Tuesday, December 6, 2016

ஈரவிழி காயவில்லை இன்று ....!!!


அஞ்சாத சிம்மமே! ஆற்றலில் கொற்றவையே! 
நெஞ்சுள் நிறைந்தாய் நினைவுகளாய்!- எஞ்ஞான்றும் 
ஈடில்லாப் பெண்ணரசி! என்றினி காண்போம்யாம் 
வாடினோம் கண்ணீர் வடித்து. 

அங்குவிழி மூடி அமைதியாய்த் தூங்குகிறாய் 
பொங்கிவரும் கண்ணீரால் போற்றுகிறேன்! - மங்காதே 
உன்றன் புகழிவ் வுலகமும் உள்ளவரைச் 
சென்றுவா அம்மா சிறந்து. 

திரும்பாத நல்லிடந் தேடியே சென்றாய் 
செருக்கின்றி வாழ்ந்தாய்ச் சிறப்பாய்! - அரும்புமுன் 
புன்சிரிப்பும் எங்கினிப் பூக்குமோ சொல்லம்மா 
வென்றாயெ முள்ளம் விரைந்து 

இங்கென் மனமும் இளகித் தவிக்கிறதே 
வங்கக் கரையில் வனப்பாய்த் துயில்வாயோ 
மங்கையுன் சக்தி மகத்தான சக்தியம்மா 
எங்கும் நிறையும் இனிது. 

பகுத்தறிந்து பாங்குடனே பாதை வகுத்தாய் 
தகுதியுடன் நல்லாட்சி தந்தாய் - வெகுமதியாய்ப் 
பெற்றோமே யுன்னைப்! பிரிவென்றால் தாங்குமோ 
பற்றுடன் பாடினேன் பா. 

மதிக்கு மிதயத்தில் வாழ்வாய்நீ என்றும் 
எதிலுனையான் காண்பேன் இனிமேல்! -விதியால் 
பிரிந்திடினும் தாயேநற் பேறேநீ தானே 
மரித்தாலும் இம்மண்ணில் வாழ். 

வளர்த்தக் கழகத்தை மாசின்றிக் காப்போம் 
உளமார நேசிப்போம் உய்யத்!- தளர்வின்றி 
நாளு முயர்ந்திட நாமும் துணையிருப்போம் 
தோளுடனீ வோம்தோள் தொடர்ந்து. 

விதவிதமா யஞ்சலி வெண்பாவாய்ப் பூக்கும் 
முதல்வருக் கன்புடன் முத்தாய்! - இதமாய்த் 
துயிலுமம் மாவுக்குச் சூட்டுவேன் மாலை 
உயிராய் நினைப்பேன் உணர்ந்து. 

குளிர்வித்தா யம்மா கொடைவள்ளல் நீயே 
களிப்புறச் செய்தாய்க் கனிந்து !- உளியாய்ச் 
செதுக்கித் தமிழ்நாட்டைச் சீர்தூக்கி விட்ட 
புதுமைப்பெண் தொண்டினைப் போற்று . 

விண்ணிற்குச் சென்றாலும் மேதினியில் யாம்மறவோம் 
கண்ணின் மணியாய்க் கருதிடுவோம் !- பெண்களிலே 
பேரரசி! நற்புகழ் பெற்றக் கலையரசி! 
ஈரவிழி காயவில்லை இன்று .

No comments:

Post a Comment