குடகு மலைச் சாரலிலே குளிரவைத்த நதியோ
கூந்தலில் நீர்த் துளிவடிய கொஞ்சிவரும் ரதியோ
காவிரியில் மீன்போலே களித்தாடும் அழகோ
பூவிரியும் சோலையிலே புதுமஞ்சள் மலரோ
பொன்மேனி வளைந்தாட புன்னகையும் எழில்கூட்ட
அன்னத்தின் மென்னடையாய் அசைந்துவரும் திருத்தேரோ
கண்ணிரண்டில் கயல்துள்ள கனியிதழில் மதுயினிக்க
வெண்ணிலவும் அதிசயிக்கும் விந்தைமிகு பெண்தானோ? ( குடகு மலைச் சாரலிலே )
கண்ணாடி வளைசிணுங்க கன்னத்தில் குழிசிவக்க
முன்னாடி முகம்பார்த்தால் முத்தாக ஒளிசிந்தும்
பெண்ணவளைக் கண்டவுடன் பித்தாகிப் போனேனே
என்னவளாய் வரிந்துவிட்டேன் என்னிதயம் பறிகொடுத்தேன் ! ( குடகு மலைச் சாரலிலே )
மாந்தோப்புக் குயிலாக மங்கையவள் குரலழகால்
காந்தமெனக் கவர்ந்துவிட்டாள் காளையெனை உருகவைத்தாள்
நீந்திவரும் நினைவுகளால் நித்தமென்றன் துயில்கலைத்தாள்
ஏந்திழையாள் என்நெஞ்சை ஏங்கவைத்துச் சென்றாளே !! ( குடகு மலைச் சாரலிலே )
மிகவும் அருமை
ReplyDeleteஅ
மிக்க நன்றி !
ReplyDelete