித்தோன்
நிலைத்திருக்கு மவன்புகழும் நிலம்வானும் உள்ளவரை !
விடிவெள்ளி திரைவானில்! வியக்கவைக்கும் கலைச்செல்வம்!
நடிப்புக்கே நடிப்புதனை நயமாகக் கற்பித்து
நடிப்பாலே உளம்கொய்த நாயகனின் உணர்ச்சிமிகு
துடிப்பான உச்சரிப்பில் சொக்காதோர் யாருமுண்டோ ? .
தரமான நடிப்பாலே தானேற்ற பாத்திரமாய்
வரம்பெற்றுப் பிறர்மனத்தில் வாழ்ந்திருக்கும் இமயமவன்!
வரலாற்று மன்னரையும் மனக்கண்முன் நிறுத்தியவன்
குரலாலே உயிரூட்டிக் கொள்ளையுள்ளம் கொண்டவனே!
அங்கங்கள் ஒவ்வொன்றும் அழகாகத் தான்பேசும்
பொங்கிவரும் உணர்ச்சிவெள்ளம் புதுப்புனலாய்ப் பெருக்கெடுக்கும் !
செங்குருதி யும்நடிக்கும் சீற்றத்தில் துடிக்கையிலே
சிங்கநடை தோற்றுவிடும் சிவாஜிநடை பயில்கையிலே !
வற்றாத கலைஞானம் வாகான முகபாவம்
பற்றோடு செய்தொழிலில் பயபக்தி யுடன்நேசம்
சற்றேனும் செருக்கில்லாத் தகைசான்ற குணசீலம்
பெற்றோனைப் பெற்றதற்குப் பெரும்பேறு பெற்றோமே !
செம்மாந்த தமிழ்பேசித் தெளிவாக வசனங்கள்
கம்பீர மாய்முழங்கி காந்தமெனக் கவர்ந்திழுத்துச்
சிம்மாச னம்போட்டுச் சிங்கார மாய்வீற்ற
நம்நடிகர் திலகத்தை நற்றமிழில் வாழ்த்துவமே !!
சியாமளா ராஜசேகர்

பூத்திடும் வனமாகும்...!!!



பூச்சரமவள் கார்க்குழலினில் காற்றொடுகலைந் தாடும்
***பூக்களின்மண மீர்த்திடுமவன் மூச்சுடனுற வாடும் !
பாக்களின்சுவை கூட்டிடும்சுகம் பாற்கடலலை போலும்
***பாட்டெழுதிட ஊற்றெனவரும் வார்த்தைகளலை மோதும் !
கீச்சிடுமொழி கேட்டதும்செவி பேச்சினிமையில் சொக்கும்
***கீற்றசைந்திட ஆட்டியவளி பூப்பனித்துளி சொட்டும் !
வீச்சொடுவிழும் காட்டருவியின் கூச்சலுமிசை யாகும் 
***வேட்கையில்குழல் மீட்டிடவுளம் பூத்திடுவன மாகும் !!
சியாமளா ராஜசேகர்

தோழியர் குறும்பில் சொக்கிடும் தலைவி

தோழி 
********
என்னுயிர்த் தோழி கேளொரு சேதி 
***இனியவன் வந்தனன் வாடி !
உன்னவன் தனியாய்க் காத்திருக் கின்றான் 
***ஊருணி யருகினில் பாடி !
கன்னலைப் போலென் காதலி என்றான் 
***கண்களால் அழைக்கிறான் போடி!
சென்றவன் ஏக்கம் தணிந்திடச் செய்வாய் 
***தேன்மலர்க் கூந்தலில் சூடி !

தலைவி 
*************
மயங்குதென் நெஞ்சம் தனைமறந் ததுவும் 
***மன்னவன்  வரவினில் சிலிர்க்கும் !
தயங்கிடும் கால்கள் ஆயினும் இதயம் 
***தவிப்பதைத் துடிப்பினில் உணர்த்தும் !
கயல்விழி இரண்டும் படபட வென்றே 
***களிப்புடன் இமைகளை அடிக்கும் !
வயல்வெளி மீது  அவனுட னிணைந்து
***மகிழ்வுடன் நடமிட நினைக்கும் !

தோழி 
********
பித்தனைப் போலவன் பூஞ்செடி யுடனே 
***பிதற்றிடும் கோலமும் கண்டேன் !
கொத்திடும் நினைப்போ கொஞ்சிடும் நினைப்போ 
***குறுநகை இதழ்களில் கண்டேன் !
இத்தனைக் கேட்டும் பிரியமா னவளே 
***இன்னமும் வெட்கமோ சொல்வாய் !
அத்தையின் மகனை ஆவலாய்க் கண்டே 
***அணைத்திட அருகினில் செல்வாய் !


தலைவி 
***********
உனைவிட என்மேல் அன்பினைக் காட்ட 
***ஒருவரு மில்லையே தோழி !
நனைந்தவென் இதயம் மலர்ந்திடச் செய்தாய் 
***நன்றிகள் ஆயிரம் கோடி !
கனவினில் வந்து கைபிடித் தவனைக்
***கண்டிட வழிவகை செய்தாய்! 
மனமகிழ் வோடு வாழ்த்துகள் சொல்வேன் 
***மதிமுகத் தழகியே வாழி !!


சியாமளா ராஜசேகர் 


நகர்ந்தோடினாரே ....!!!



மலர்களெல்லாம் ஒன்றுகூடி மாநாடு போட்டு
***வரமொன்று சாமியிடம் வாங்குதற்குச் செல்ல
சிலையினின்று வெளிப்பட்டுச் சேதியென்ன வென்றே
***சிரித்தபடி யவர்கேட்க, சிந்தினவாம் கண்ணீர் !
நிலத்திலெங்கள் வாழ்வெல்லாம் நாளொன்று தானே 
***நீடித்துத் தருவீரோ என்றவையும் கேட்க
நலமுடனே சேர்ந்திடுவீர் என்பாத மென்றே
***நயமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தோடி னாரே !!
சியாமளா ராஜசேகர்

மந்தியொடு வானரமும் ....!!!

மந்தியொடு வானரமும் மரக்கிளையில் தாவும்
***மலையருவிச் சாரலிலே மனம்சிலிர்த்துச் சேரும்
அந்திமழை மேகங்க ளலையலையாய்க் கூடும்
***அதுகண்டு தோகைவிரித் தழகுமயி லாடும்
சந்தமொடு குதித்தோடும் கவின்நதியின் கோலம் 
***சாமத்திலும் செவியுரசிச் செல்லுமதன் ஓலம்
செவ்வந்தி மலர்போலும் சிரித்தபடி வானில்
***சிங்கார வெண்மதியும் திருக்காட்சி தந்தாள் ...!!!
சியாமளா ராஜசேகர்

கன்னிமனம் ஊஞ்சலிலே ....!!!


கன்னிமனம் ஊஞ்சலிலே கனவுகளோ டாடும்
***கண்ணனவன் வருகையினைக் காதலுடன் தேடும் !
புன்னகையு மளவோடு பொன்முகத்தில் பூக்கும்
***பொறுமையுடன் வண்ணமலர்ச் சோலையிலே காக்கும் !
தென்றலிலே குழலசைந்து செவியோரம் மோதும் 
***சிலிர்ப்பினிலே சிவந்துவிட்ட சிறுவிதழ்கள் பேசும் !
அன்னமவள் அழகுகண்டு கவின்சிலையும் நாணும்
***அடங்காத ஆசையிலே இமைதிறந்து பார்க்கும் !
வஞ்சியவள் கனிமொழியில் மலைத்தேனும் தோற்கும்
***வளைகுலுங்கும் கைகளிலே மருதாணி பூக்கும் !
கொஞ்சிவரும் இளங்காற்று வருடிவிட்டுப் போகும்
***குழலோசை மயங்கவைக்க உள்ளமது நோகும் !
மஞ்சுதிரள் கருவானில் ஒளிக்கிளைகள் மின்னும்
***மனத்திலிடி விழுந்தாற்போல் காலிரண்டும் பின்னும் !
நெஞ்சமெலாம் அவன்நினைவே சுற்றிவந்து தாக்கும்
***நீர்க்கோலம் கன்னத்தில் மைவிழிகள் போடும் !
சியாமளா ராஜசேகர்