கள்ளழகர் குரல்...!!!
***********************
மாவிலையும் தோரணமும்
வழியெங்கும் காணவில்லை
பூவைத்துப் பட்டுடுத்திப்
பூவையரும் உலவவில்லை
தாவிவரும் மக்களலை
தரைமீது தெரியவில்லை
பாவியந்தக் கொரோனாவால்
பாதையெல்லாம் பாலையாச்சே!
தேர்சுற்றி வரவில்லை
திருவீதி வழிதனிலே
ஊர்திரண்டு கொண்டாடும்
ஒப்பில்லாத் திருமணத்தைப்
பார்ப்பதற்கு முடியாமல்
பரிதவிப்பில் நானிருந்தும்
சீர்மிகுந்த மதுரைக்குத்
தேடிவர இயலவில்லை!
பளபளக்கும் பொற்பரியில்
பட்டுடுத்திப் பவனிவர
அளவில்லா மகிழ்வுடனே
அழகர்நான் காத்திருந்தேன்!
களங்கத்தைக் கற்பித்த
கரோனாவால் சித்திரையில்
வளம்நிறைந்த வழியெங்கும்
மருந்துக்கும் ஆளிலையே!!
விடக்கிருமி அச்சத்தால்
வீடடங்கிக் கிடக்கின்றீர்
கடவுளரின் திருக்கோயில்
கதவடைத்து வைத்துவிட்டீர்
மடைதிறக்க வழியில்லை
வைகையிலும் வெள்ளமில்லை
தடைதாண்டி மக்களின்றித்
தனித்துவர மனமில்லை !!
இந்நிலைமை மாறிவிடும்
இடர்யாவும் தீர்ந்துவிடும்
நொந்தவுளம் தேற்றிடுவேன்
நோய்த்தொற்றை அழித்திடுவேன்
சந்தனமும் பன்னீரும்
சாலையெலாம் மணந்திருக்க
வந்திடுவேன் புரவியேறி
வரும்வருடம் உமைப்பார்க்க!!
சியாமளா ராஜசேகர்

No comments:
Post a Comment