Pages

Thursday, July 4, 2019

இறையவன் விரும்புவது

இறையவன் விரும்புவது ...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மாலையிலே பூக்கும் மணமிக்க மல்லிகையோ
சோலை மதுமலரோ தூயவன்தாள் சேருதற்கு ?
சோலைமல ரேதுமில்லை சுத்தமெய்யன் பால்மலரும்
கோலமனப் பங்கயமே கோமான் விரும்புவது !!
செம்மரையோ வண்ணமிகு செங்கழுநீர்ப் பூதானோ
பெம்மான் அடியடைய பேறுபெற்ற தெவ்வகையோ ?
வெம்புமெந்த பூவுமில்லை வேண்டியிரு கைகூப்பி
நம்பிக்கைக் கொள்வதுவே நாதன் விரும்புவது !!
மஞ்சள்கொன் றைமலரோ மண்ணிலிலாக் கற்பகமோ
வஞ்சமிலா வேந்தற்கு வாய்த்தமலர் இங்கெதுவோ ?
மஞ்சள் மலரல்ல வானகத்துப் பூவுமல்ல
விஞ்சுமன்பில் கண்பொழிவே மேலோன் விரும்புவது !!
கள்ளங் கபடமின்றிக் கையிரண்டைத் தான்கூப்பி
உள்ளத்தில் அன்பொழுக ஒப்பில்லாக் கோமானைத்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேம்பி யழுதுதொழ
வெள்ளைமனத் தோடு வினைதீர்க்க வந்திடுவான் !!
விதவிதமாய்ப் பூக்கள் விரும்புபவன் இல்லை
பதமலரைப் போற்றிப் பணிவோடு நித்தம்
இதயமலர் கொய்தே இறைவனுக்குச் சாற்ற
முதல்வனவன் முப்போதும் முன்னின்று காத்திடுவான் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment