Saturday, March 21, 2015

கவிதை செய்யும் மாயம் !!



உள்ள வலியை உரக்க உரைத்திடும் 
தள்ளுந் துயரைத் தடுத்திடும் -துள்ளலுடன் 
காதலும் பேசும் கவினழகு பாடிடும் 
மோதலுஞ் செய்யும் முனைந்து . 

இதய மொழிதனை இங்கிதமாய்க் கூறும்
மதமா னமனதை மாற்றும் - பதமா
யுணர்த்து மிடித்து முரைக்கு மெழுத்தில் 
வரையுங் கவிதை வனப்பு .  

உதிரங் கலந்த உணர்வு கவிதை 
புதிதாய் அனுதினம் பூக்கும் - நதியாய் 
வளைந்து நெளிந்து வளமும் பெருக்கும்
களையாய்த் திகழுங் கவி . 

கவிதை தினத்தினில் காதலுங் கொண்டே 
குவித்தேன் கவிமலர்க் கோலம் - கவிதையே !
நெஞ்சம் நிறைந்தாய் நெகிழ்ந்துனைப் போற்றுவேன் 
தஞ்சமென் றென்மனந் தங்கு  

No comments:

Post a Comment