#சிற்றிலக்கியப்_படையல்
`````````````````````````````````````````
பல்சந்த மாலை
**********************
கடவுள் வாழ்த்து !
``````````````````````````````
தேனைவிடத் தித்திக்கும் தீந்தமிழில் நான்பாட
ஆனைமுக! தந்திடுவாய் ஆசிகளைப் ! - பானை
வயிற்றனே! பல்சந்த மாலை யியற்ற
உயிரொடுநீ மெய்யாய் உலவு .
நூல் ! (இயற்கை)
********
1. அறுசீர் விருத்தம் ( மா மா காய் மா மா காய் )
உலவும் மேகம் வான்வெளியில்
***உள்ள மள்ளும் வனப்பினிலே !
மலரும் விண்மீன் கணக்கின்றி
***மாலைப் பொழுது சாய்ந்துவிட்டால் !
நிலவும் மெல்ல முகங்காட்டி
***நிகழ்த்திக் காட்டும் விந்தைகளை !
புலரும் காலைப் பொழுதினிலே
***புதிதாய் உதிப்பான் கதிரவனே !
2. அறுசீர் விருத்தம் ( விளம் மா தேமா விளம் மா தேமா )
கதிரவன் கிழக்கில் தோன்றக்
***காரிருள் மறைந்து போகும் !
புதியதாய்ப் பிறந்த நாளும்
***பொலிவுடன் கடந்து செல்லும் !
உதித்ததைக் கமலம் கண்டே
***உவப்புடன் சிரித்துப் பூக்கும் !
நதியலை ஒளிர்ந்து மின்ன
***நளினமாய் நீந்தும் மீனே !
3.எழுசீர் விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் விளம் மா )
மீன்களுந் துள்ளி யாடிடு மாற்றில்
***வெள்ளலை தவழ்ந்திடு மழகாய் !
மான்களும் நீரைப் பருகிட அங்கு
***வந்திடும் பிணையுட னிணைந்தே!
தேன்மது வுண்ண வண்டினம் சுற்றித்
***தேடிடும் செடியினில் பூவை !
கான்வளர் மரத்தின் கருங்குயி லோசை
***காதினில் ஒலித்திடும் இனிதே !
4. எண்சீர் விருத்தம் ( காய் காய் காய் மா - அரையடிக்கு )
இனிதான மணங்கமழும் சோலையிலே பூக்கள்
***இளங்காற்றின் தாலாட்டில் தலையசைத்தே ஆடும் !
கனிசுமந்த மரக்கிளையில் கிளியமர்ந்து கொய்ய
***கடித்திட்ட சிவப்பலகு நெஞ்சத்தை யள்ளும் !
பனித்துளியும் மலரிதழில் அசையாமல் நின்றே
***பருவமங்கை முகப்பருபோல் முத்தாக மின்னும் !
தனிமையிலே யிருந்தாலும் தவித்திடுமோ உள்ளம்
***தாமரையாய்ப் பூத்திருக்கும் பேரெழிலைக் கண்டே !
5. எண்சீர் விருத்தம் ( காய் காய் மா தேமா - ( அரையடிக்கு )
கண்டதுமே கடலலைகள் கவரு முள்ளம்
***காற்றுவந்து வருடிவிட்டுக் காதல் சொல்லும் !
மண்குவித்து வீடுகட்டும் மழலைச் செல்வம்
***மழைவந்து கலைத்துவிட்டால் வருமோ தூக்கம் ?
வெண்ணிலவு வரும்நேரம் வெள்ளி பூக்கும்
***வெள்ளளையும் துள்ளிவந்தே எட்டிப் பார்க்கும் !
வெண்முகிலும் வானத்தில் விரைந்தே ஓடும்
***விளையாடத் துணைதேடும் விரட்டிச் சென்றே !
6. அறுசீர் விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் காய் )
சென்றதை யெண்ணிச் சிலிர்த்திடும் நெஞ்சம்
***தேன்மழைச் சாரலிலே !
தென்றலும் தழுவ தேகமும் குளிர்ந்து
***செவ்விதழ் துடித்திடுதே !
முன்பனிக் காலம் முகிலினம் கூட
***முகத்திரை போட்டிடுதே !
பொன்னிற வானம் புதுவடி வோடு
***பூத்திடும் பொலிவுடனே !
7. அறுசீர் விருத்தம் ( காய் காய் காய் காய் மா தேமா )
பொலிவுடனே மலைமுகட்டில் பொங்கிவிழும் வெள்ளருவி
***போதை யூட்டும் !
ஒலியெழுப்பிக் குதிபோட்டே ஓடிவந்து தலைநனைத்தே
***உள்ளம் கிள்ளும் !
மெலிதாகச் சிந்திடினும் மேனியெங்கும் தாளமிட்டு
***மீட்டும் கானம் !
வலிநீங்கிப் புத்துணர்வில் மனம்களித்துக் கூத்தாடும்
***மாயம் என்னே ?
8. வெண்டளையான் இயன்ற
எண்சீர் ஆசிரிய விருத்தம்
என்னே அழகிது என்றெண்ணி நெஞ்சம்
***இறைவன் படைப்பாம் இயற்கையினைப் போற்றும் !
நன்றி யுரைத்திட நல்லிதயத் தோடு
***நலமே விளைந்திட ஞாயிற்றை வேண்டும் !
மின்னும் ஒளியுடை வெண்ணிலவைக் கண்டு
***வியந்திட விண்மீன் விழிசிமிட்டிக் காட்டும் !
இன்பம் கொடுக்கும் இயற்கைவர மென்றே
***எண்ணி மகிழ்வதற்(கு) ஈடுண்டோ இங்கே !
9. எழுசீர்ச் சந்த விருத்தம்
இங்கி ருந்த யின்ப முந்த என்றன் கண்கள் பொங்குதே
தங்கு முள்ளம் சிந்து மன்பில் சந்த தம்ம கிழ்ந்ததே
பங்க மின்றி வண்ண மெட்டில் பட்டு நெஞ்சம் கொஞ்சுதே
திங்க ளென்னை வட்ட மிட்டு சிந்தை யுள்நி றைந்ததே !
10. பதின்சீர் விருத்தம் (காய் காய் காய் மா தேமா - அரையடிக்கு )
நிறைந்தமனத் தால்வாழ்த்தி நிறைவுசெய்வேன் சந்த மாலை
***நினைக்கும்நல் லனயாவும் நிறைவேற அருள்வாய் தேவே !
இறையருளால் யாம்பெற்ற இன்பத்திற் கீடே இல்லை
***இயற்கையினை விரும்பாதோர் இவ்வுலகில் யாரு மில்லை !
பிறையழகும் கவின்கடலும் பிறவனைத்தும் பேறாய்ப் பெற்றோம்
***பிரியமுடன் போற்றிவந்தால் பெரிதாகக் கவலை யில்லை !
குறைவின்றி வளமோடு குவலயத்தில் நாமும் வாழக்
***கொடுப்பினையாம் இயற்கையைப்போல் குளிர்விக்கும் சக்தி யுண்டோ ??
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment