மான்விழியாள் கண்ணிரண்டும் வாடிநின்ற தேனோ
***மன்னவனைக் காணாமல் ஏங்குகின்ற தாலோ
தேன்மொழியாள் வாய்திறந்து பேசாத தேனோ
***தேக்குமர உடலழகன் தவிக்க விட்ட தாலோ
ஏன்மறந்தான் என்றுமனம் கேள்விகளைக் கேட்க
***ஏமாற்றம் தாங்காமல் துடித்திடுதோ நெஞ்சம்
வான்நிலவு வருவதற்குள் வந்திடுவா னென்று
***வஞ்சியவள் மெல்லிதயம் ஆறுதலும் சொல்லும் !
கூந்தலிலே மல்லிகைப்பூ நறுமணத்தைக் கூட்டும்
***கோலமயில் கைகளிலே வளைசிந்து பாடும்
காந்தவிழி கவர்ந்திழுத்துக் காதலுடன் பேசும்
***கதைசொல்லும் கவினழகில் காவியமும் தோற்கும்
சாந்தமுடன் அஞ்சுகம்போல் சந்ததமும் கொஞ்சும்
***சங்கீத சுரங்களையும் சாரீரம் மிஞ்சும்
பாந்தமுடன் கொலுசொலியும் நடைக்குஜதி சேர்க்கும் \
***பளிங்குநிற பாதத்தில் மருதாணி பூக்கும் !
பாவாடை தாவணியில் கொள்ளைகொண்டா ளுள்ளம்
***பாவையவள் வதனத்தில் என்றுமில்லை கள்ளம்
ஆவாரம் பூமேனிக் கேனிந்த சோகம்
***அன்புடனே மலர்தொடுக்கும் அணங்குக்கேன் வாட்டம்
நாவார அவள்பாடும் மெல்லிசையைக் கேட்டால்
***நாயகனும் வந்தவளைக் கரம்பிடிப்பான் இன்றே
தேவாதி தேவர்களும் கூடிடுவார் வாழ்த்த
***தேனாறு பாயட்டும் இல்வாழ்வில் நன்றே !!!
No comments:
Post a Comment