Monday, February 27, 2017

வெண்கலிப்பா ....!!!

வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை 
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால் 
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .



★பொது இலக்கணம்.
*நான்கு சீர்கள் கொண்டதாய்,
*நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய்,(பயிற்சிக்கு நான்கடிகளே போதும்)
*முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய்,
* ஈற்று சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும்,
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.

மூடுபனித் திரைக்குள்ளே ...!!!


மூடுபனித் திரைக்குள்ளே முகம்மறைத்த மரத்தினிலே
கூடுகட்டத் தெரியாத குயிலொன்று குளிரினிலே
ஆடுவதைச் சகியாமல் ஆதவனும் கிழக்கிலெழ
பாடுமதன் இனிமையிலே பனித்திரையும் விலகியதே!








வெற்றியை வசமாக்கு !!!


சாதனைக்கு வயதுமில்லை சாதிக்கத் தடையுமில்லை 
ஆதலினால் முயன்றிடுவாய் அச்சத்தை அகற்றிடுவாய் 
சீதனமாய்த் துணிவிருக்க செங்கதிராய் விரிந்திடுவாய் 
வேதனைக்கு முடிவுகட்ட வேங்கையெனப் பொங்கிடுவாய் ! 

முன்னேற்றப் பாதையிலே முள்தைத்தால் பிடுங்கியெறி 
முன்வைத்த காலையென்றும் முடிக்காமல் எடுக்காதே 
புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் பூநாகம் கண்டுபிடி 
வன்கொடுமை தனைக்கண்டால் வாளுருவிச் சாய்த்துவிடு ! 

நடுக்கடலில் சிக்கிடினும் நம்பிக்கை இழக்காதே 
துடுப்பாகத் துணிவொன்றே துணைநின்று கரைசேர்க்கும் 
தொடுவானம் தூரமில்லை தொடுநாளும் தொலைவிலில்லை 
மிடுக்குடனே நடைபோடு வெற்றியைநீ வசமாக்கு !

Saturday, February 25, 2017

உன்னப்போல யாருமில்ல !


முத்துமுத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப்  பல்லழகா 
தத்தித்தத்தி நடைபழகும் தங்கரதச் சிலையழகா 
தித்திக்கும் தேன்மழைநீ தெவிட்டாத பாசுரம்நீ 
பித்தாக்கி னாயென்னை பிரியமுள்ள திருமகனே !

சின்னச்சின்ன விரலழகா சீனிமிட்டாய்ச் சொல்லழகா 
கன்னத்துல பொட்டழகா கருப்பட்டி நிறத்தழகா 
புன்னகைக்கும்  குருத்தழகா புடம்போட்ட பொன்னழகா 
தென்னைமரக் கிளிபோல சிவந்தவாயில் நாக்கழகா !

பட்டுக்கன்னம் முத்தங்கொஞ்ச பவளம்போல சிவந்திருக்கு  
சுட்டித்தனம் செஞ்சாலும் சுகமாகத் தானிருக்கு
தொட்டிலிட்டுத் தாலாட்ட தூங்காமல் எட்டிப்பார்க்கும் 
கட்டிக்கரும்பு செல்லமடா கண்மூடி  நீயுறங்கு !

பப்புச்சோறு ஊட்டுகையில் ப்பூவென்று துப்பிவிட்டுச் 
சப்பரத்துப் பொம்மபோல சாஞ்சாடும் கழுத்தழகா 
சொப்புவச்சி விளையாடிக் சொக்கவைக்கும் சித்திரமே 
ஒப்பில்லாத மாணிக்கமே ஒன்னப்போல யாருமில்லே !!!

சியாமளா ராஜசேகர் 

Thursday, February 23, 2017

குடகுமலைச் சாரலிலே ....!!!


குடகு மலைச் சாரலிலே குளிரவைத்த நதியோ 
கூந்தலில் நீர்த் துளிவடிய கொஞ்சிவரும் ரதியோ 
காவிரியில் மீன்போலே களித்தாடும் அழகோ 

பூவிரியும் சோலையிலே புதுமஞ்சள் மலரோ 

பொன்மேனி வளைந்தாட புன்னகையும் எழில்கூட்ட 
அன்னத்தின் மென்னடையாய் அசைந்துவரும் திருத்தேரோ 
கண்ணிரண்டில் கயல்துள்ள கனியிதழில் மதுயினிக்க 
வெண்ணிலவும் அதிசயிக்கும் விந்தைமிகு பெண்தானோ?         ( குடகு மலைச் சாரலிலே ) 

கண்ணாடி வளைசிணுங்க கன்னத்தில் குழிசிவக்க 
முன்னாடி முகம்பார்த்தால் முத்தாக ஒளிசிந்தும் 
பெண்ணவளைக் கண்டவுடன் பித்தாகிப் போனேனே 
என்னவளாய் வரிந்துவிட்டேன் என்னிதயம் பறிகொடுத்தேன் !            ( குடகு மலைச் சாரலிலே ) 

மாந்தோப்புக் குயிலாக மங்கையவள் குரலழகால் 
காந்தமெனக் கவர்ந்துவிட்டாள் காளையெனை உருகவைத்தாள் 
நீந்திவரும் நினைவுகளால் நித்தமென்றன் துயில்கலைத்தாள் 
ஏந்திழையாள் என்நெஞ்சை ஏங்கவைத்துச் சென்றாளே !!       ( குடகு மலைச் சாரலிலே )

Wednesday, February 22, 2017

கள்ளமிலாக் கண்ணனைக் காண் !!!


வெண்பாக் கொத்து
`````````````````````````````````
குறள் வெண்பா 
```````````````
கண்ணன் வடிவினைக் கண்ட விழிகளில்
கண்ணீர் பெருகிடும் காண்.


இன்னிசைச் சிந்தியல் வெண்பா.
````````````````````````````````
கண்ணன் குழலூதக் கன்றுடன் மாடுகளும்
பண்ணை மிகரசித்துப் பாலைச் சொரிந்தபடி
கண்மூடிக் கேட்டிடும் காண் .


நேரிசைச் சிந்தியல் வெண்பா
````````````````````````````````
கண்ணன் வரவிற்குக் காத்திருக்கும் கோபியர்
எண்ணம் முழுதும் இனித்திருப்பான் - ஒண்டொடியாள்
கண்களில் காதலைக் காண் .



இன்னிசை வெண்பா
```````````````````````
கண்ணன் குழலோசை காற்றில் மிதந்துவரப்
பண்ணினைக் கேட்டுப் பரவசத்தால் நெக்குருகி
வண்ணமலர் சூடிய வஞ்சியவள் வாய்திறந்து
கண்ணா வெனவழைப்பாள் காண் .
நேரிசை வெண்பா
```````````````````````````
கண்ணன் கவர்ந்தான் கருமை நிறத்தினால்
வண்ணக் கனவில் வளையவந்தான் ! - புண்ணான
உள்ளத்தைத் தேற்றி உவகை யளித்திடும்
கள்ளமிலாக் கண்ணனைக் காண் .
இன்னிசைப் பஃறொடை வெண்பா
``````````````````````````````````````````````````
கண்ணன் வரவுக்காய்க் கன்னிமனம் காத்திருக்கத்
தண்டை யொலிகொஞ்சத் தண்ணளி சிந்திடப்
புல்லாங் குழலூதிப் பூரிக்கச் செய்பவன்
முல்லைச் சிரிப்போடு முத்தாய் ஒளிர்பவளின்
பின்னல் சடையைப் பிடித்திழுத்து வம்புசெயும்
கன்னல் குறும்பினைக் காண் .
நேரிசைப் பஃறொடை வெண்பா
```````````````````````````````````````````````
கண்ணன் புரிந்திடும் கள்ளத் தனத்தினை
எண்ண உளம்பூக்கும் இன்பத்தில் !- வெண்ணையை
உண்டதும் ஓடி ஒளிந்திடுவான்! அன்னையைக்
கண்டதும்வாய் பொத்துவான் கைகளால் !- கண்மணியே
மண்ணைத்தின் றாயா மகனே எனக்கேட்டால்
கண்ணனவன் வாய்பிளப்பான் காண்.

Friday, February 17, 2017

அந்தாதி - இயற்கை !

முகிலுக்குள் முகம்மறைத்து முழுநிலவும் விளையாடும் 
விளையாடும் வேளையிலே விண்மீன்கள் விழிசிமிட்டும் 
விழிசிமிட்டும் ஒளிகண்டு வெட்கத்தில் மதிசிலிர்க்கும் 
மதிசிலிர்க்கும் எழில்தனிலே மனம்மயங்க கவிபிறக்கும் !

கவிபிறக்க அதைப்படித்துக் கன்னிமனம் கனிந்துவிடும் 
கனிந்துவிடும் காதலினால் கனவுகளும் மிதந்துவரும் 
மிதந்துவரும் தென்றலிலே மெலிதான மணம்பரவும் 
மணம்பரவ இருக்குமிடம் மலர்வனமாய் அழகாகும் !

அழகான மலையினிலே அருவிகளும் பெருகிவரும் 
பெருகிவரும் நதியலையில் பிரியமுடன் கயல்துள்ளும் 
கயல்துள்ளும் விழியிரண்டும் காந்தமென கவர்ந்துவிடும் 
கவர்ந்துவிடும்  வான்மழையும் கலந்துவிடும் கடலினிலே !

கடலினிலே குளித்தெழுந்து கதிரவனும் தினமுதிக்கும் 
தினமுதிர்த்து மறைந்துவிட திங்களதும் இருள்விலக்கும் 
இருள்விலகும் ஒளியினிலே இயற்கையுந்தான் மிகவழகே 
மிகவழகாய்த்  திரைவிலக்கி மிளிரவைக்கும்  வெண்முகிலே !

காதல் சுவாசம் .....!!!




விழிகளில் விழுந்து மனத்தினுள் நிறைந்து 
***விருட்சமாய்க் காதலும் வளரும் !
மொழிகளும் மறந்த இதயமும் சிலிர்க்க 
***முகமதும்  நிலவென ஒளிரும் !
பொழிந்திடும் மழையாய்ப் புத்துணர் வூட்டிப் 
***புதுமைகள் புரிந்திடும் நிதமும் !
எழிலுற விளங்கும் இளமையின் துடிப்பில் 
***எழுதிடும் கவிதையில் உருகும் !

பளிங்கென மின்னும் கதிரொளி தன்னில் 
***பனித்துளி சிரிப்பதைப்  போலே
களிப்புறும் நெஞ்சம் கவலைக ளின்றிக்
***கற்பனைச் சிறகினை விரிக்கும் !
ஒளிர்ந்திடும் சுடரின் அழகினை யொப்ப 
***உளமதில் பொன்னொளி பரவும் !
தளிரெனத் துளிர்த்துக் கனிந்திடும் காதல் 
***தனிமையில் கனவினில் மிதக்கும் !  

காதலில் திளைக்கும் காளையர் உள்ளம் 
***கன்னியின் பார்வையை விரும்பும் !
காதலைச் சொல்ல வார்த்தைகள் வற்றக்
***கண்களால் காவியம் பேசும் !
காதலே சுவாசக் காற்றெனக் கொண்டு 
***காலமும் வாழ்ந்திடத் துடிக்கும் !
காதலின் நேசம் கலங்கரை விளக்காய்க்
***காட்டிடும் வழியினை நன்றே !!!

சியாமளா ராஜசேகர் 

ஓலக்குடிசையில ...!!!



ஈசான மூலையில கார்மேகம் திரண்டிருச்சு
பாசாங்கு செய்வதுபோல் பால்நிலாவும் மறைஞ்சிருச்சு 
வீசாத காத்தெல்லாம் வேகமாக அடிச்சிருச்சு 
பேசாத வானத்தில் இடிமின்னல் வெட்டிருச்சு !

மழைமுத்தம் தந்ததுபோல் மண்ணெல்லாம் சிலிர்த்திருச்சு 
உழைப்போரின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் மலர்ந்திருச்சு 
தழைத்தபயிர் தலைவணங்கி சொட்டசொட்டக் குளிச்சிருச்சு 
அழைக்காம வந்தமழை அலுப்பெல்லாம் விரட்டிருச்சு !

ஓலக்குடிசை நனைஞ்சிருச்சு ஒழுகிவீடும் ஈரமாச்சு 
பால்குடிக்கும் புள்ளகூட மழையிலதான் ஆடப்போச்சு 
தாலாட்டு பாடாம தாய்மனசு ரசிச்சிருக்கு 
சீலதலைப்பில் துவட்டிவிட வரும்வரையில் காத்திருக்கு !

கூடிப்பாடிக் குளிச்சதில பிள்ளைமனசும் குளிர்ந்திருச்சு 
ஓடியாடும் பருவத்துல அடைமழையும் சுகமாச்சு  
மாடிவீட்டில் கூடயிந்த மனநிறைவு இருக்காது 
கோடிவிலை கொடுத்தாலும் இந்தசுகம் கிடைக்காதே !

சியாமளா ராஜசேகர் 

Thursday, February 16, 2017

முத்தாகத் திரண்டிருக்கும் ....!!!



அந்தாதி ...!!
```````````````````
மூடியுள்ள விழியினிலே முத்தாகத் திரண்டிருக்கும் 
திரண்டிருக்கும் கண்ணீரும் சிந்திடவே காத்திருக்கும் 
காத்திருந்த கன்னிமனம் காதலனைத் தேடிநிற்கும் 
தேடிநிற்கும் பொழுதினிலே தேன்மலரும் உளங்கவரும்
உளங்கவர்ந்த காரணத்தால் உவகைபெருகும் இதயத்தில்
இதயத்தில் மதுசுரக்கும் இனிமையிலே முகம்சிவக்கும்
முகம்சிவந்த கவினழகை முகில்கண்டு வியந்திருக்கும்
வியந்திருக்கும் அவ்வேளை மெல்லிடையாள் விழிமூடும் !

வீணையில் விரல்களாய் எனைமீட்டு....!!



மோகனைப் புன்னகை வீசிடும் நிலவே 
***முத்தொளிர் கண்களால் கதைபேசு ! 
தேகமும் சிலிர்த்திடத் தென்றலின் சுகத்தில் 
***சில்லென நீயொரு கவியெழுது ! 
மேகமும் திரண்டிட மழைவரும் பொழுதில் 
***மெல்லிதழ் சிவந்திடக் கனிவோடு 
வேகமாய்க் கைவளைக் குலுங்கிட அணைத்து 
***வீணையில் விரல்களாய் எனைமீட்டு ! 

மார்கழிக் குளிரினைத் தாங்கிட முடியா 
***மன்னனின் நிலைதனை உணராயோ ? 
போர்வையுள் இருமனம் பேசிடும் தருணம் 
***பொங்கிடும் உணர்வினை அறிவாயா ? 
மார்பொடு தழுவிட ஏங்குதென் இதயம் 
***மங்கையே அணைத்திட மறுப்பாயா ? 
பார்வையால் கொஞ்சிடும் பாவையே எனக்குப் 
***பஞ்சணை சுகமதைத் தருவாயா ? 

கொண்டையில் மல்லிகைப் பூச்சரம் மணக்கக் 
***கொஞ்சிட உள்ளமும் துடிக்கிறதே ! 
வண்டென விழிகளின் வசியமும் கவர 
***வஞ்சியுன் அழகினை ரசிக்கிறதே ! 
பெண்மயில் அருகினில் இருக்கையில் மனமும் 
***பெருமையில் துள்ளியே குதிக்கிறதே ! 
கண்மணி காதலால் உருகிடு மெனக்கு 
***கருணையாய்க் கடைக்கண் திறப்பாயே !

Saturday, February 4, 2017

தென்றலேநீ போய்ச்சொல்லு !!!

ஓடுகிற தண்ணியில ஓலஒன்னு நாஅனுப்ப 
காடுவழி போறபுள்ள கையிலதான் கெடச்சிருச்சா?
பாடுகிறேன் இக்கரையில் பாட்டொனக்குக் கேக்கலையா?
தேடுகிறேன் என்னுசுரத் தென்றலேநீ போய்ச்சொல்லு !

சந்தைக்கு நான்போறேன் சம்மதமா கூடவர
அந்திசாயும் பொழுதினிலே அவசரமா திரும்பிடலாம் !
தொந்தரவா நெனைக்காதே தூக்கமில்ல வொன்நெனப்பில் 
வெந்துமனம் சாகிறனே வேதனயத்   தீர்ப்பாயோ? 

கூடிவரும் மேகமெல்லாம் கூராப்பு போட்டிருச்சே 
வாடிபுள்ள  வெரசாக மழபெஞ்சா நனஞ்சிடுவ! 
ஓடிவந்து மச்சான உரிமையோடக் கட்டிடடி 
சோடிபோட்டுச் சுத்திடலாம் சொக்கவச்ச சுந்தரியே !