Friday, February 17, 2017

ஓலக்குடிசையில ...!!!



ஈசான மூலையில கார்மேகம் திரண்டிருச்சு
பாசாங்கு செய்வதுபோல் பால்நிலாவும் மறைஞ்சிருச்சு 
வீசாத காத்தெல்லாம் வேகமாக அடிச்சிருச்சு 
பேசாத வானத்தில் இடிமின்னல் வெட்டிருச்சு !

மழைமுத்தம் தந்ததுபோல் மண்ணெல்லாம் சிலிர்த்திருச்சு 
உழைப்போரின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் மலர்ந்திருச்சு 
தழைத்தபயிர் தலைவணங்கி சொட்டசொட்டக் குளிச்சிருச்சு 
அழைக்காம வந்தமழை அலுப்பெல்லாம் விரட்டிருச்சு !

ஓலக்குடிசை நனைஞ்சிருச்சு ஒழுகிவீடும் ஈரமாச்சு 
பால்குடிக்கும் புள்ளகூட மழையிலதான் ஆடப்போச்சு 
தாலாட்டு பாடாம தாய்மனசு ரசிச்சிருக்கு 
சீலதலைப்பில் துவட்டிவிட வரும்வரையில் காத்திருக்கு !

கூடிப்பாடிக் குளிச்சதில பிள்ளைமனசும் குளிர்ந்திருச்சு 
ஓடியாடும் பருவத்துல அடைமழையும் சுகமாச்சு  
மாடிவீட்டில் கூடயிந்த மனநிறைவு இருக்காது 
கோடிவிலை கொடுத்தாலும் இந்தசுகம் கிடைக்காதே !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment