Tuesday, March 7, 2017

தேக்குமர உடலழகா ...!!!


தேக்குமர உடலழகா தேகங்கருத்த நிறத்தழகா
ஏக்கமுடன் காத்திருக்கேன் என்நிலைமை புரியாதோ ?
தூக்கத்திலும் உன்நினைவே தட்டித்தட்டி எழுப்புதடா 
பாக்குவெற்றிலை மாற்றியெனைப் பரிசம்போட வாராயோ ?

மாஞ்சோலைக் கிளிகளெல்லாம்  மையலுடன் கொஞ்சுதடா 
வாஞ்சையுடன்  தோகைவிரித்து வண்ணமயில் ஆடுதடா 
பாஞ்சலமும் இதமாக பக்கம்வந்து வருடுதடா 
ஊஞ்சலிலே இணைந்தாட உள்நெஞ்சம் விழையுதடா !

தேன்சொட்டும் தீங்கனியின் தித்திப்பும் கசக்குதடா 
வான்நிலவின் தண்ணொளியும் மங்கையெனைச் சுட்டதடா  
மான்விழியும் சோர்வுற்று மயங்கிடவே செய்யுதடா 
மீன்பிடிக்கச் சென்றவனே விரைந்துவர  வேண்டுமடா !

அந்திசாயும் நேரத்திலே ஆற்றங்கரை ஓரத்திலே 
சிந்துகின்ற நிலவொளியில் நெஞ்சுருகிப்  பாடுகின்றேன் 
சொந்தமென வந்திடுவாய் சொக்கவச்ச மன்மதனே 
நந்தவனச் சாரலிலே நனைந்திடுவோம் இருவருமே !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment