
திருமண வாழ்த்து ....!!!
மணமக்கள்
Dr. K. திலோத்தமா
Dr. A. பால அருண்
நாள்: 24 : 05 : 2020
குறித்தவண்ணம் நன்னாளில் குலசாமி துணைநிற்க
இறையருளால் நடக்குமிந்த இனியமண விழாவுக்கு
மறவாமல் வந்திருந்து வான்மழையும் பூத்தூவி
நிறைவான வாழ்த்துகளால் நெஞ்சத்தைத் தான்நனைக்கும் !!
ஊரடங்கு நீட்டிப்பால் ஊர்த்திரள வாய்ப்பின்றி
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக வேநடக்கும்
சீர்மிக்க திருமணத்தைத் தேவர்களும் கண்டிடவே
பார்போற்றும் தென்காசி பதிநோக்கிப் படையெடுப்பர் !!
வாழ்த்துகளால் மனம்நிறைந்து மணமேடை காண்கின்றாய்
காத்திருந்த நாள்கனியக் கணவனுடன் இணைகின்றாய்
பூத்தவுளம் சிலிர்த்தவண்ணம் பொலிவோடு விளங்குகின்றாய்
பேத்தியுனை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன் !!
மங்கலமாய் மலர்மாலை மஞ்சளுடன் குங்குமமும்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே புன்னகையும் அணிசேர்க்கச்
செங்கமலம் போலமுகம் சிவந்தழகாய் வெட்கத்தில்
தங்கமகள் நடைபயின்று தன்மையுடன் வருகின்றாள் !!
பாலஅருண் அருகினிலே பைங்கொடியாள் திலோத்தமாவும்
கோலமயில் போலழகாய்க் குளிர்நிலவாய் மலர்ந்திருக்க
மேலுலகோர் வாழ்த்துகளும் மேடையிலே எதிரொலிக்கக்
காலையிந்தத் திருப்பூட்டு கண்டுள்ளம் பூக்கின்றோம் !!
பெற்றோர்கள் முன்னிலையில் பெரியோர்தம் ஆசியுடன்
வெற்றிமாலை தோள்சுமந்து மேன்மையுடன் வாழியவே
கற்றறிந்த மணமக்காள் காலமெல்லாம் இளமையுடன்
நற்றமிழும் இனிமையும்போல் ஞாலத்தில் வாழியவே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment