பந்தமுடன் உயிர்தந்து படைத்திட்ட பிரம்மனுனை
வெந்தணலில் வேகவிட்டு வெதும்பிமனம் கரைகின்றேன்
எந்தையுனக் கீடுசொல்ல எவருமில்லை இவ்வுலகில்
தந்தையுனை யான்பெறவே தவமென்ன செய்தேனோ ?
உருகியோடும் மெழுகாக உருக்குலைந்தே ஒளிதந்தாய்
குருவாக வழிகாட்டிக் குவலயத்தில் மிளிரவைத்தாய்
வருந்துயரை முறியடிக்க வழிமுறையும் கற்பித்தாய்
திருக்கோயில் தனிலில்லை தெய்வம்நீ என்றுணர்ந்தேன் !
படிப்பித்தாய் வாழ்க்கைநெறி பக்குவமாய் அறியவைத்தாய்
துடிதுடிக்கும் உன்னிதயம் துன்பமெனக் கென்றாலே
அடித்தாலும் அணைத்தாலும் அன்பொன்றே அதிற்கண்டேன்
விடிவெள்ளி நீதானே வியனுலகை அடைந்தாலும் !
குறையேதும் வைக்காமல் குலம்விளங்கச் செய்தவனே
மறைந்தேநீ போனாலும் மறக்கத்தான் முடிந்திடுமோ
நிறைந்திருப்பாய் உடையாத நீர்க்குமிழாய் நெஞ்சினிலே
பிறையில்லா நாளன்று பிரியமுடன் வருவாயே ....!!!
No comments:
Post a Comment