Wednesday, March 1, 2017

புவியையும் வெல்வாளே....!!!

மண்ணிலே பெண்மை சக்தியி னுருவாய்
***மகிமைகள் புரிந்திடும் நாளும் !
எண்ணமும் செயலும் சிறப்புற விளங்கி 
***ஏணியாய் ஏற்றிடும் வாழ்வில் !
வண்ணமாய் மாற்றி அற்புத மாக 
***வசந்தமும் வீசிட வைக்கும் !
பெண்ணெனும் தீபம் வெண்ணிலா ஒளியாய்ப்
***பேணிடும் இல்லறம் நன்றே !

இன்முகத்  தோடே இருளினை யகற்றும் 
***இனியவள் என்றுமே பெண்தான் !
தன்னல மில்லாத் தகைமையை யுடையாள்
***தரணியில் நிமிர்ந்திடச் செய்வாள் !
துன்பமும் நேர்ந்தால் உரமுடை மனத்தால் 
***துயரினைத் துடைத்திடத் துணிவாள் !
பொன்னொளிர் முகத்தில் புன்னகை யோடு 
***புவியையும் வென்றிடு வாளே ....!!!

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
 (விளம் மா விளம் மா விளம் விளம் மா )


No comments:

Post a Comment