Pages

Friday, April 10, 2015

பங்காளியும் பகையாளியாய் மாறலாமோ .....???


அசையா சொத்துக் காசைப்பட்டு
அன்பு மனதை அடகுவைத்து
பங்கு பிரித்திடும் வேளையிலே 
பங்காளி பகையாய் மாறலாமோ ...??
ஏறக் குறைய இருந்தாலென்ன
ஏட்டிக்குப் போட்டி தேவைதானோ ?
ஏற்றுக் கொள்ளும் மனமிருந்தால்
ஏற்றமே என்றும் காண்பீரே .....!!
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே
ஒருகொடியில் பூத்த முல்லைகளே
ஒற்றுமை யின்பலம் உணர்ந்திடுவீர்
ஒத்த மனமுடன் வாழ்ந்திடுவீர் ....!!
உலகில் எதுவும் நிலையல்ல
உறவின் புனிதம் உணர்வீரே
உள்ளன் புடனே செயல்பட்டு
உள்ளதை பங்கிட்டுக் கொள்வீரே ....!!
பாகப் பிரிவினை செய்கையிலே
பந்தப் பிரிவினை ஆகலாமோ
பிறக்கையிலென்ன கொண்டு வந்தோம்
போகையிலென்ன கொண்டு செல்வோம் ?
விருப்பு வெறுப்பு புறந்தள்ளி
விட்டுக் கொடுக்கப் பழகிவிட்டால்
விடைபெற் றிடுமே விசனங்கள்
வீசும் வசந்தம் வாழ்க்கையிலே ....!!

No comments:

Post a Comment