மார்கழிக்கு விடைகொடுத்து மகிழ்வுடனே பூத்து
>>>மங்களங்கள் அருளிடவே தைமகளே வாராய் !
நேர்வழியைக் காட்டிடவே நிமிர்ந்தபடி நீயும்
>>>நீதியினை நிலைநாட்ட நித்திலமாய் வாராய் !
சீர்மல்கும் சிங்காரத் தமிழ்மரபைக் காக்கச்
>>>சித்திரமாய் நடைபோட்டுச் சிறப்பிக்க வாராய் !
ஏர்பிடிக்கும் நல்லுழவர் வறுமைநிலை தீர்த்தே
>>>ஏற்றமிகு வாழ்வளிக்க ஏந்திழையே வாராய் !
விவசாயி துயர்துடைத்து வேளாண்மை ஒங்க
>>>விடியலினை வழங்கிடவே விரைந்தேநீ வாராய் !
கவலையெல்லாம் கழித்துவிட்டுக் களிப்புதனைக் கூட்டக்
>>>கற்பகமாய்க் கண்மலர்ந்து கனிவோடு வாராய் !
புவனமெங்கும் இன்பநிலை பொங்கிடவே நீயும்
>>>புதுயுகத்தைக் காட்டிடவே பொற்புடனே வாராய் !
தவறான எண்ணங்கள் தலைதூக்கக் கண்டால்
>>>தவிடுபொடி யாக்கிடவே தைமகளே வாராய் !
வன்முறைகள் தோற்றோடி வருநாட்க ளெல்லாம்
>>>வண்ணமுற கவிபாடி வடிவுடனே வாராய் !
கன்னியரின் இதயத்தில் சுபராகம் மீட்டிக்
>>>கனவெல்லாம் ஈடேற்ற திருமகளே வாராய் !
புன்முறுவல் பூத்தபடி புதுமைகளைச் செய்ய
>>>பொன்மகளே புனிதமுடன் பொலிவோடு வாராய் !
தன்மையுடன் தமிழரின பண்பாட்டின் மேன்மை
>>>தரணியிலே தழைத்தோங்கத் தைமகளே வாராய் ....!!!
No comments:
Post a Comment