முதிரா யிளமை யோடே யென்றும்
****முத்தா யொளிரும் முத்துக் குமரன் !
துதிக்கு மடியார் துயரைத் துடைக்க
****துள்ளி குதித்தே ஓடி வருவான் !
விதியை மாற்றி விளங்க வைப்பான்
****வீடு பேற்றை விரும்பி அருள்வான் !
கதியே நீதா னென்றா லவனும்
****கண்ணீர்த் துடைக்கக் கடிதே வருவான் !
குருகு கொடியைக் கையி லேந்திக்
****கோல மயிலில் குளிர்ந்தே வருவான் !
உருகி யழைத்தால் உள்ள மினிக்க
****உவகை யோடு காட்சி கொடுப்பான் !
முருகா வென்றால் முன்னே நிற்பான்
****முடியாச் செயலை முடித்து வைப்பான் !
விருத்தம் பாடி வெண்ணீ றணிய
****விரைந்து வந்தே வினைகள் தீர்ப்பான் !
குறைகள் களைய குகனே வருக
****குன்றி லமர்ந்த கோவே வருக !
மறைகள் போற்று மழகா வருக
****வள்ளி மணாளா வருக வருக !
நிறைந்த மனத்தில் நிமலா வருக
****நெஞ்சம் கனிந்து தயவாய் வருக !
இறைவா நீயும் இனிதே வருக
****ஈசன் மகனே இசைந்தே வருக !
No comments:
Post a Comment